Tamil Bayan Points

55) 67 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

67 வது வசனம்

67. நாம் நாடியிருந்தால் இருந்த இடத்திலேயே அவர்களை உருமாற்றி இருப்போம். அதனால் அவர்கள் (முன்னே) செல்ல இயலாது. பின்னேயும் செல்ல மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 36 : 67.)

உருமாற்றம் குறித்த விளக்கம்

பொதுவாக உருமாற்றம் என்பது ஓர் தண்டனையாகும். மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டது போன்று அல்லாஹ் சிலரை உருமாற்றிவிட்டால் அதன் பிறகு எதையும் அவர்களால் அறியமுடியாது. இறைக்கட்டளையை மீறிய ஒரு கூட்டத்திற்கு அல்லாஹ் இதை தண்டனையாக வழங்கியுள்ளான்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர்.

அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.)” எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.

(அத்தியாயம் : 7 : 163,164,165,166.) 

சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்று இறைவனின் புறத்திலிருந்து அச்சமுதாயத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது. இறைவனின் கட்டளையை மீறிய காரணத்தால் தண்டிக்கும் விதமாக குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்பட்டார்கள் என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.

உருமாற்றம் செய்யப்பட்டோருக்கு சந்ததி உண்டா?

அவ்வாறு உருமாற்றம் செய்யப்பட்டவர்களிடையே சந்ததி பெருகியதா? தற்போதுள்ள பன்றிகளிலும் குரங்குகளிலும் அவர்கள் உள்ளார்களா? என்ற கேள்வி எழலாம். பொதுவாக உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டால் அவர்களுக்கு சந்ததிகள் ஏற்படாது. இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததி களையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன” என்று சொன்னார்கள்.

நூல் முஸ்லிம்-5176

எனவே இன்றைக்கு உள்ள பன்றிகளிலும் குரங்குகளிலும் உருமாற்றம் செய்யப்பட்டவை இல்லை. இவ்வாறு தான் நாடினால் உருமாற்றம் செய்திருப்பேன் என மக்களுக்கு இறைவன் எச்சரிக்கை விடுப்பதே 67 வது வசனம்.