Tamil Bayan Points

53) 65 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

65 வது வசனம்

65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

அல்குர்ஆன் 36 : 65  

மறுமையில் அல்லாஹ்வின் விசாரணை முறையை இவ்வசனம் விளக்குகிறது. யாரும் தங்கள் நாவால் பதிலளிக்க முடியாது. மாறாக செயலாற்றிய உறுப்புகளே பதிலளிக்கும். வாய்க்கு முத்திரை இடப்படும். இதனால் மனிதர்கள் தங்கள் உறுப்புகளிடம் கேள்வியெழுப்புவார்கள்.

“எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். “ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள் !” என்று அவை கூறும்.

(அல்குர்ஆன் : 41 : 21.) 

இதை பற்றி நபி (ஸல்) அவர்கள் விரிவாக விளக்குகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமைநாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேக மூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி,உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா?உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்க வில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம்” என்பான்.

இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை” என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான். பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த்தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா?

குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம், என் இறைவா!” என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?”என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை” என்பான்.

இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான். பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய்தேன்” என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்” என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்” என்று கூறுவான். அந்த மனிதன், தனக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும்.

அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து “பேசுங்கள்” என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.

ஸஹீஹ் முஸ்லிம்-5678.

உறுப்புகள் மட்டும்தான் மறுமையில் பேசுமா?

மேற்கண்ட 65வது வசனத்தில் வாய்களுக்கு முத்திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக சில வசனங்கள் உள்ளது.

66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

(அத்தியாயம் : 33 : 66.) 

இது போன்று மேலும் சில வசனங்களில் மனிதர்கள் தங்கள் நாவாலும் பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே? வாய்களுக்கு பூட்டு போடப்பட்ட பிறகு எப்படி வாயால் பேசுவார்கள்? இது முரண்பாடாக உள்ளதே என்று சிலருக்கு தோன்றலாம். எனினும் இதற்கு தெளிவான பதில் உண்டு.

யாசீன் அத்தியாயத்தில் உள்ளது போன்று வாய்க்கு முத்திரையிடப்படுவது விசாரணையின ் போது மட்டும்தான். மற்ற நேரங்களில் அல்ல. ஏனெனில் அவனுடைய உறுப்புகளே அவனுக்கெதிராக சாட்சியம் சொல்வதை அவன் மறுக்கமுடியாது என்பதால் விசாரணையின் போது இந்த ஏற்பாடு. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் அவன் வாய் திறந்து பேசுவான்.

மறுமையில் ஏடு வழங்கப்படும் போது புலம்புதல்

மறுமையில் சொர்க்கமா? நரகமா? என தன்னுடைய முடிவை தெரிவிக்கும் ஏடு தனக்கு வழங்கப்படும் போது மனிதன் வாய் திறந்து பேசுவான்.

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் “எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே! எனக் கூறுவான்.

(அல்குர்ஆன் : 69 : 25, 26, 27, 28, 29.) 

எனவே இது போன்ற நேரங்களில் மனிதனால் பேச இயலும் விசாரணையின் போதுதான் வாய்க்கு முத்திரையிடப்படும். இவ்விரண்டிற்குமிடையில் எந்த முரண்பாடும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.