Tamil Bayan Points

52) 63, 64 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

63, 64 வது வசனம்

63. இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம்.

64. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!” என்று கூறப்படும்.

அல்குர்ஆன் : 36 : 63,64

நரகத்தை பற்றிய எச்சரிக்கை

63 வது வசனத்தில் நரகத்தை பற்றி நினைவூட்டுகிறான்.

சொர்க்கத்தின் இன்பங்களை இதற்கு முந்தைய சில வசனங்களில் கூறிவிட்டு மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் நரகத்தை பற்றியும் எச்சரிக்கை செய்கிறான்.

நரக நெருப்பு மிகவும் கடுமையானது. மறுமையில் இறைநிராகரிப்பாளர்களை அதில் வேதனை செய்வான்.

அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

(அல்குர்ஆன் : 104 : 4,5,6,7,8,9.) 

நரக நெருப்பின் இத்தகைய கடுமையை கண்டு குற்றவாளி அதிலிருந்து தப்பிக்க விரும்புவான். அதற்காக தன் மனைவி, பிள்ளை என உலகில் உள்ள அனைவரையும் ஈடாக கொடுக்க முன்வருவான். எனினும் அவனால் தப்பிக்க முடியாது.

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.

(அல்குர்ஆன் 70 : 11 முதல் 18 வரை.) 

மேலும் நரகிலுள்ளவர்களுக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக கொதிக்கும் நீர் வழங்கப்படும். அது அவர்களுடைய குடல்களை துண்டாக்கிவிடும்.

(இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?

(அல்குர்ஆன் : 47 : 15.)

மேலும் ஜக்கூம் எனும் கொதிக்கும் செம்பை போன்ற மரத்தையும் உண்ண கொடுக்கப்படும்.

ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும். உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.

(அல்குர்ஆன் : 44 : 43,44,45,46 .) 

மேலும் கொதிக்கும் செம்பும் குடிப்பதற்கு வழங்கப்படும். அதை அருகில் கொண்டு செல்லும் போதே அவர்களுடைய முகம் கருகிவிடும்.

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன் : 18 : 29.) 

நரகத்தில் கொடுக்கப்படும் குறைந்தபட்ச தண்டனையை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதுவே இந்த உலகத்தில் தாங்க இயலாத பெரும் தண்டனையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-6562

சொர்க்கத்து இன்பங்களை நாம் நினைத்தால் நல்லறம் செய்வதில் ஆர்வம் ஏற்படும். மேலும் நரகத்து வேதனைகளை நினைத்தால் தீமை செய்வதிலிருந்து அச்சம் ஏற்படும்.

இதனால் நபி (ஸல்) அவர்கள் அதிகமான நேரங்களில் நபித்தோழர்களுக்கு மறுமையை பற்றி நினைவூட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன்.

அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?”என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம்.(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5305.

தர்மம் செய்து நரகை விட்டு தப்பித்து கொள்வோம்!.

இத்தகைய கொடூரமான நரகிலிருந்து எப்படியாவது நாம் தப்பிக்க முயற்சிக்க வேண்டும்.

சிறிதளவு தர்மம் செய்தாவது நரகைவிட்டு தப்பித்து கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு (மீண்டும்) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன் சொல்லைக்கொண்டேனும் (தப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

நூல் புகாரி-6563

இது மட்டுமின்றி குர்ஆன் ஓதுதல் போன்ற பல நல்லறங்களை செய்து நன்மையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.