Tamil Bayan Points

53) இன வெறி

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

இன வெறி

குருட்டுக் கொடியின் கீழ் இன வெறிக்கு அழைப்பு விடுக்கவோ இன வெறிக்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி)

நூல்: முஸ்லிம் – 3770

விளக்கம்:

அறியாமைக் கால மக்களிடம் இருந்த மிகப் பெரிய பாவமான காரியம் இன வெறியாகும். தான் உயர்ந்தவன், தங்கள் குலம் உயர்ந்தது தன் குலத்தைச் சார்ந்தவன் தவறு செய்திருந்தாலும் அவனுக்காக நியாய அநியாயம் பார்க்காமல் போராடுவது. அதற்காகப் பலரைக் கொல்வது என்பது அவர்களிடம் ஊறிப் போன செயல்பாடாகும். இறையச்சத்தின் மூலமே ஒருவன் உயர்வடைய முடியும், குலத்தாலோ அல்லது நிறத்தாலோ அல்லது மொழியாலேோ ஒருவன் இன்னொருவனை விட உயர்ந்து விட முடியாது. என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

யாராவது இனவெறிக்காக மட்டும் அல்லது இனத்திற்காக நியாயமின்றிப் போர் செய்து. அதில் இறந்து விட்டால் அவர் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்றவராக மரணிக்கவில்லை என்று நபிகளார் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே யாரும் இனத்தை வைத்து நிறத்தை வைத்து, மொழியை வைத்து ஆட்டம் போடக் கூடாது.