Tamil Bayan Points

52) இறைவனின் வெறுப்புக்குள்ளானோர்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

இறைவனின் – வெறுப்புக்குள்ளானோர்

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ: مُلْحِدٌ فِي الحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ

மனிதர்களிலேயே அல்லாஹ்வின் கடுமையான வெறுப்பிற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி – 6882

விளக்கம்:

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்த பின்னர் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அறியாமைக் காலத்துப் பழக்க வழக்கத்தை விட்டுவிட்டு தூய இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இன்று. இஸ்லாத்தில் இருந்து கொண்டே மார்க்கத்திற்கு முரணான காரியங்களையும் மூட நம்பிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அறியாமைக் காலத்துப் பழக்கமான நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல் போன்ற காரியத்தை இஸ்லாத்தில் இருந்து கொண்டே நடைமுறைப்படுத்துகின்றனர்.

இது போன்று ஜோசியரிடம் சென்று குறி பார்ப்பது அறியாமைக் காலப் பழக்கமாகும். இதையும் இன்று செயல்படுத்துகின்றனர். நபிகளார் காலத்தில் மண்ணில் போட்டுப் புதைக்கப்பட்ட இந்தக் காரியங்களைத் தோண்டி எடுத்து நடைமுறைப்படுத்துபவர்கள் அல்லாஹ்வின் கடும் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.