Tamil Bayan Points

50) 60, 61 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

60, 61 வது வசனம்

60, 61. “ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?”

அல்குர்ஆன் 36 : 60,61

இவ்வசனத்தில் கூறப்படும் உறுதிமொழியை முந்தைய சில வசனங்களில் நாம் விளக்கியுள்ளோம். முதல் மனிதராகிய ஆதம் நபியின் முதுகு தண்டில் நாம் இருந்தபோதே நம்மிடம் இந்த உறுதிமொழியை அல்லாஹ் எடுத்துவிட்டான்.

மேலும் இவ்வசனத்தின் துவக்கத்தில் “ஆதமுடைய மக்களே!” என்றழைப்பதின் மூலம் இவ்வுலக மக்களனைவரும் ஒருவரின் மக்கள்தான் என்பதை உணர முடிகிறது. இதன் மூலம் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது.

முஸ்லிமல்லாத பலர் தீண்டாமையை ஒழிப்பதற்கு பல வழிகளை கையாண்டார்கள். பேருந்துகளிலும் பொது சபைகளிலும் சாதி வேறுபாடின்றி ஒன்றாக அமரவேண்டும் என்று கூறினார்கள்.

மற்ற சிலர் “அனைவருக்கும் சிகப்பு நிற இரத்தம் ஓடுகிறது. எனவே நாம் சமமானவர்கள்” என்றும் மற்ற சிலர் “நாம் ஒரே மொழி பேசுவதால் சமமானவர்கள்” என்றும் கூறி சமத்துவத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். எனினும் இவ்வாறு கூறியதன் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. மக்களுடைய மனங்களிலிருந்து சாதி வேறுபாட்டை முழுவதுமாக அகற்ற முடியவில்லை.

ஆனால் இஸ்லாம் முஸ்லிம்களிடையே தீண்டாமையை அடியோடு அழித்துள்ளது. இதனால் முஸ்லிம்கள் சகோதரர்களாக திகழ்கிறார்கள். தங்கள் முன்னோர்கள் எந்த சாதியை சார்ந்தவர்கள் என்பதை கூட அறிந்திடாத அளவிற்கு சாதி பேதத்தை மறந்து சமத்துவமாக வாழ்கிறார்கள். தாழ்ந்த சாதியினர்களாக கருதப்படுவோர் தன் மீது உரசிவிடக்கூடாது என்று நினைக்கும் மக்களுக்கு மத்தியில் தொழுகையில் தனக்கு அருகில் நின்றவர் யார் என்பதையும் அறியாதளவிற்கு இனம் புரியாத சகோதரத்துவத்தை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் நாம் அனைவரும் ஆதமுடைய மக்களே என்ற குர்ஆன் ஏற்படுத்திய உணர்வே காரணமாகும். நாமனைவரும் ஒரு தாய் தந்தையின் மக்கள் என்பதை எப்போதும் நினைவில் வைக்குமளவு ஆதமுடைய மக்களே எனும் அல்லாஹ்வின் இத்தகைய அழைப்பு அமைந்திருக்கின்றது.

61 வது வசனம்

60,61. “ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?”

அல்குர்ஆன் 36 : 60,61

இவ்வசனத்தில் ஷைத்தானை வணங்காதீர்கள் என்று மனிதர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான். இதற்கு நேரடியாக ஷைத்தானை வணங்காதீர்கள் என்று பொருள் அல்ல. மாறாக ஷைத்தானுடைய தூண்டுதலால் ஏற்படுகின்ற இணைவைப்பு காரியங்களை செய்யாதீர்கள் என்பது பொருளாகும்.

எவரும் நேரடியாக ஷைத்தானை வணங்கமாட்டார். சிலை வணக்கம், தனிமனித வழிபாடு போன்ற காரியங்களை செய்வதன் மூலம் ஷைத்தானுக்கு கட்டுப்படுகிறார். இதுவே ஷைத்தானை வணங்குதல் என்ற வார்த்தையில் சொல்லப்படுகிறது. இதை விளக்கும் வகையில் குர்ஆனில் சில வசனங்கள் உள்ளன.

மனோ இச்சையை கடவுளாக்குதல்

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?

(அல்குர்ஆன் : 25 : 43.) 

இவ்வசனத்தில் கூறுவது போன்று எவரும் மனோ இச்சையை கடவுளாக ஆக்கமாட்டார்கள்.

மாறாக அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காமல் தன் மனோ இச்சையின் பிரகாரம் செயல்படுவார்கள். மனதில் தோன்றியபடியே அனைத்து காரியங்களையும் செய்வார்கள், அல்லாஹ்விற்கு கட்டுபடுவதை விடுத்து இவ்வாறு மனோ இச்சைக்கு கட்டுப்படுவதால்தான் (அல்லாஹ்விற்கு பகரமாக) அதை கடவுளாக்காதீர்கள் என்று கூறப்படுகிறது. இது போன்றுதான் அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் ஷைத்தானுடைய தூண்டுதல்களுக்கு கட்டுப்படுவதால் ஷைத்தானை வணங்காதீர்கள் என்று கூறப்படுகிறது.

இப்ராஹீம் நபி தன் தந்தைக்கு செய்த உபதேசம்

யாசீன் அத்தியாயத்தின் 60வதுவசனம் போன்றே இப்ராஹீம் (அலை) அவர்களும் தன் தந்தைக்கு உபதேசம் செய்துள்ளார்கள்.

“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்.

(அல்குர்ஆன் : 19 : 44.) 

இப்ராஹீம் நபியின் தந்தை நேரடியாக ஷைத்தானை வணங்கவில்லை. மாறாக ஷைத்தானுடைய தூண்டுதலால் சிலைகளைதான் வணங்கினார். இதையே ஷைத்தானை வணங்காதீர்கள் என்று கூறப்படுகிறது. இது போன்றே யாசீன் அத்தியாயத்தின் 60 வது வசனத்தையும் விளங்கவேண்டும்.

ஷைத்தான் பகிரங்க எதிரி

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 60 வது வசனத்தின் இறுதியில் ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க எதிரி என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு எதிரான செயல்களையே செய்து நம்மை நரகில் தள்ள ஷைத்தான் பாடுபடுகிறான். இதை பின்வரும் வசனங்கள் விவரிக்கின்றன.

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

(அல்குர் ஆன் : 35:6.) 

இதற்காகவே ஷைத்தான் இறைவனிடம் அவகாசமும் கேட்டுள்ளான்.

“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

(அல்குர் ஆன் : 7:17.) 

எனவேதான் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஏகத்துவம் மட்டும்தான் நேர்வழி.

யாசீன் அத்தியாயத்தின் 61 வது வசனத்தில் என்னையே வணங்குங்கள் என்று கூறிவிட்டு “அதுவே நேரான வழி” என்று கூறுகிறான். இதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவது மட்டுமே நேர்வழி என்பதை அறியலாம்.