Tamil Bayan Points

5) முதல் இந்திய சுதந்திரப் போர்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

5) முதல் இந்திய சுதந்திரப் போர்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எது? முடிவு எட்டப்படாத முக்கியக் கேள்வி. பன்னெடுங்காலமாகவே பல்வேறு வகையான தாக்குதலுக்கு உள்ளான பூமி நமது பாரதம். இதில் எப்போது நடந்ததை முதல் போர் என்பது? யாரோடு நடந்ததைச் சொல்வது?

யார் செய்த போரை அந்த இடத்தில் வைப்பது? புதுக்கோட்டை மன்னர் செய்ததையா? புதுடெல்லி மஹாராஜா செய்ததையா? ஒரே வகையான எதிரிகளோடுகூட பத்து மன்னர்கள் போரிட்டிருக்கிறார்கள். அதுவும் பத்து வகையாக, பத்து இடத்திலே, பத்து பேருக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்தனியாக.

அதைவிடப் பெருங்குழப்பம், இந்தியப் போர் என்றால் முதலில் இந்தியா என்றொரு நாடு இருந்திருக்க வேண்டும், வரையறுக்கப்பட்ட எல்லை வேண்டும், அதற்கென்று ஒரு தலைமை வேண்டும், இராணுவம், நாணயம், கொடி, சட்டம் என சகலமும் வேண்டும் என்ன இருந்தது நம்மிடத்தில்? இந்தியா என்ற பெயர் உட்பட எதுவுமே இருக்கவில்லை.

கட்டக் கடைசியாக நம்மில் பலரும் சேர்ந்து போரிட்ட ஆங்கிலேயர்களுடனான சண்டையின் போது கூட இந்த அனைத்தும் நமக்கு வாய்த்திருக்கவில்லை. அவர்கள் நம்மிடத்தில் நாட்டை ஒப்படைத்து மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் நமக்கென்று தனித்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி 1950-ல் தான் இந்தியக் குடியரசு என்று அறிவித்தோம்.

எனவே எவ்வளவுதான் முயன்று முயன்று மூச்சிறைத்தாலும் முதல் இந்தியச் சுதந்திரப் போர் எது? என்ற கேள்விக்கு நாம் முடிவு காணப் போவதில்லை.

பிறகு ஏன் அதில் நின்று மல்லுக்கட்ட வேண்டும்? அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் அனைவரும் எந்தப் போரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ, அந்தப் போரையே நாமும் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று ஏற்றுக் கொள்வோம். அதிலிருந்தே நாமும் நமது பயணத்தைத் துவக்குவோம்.

1857 முதல் இந்திய சுதந்திரப் போர். அரசின் இராணுவமே அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி அரங்கேற்றிய அதிசயப் போர். ஆங்கிலேயர்களை அலற வைத்த வங்கத்துப் போர். சுதேசிச் சிப்பாய்களெல்லாம் சீறிப் படையெடுத்த சிறப்பான போர்.

கொஞ்ச காலமாகவே அதிகாரிகள் மீதான வெறுப்பு இந்திய சிப்பாய்களிடம் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.

நம்முடைய குடும்பம், மனைவி, மக்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த ஆங்கிலேயர்கள் நம்மை வாட்டி வதைக்கிறார்கள் என சிப்பாய்கள் குமுறிக் கொண்டிருந்த நேரத்தில் இங்கிலாந்தில் என்ஃபீல்டு (ENFIELD) என்ற இடத்தில், புதிய வகைத் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1856-ல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அந்தத் துப்பாக்கியில் தோட்டாவைப் பொருத்துவதற்கு முன் குண்டின் முனையைப் பல்லால் கடித்து இழுக்க வேண்டும். இழுபடும் இடத்தில் அந்த தோட்டாக்களைச் சுற்றி மிருகக் கொழுப்பு தடவப் பட்டிருக்கும்.

வேகமாக வழுக்கிக் கொண்டு தோட்டாக்கள் வெளியேற வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. (இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு பக் 154 – 155)

அந்தக் கொழுப்புதான் புரட்சிப் போரின் துவக்கப் புள்ளி. சிலர் அதைப் பன்றிக் கொழுப்பு என்றனர். வேறு சிலர் மாட்டுக் கொழுப்பு என்றனர். பன்றிக் கொழுப்பா? அப்படியானால் முடியவே முடியாது என்றனர் முஸ்லிம்கள். மாட்டுக் கொழுப்பை மனதால் கூட தொடமாட்டோம் என்றனர் இந்துக்கள்.

இந்துக்களும் முஸ்லிம்களுமாக நிறைந்திருந்த பட்டாளத்தில் அதிகாரி களுக்கும் வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் வளர்ந்தது. பிரச்சனை முற்றியது.

துப்பாக்கியைத் தொட மறுத்ததற்காக 85 வீரர்களுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்தது இராணுவ நீதிமன்றம். தீர்ப்பளிக்கப்பட்ட நாள் 1857ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி.(இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு பக் 154 – 155)

இந்தக் கைதுதான் புரட்சிப் பெருந்தீயைப் பற்ற வைத்த முதற்பொறி. அதுவரை ஆங்கிலேயர்களுக்கு அடங்கியிருந்தவர்கள் ஆர்ப்பரித்து எழுந்தார்கள். சாது மிரண்டாலே சரித்திரம் படைப்பான் என்றால் வீரன் வெகுண்டால் வீதிகள் தாங்குமா?

மறுநாள் காலையில் செய்தியைக் கேள்விப்பட்ட சிப்பாய்கள் சிங்கமெனச் சீறினர், பொறுக்க முடியாமல் பொங்கினர், வெடித்தது புரட்சி! மிரண்டது மீரத்!!. மிளிர்ந்தது இந்தியா!!.

சிறைச்சாலை தாக்கப்பட்டது. 49 முஸ்லிம்கள் 36 இந்துக்கள் என முன் தினம் கைது செய்யப்பட்டிருந்த 85 வீரர்களும் விடுவிக்கப்பட்டனர்.(இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு பக் 162 -163 Colonel, A.R.D Mackenzie, Mutiny Memories Allahabad, 1892 Vol 1)

ஆங்கிலேயர்களின் ஆலயம் முதல் மாளிகை வரை அனைத்திற்கும் தீ வைக்கப்பட்டது. தந்திக் கம்பிகள் அறுத்து எறியப்பட்டன. அதிகாரிகள் அனைவரும் ஓடி ஒளிந்தனர். எதிர்த்து நிற்கத் துணிவில்லாமல் பயந்து நடுங்கினர்;. கொட்டித் தீர்த்த பெரு மழையாய் எதிரிகளை வெட்டிச் சாய்த்தனர் மீரத் நகரின் இராணுவச் சிப்பாய்கள்.

(புரட்சி ஏற்பட்ட தோல்வியால் அதுவரை கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளில் இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டு இங்கிலாந்து மகாராணியின் நேரடி கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகுதான் கவர்னர் ஜெனரல் என்பவர் வைசிராய் – ராஜப்பிரதிநிதி ஆனார். இங்கிலாந்து அரசி விக்டோரியா, கெய்சரே ஹிந்த் இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.)

மீரத்தின் கதையை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய வீரர்கள், அதே வேகத்தோடு அடுத்த நாள் காலை டில்லி வந்து சேர்ந்தனர். தலை நகர் முழுவதும் வேட்டைக்காடானது. ஆங்கிலேயர் மீதான கோபம்; கனலாகப் பற்றி எரிகிறது என்ற செய்தி அருகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் காட்டுத் தீயாகப் பரவியது. அதன் விளைவு புரட்சிப் போர், சிப்பாய்களைக் கடந்து பொதுமக்களுக்கும் பரவியது.

மே பத்தில் துவங்கிய போர் செப்டம்பர் 21 வரை நான்கு மாதமும் பத்து நாட்களும் புரட்சியாளர்களின் கை ஓங்கியிருந்தது. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் கைகளில் அதிகாரம் வந்து சேர்ந்தது. சிறப்பான ஆட்சிக்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டன. பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என மக்களனைவரும் நிம்மதியடைந்தனர்…

அடங்கி ஒடுங்கிய ஆங்கிலேயக் கம்பெனி, அடுத்த ஆட்டத்திற்கு ஆயத்தமானது. நினைத்துப் பார்க்க முடியாத அளவில் படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு அசுர பலத்தோடு உள்ளே நுழைந்தது. கடுமையாகப் போரிட்டு, நான்கு மாதங்களுக்கு முன் இழந்த அனைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாக கைப்பற்றி, மீண்டும் வெற்றி வாகை சூடியது.

முதல் இந்தியச் சுதந்திரப் போர் குறித்த முக்கியச் செய்திகள் இவை. இந்தச் செய்திகள் அனைத்தும் நாம் அறிந்தவை. அல்லது அறியக் கிடைப்பவை. பாடநூற்கள் வழியாக நமக்குக் கற்றுத் தரப்படுபவை.

இந்தப் புரட்சிப் போரின் பின்னால் வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு வழங்கப்படாத மறைக்கப்பட்ட மற்றொரு பக்கம் இருக்கிறது. ஆதி முதல் அந்தம் வரை ஊடுருவி இந்தப் போரின் இரத்தமும் சதையுமாக மாறிப் போன முஸ்லிம்களின் தியாக பக்கங்கள் அவை.