Tamil Bayan Points

05) மாலிகி யவ்மித்தீன்

நூல்கள்: திருமறையின் தோற்றுவாய்

Last Updated on February 24, 2022 by

5) மாலிகி யவ்மித்தீன்

ஒரு தந்தை தன் மக்களில் எவரையும், எந்தக் குற்றத்திற்காகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் தண்டித்ததே இல்லை என்றால், இனியும் தண்டிக்கவே மாட்டான் என்றால் அவனை இரக்கம் உடையவன் என்று எவரும் கூற மாட்டார்.

ஏமாளி என்றும், இளித்தவாயன் என்றும், கையாலாகாதவன் என்றும் அவன் குறிப்பிடப்படுவான். அளவற்ற அருள் என்றாலும், நிகரற்ற அன்பு என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை இருந்தால் தான் அருள், அன்பு எனக் கூற முடியும்.

இறைவனின் அருட்கொடைகளையும், பாக்கியங்களையும் ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டு அதற்கான நன்றியை இறைவனின் அடிமைகளுக்குச் செலுத்துவோரையும், அல்லாஹ் அளித்த பொருளையும், உறுப்புகளையும், அறிவையும், ஆற்றலையும் அல்லாஹ் விரும்பும் வழிகளில் பயன்படுத்த மறுப்போரையும் சில நாட்கள் விட்டு விடலாம். சில மாதங்கள் விட்டு விடலாம். சில ஆண்டுகள் விட்டு விடலாம்.

அல்லாஹ்வை ஏற்று, அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, இறைக் கட்டளைகளைச் செயல்படுத்தி வாழ்ந்தவர்கள் நாமும் அவர்களைப் போல் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்திருக்கலாமே! அதனால் ஒரு நஷ்டமும் ஏற்பட்டிருக்காதே என்று கருதும் அளவுக்கு அவர்களை எந்த விசாரணையும், தண்டனையுமின்றி, விட்டு வைத்தால் அதற்குப் பெயர் அருளும் அல்ல. அன்பும் அல்ல.

இதை உணர வைப்பதற்காகத் தான் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பதைத் தொடர்ந்து மாலிகி யவ்மித்தீன் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி என்று பொருத்தமான இடத்தில் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பொருத்தி விடுகிறான்.

நான் அளவற்ற அருளாளன் தான்; நிகரற்ற அன்புடையவன் தான்; இந்த உலகில் வாழும் வரை நீங்கள் செய்த எந்தத் தவறுகளுக்காகவும் என்னிடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் உடனே மன்னிப்பவன் தான்; இந்த உலக வாழ்வு முடிந்து விடுமானால் நியாயமான தீர்ப்பு வழங்கும் நாள் ஒன்று உண்டு. நியாயத் தீர்ப்பு நாளில் நானே முழு அதிபதி. எவருக்கும் சுதந்திரம் எதுவும் வழங்கப்படாத நாள் அது என்று அல்லாஹ் சொல்கிறான்.

மறுமை நம்பிக்கையே இஸ்லாத்தின் ஆணிவேர்

மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக மனித உள்ளத்தில் பதிந்திருக்கின்றதோ, அதற்கேற்ப ஒருவனது செயல்களில் மாற்றங்கள் நிகழும். இதனால் தான், தன் திருக்குர்ஆன் நெடுகிலும் அந்த நாளைக் குறிப்பிடுகின்றான். அதைப் பற்றி எச்சரிக்கின்றான்.

ஒருவனது செல்வம், அவன் பெற்றெடுத்த பிள்ளைகள், அதனுடன் பிறந்தவர்கள், அவனைப் பெற்றவர்கள், அவன் கட்டிய மனைவி, அவன் திரட்டிய செல்வாக்கு, செல்வாக்குமிக்கவர்களின் அறிமுகம் எதுவுமே பயன் தராத நாள் ஒன்று உள்ளது. அன்றைய தினத்துக்கு அதிபதியாக இருக்கும் அவன் திருப்தியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே தப்ப முடியும் என்பதைத் தான் மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பு மூலம் குறிப்பிடுகின்றான். மறுமையைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா வசனங்களும் இந்தப் பண்பின் விரைவுரைகள் தான்.

அவன், அவர்களை அழைக்கும் நாளில் எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?

(அல்குர்ஆன் 28:62)

என்று அவன் கேட்கத்தான் போகிறான்.

அல்லாஹ் சொன்னதைக் கேட்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் சொன்னதையும் கேட்காமல், பெரியார்கள், இமாம்கள், தலைவர்கள் சொன்னார்கள் என்று கருதிக் கொண்டு தவறான பாதையில் சென்றார்களே அவர்களும் அங்கே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள்.

அந்த நாளில் சில முகங்கள் நரகில் போடப்பட்டு புரட்டப்படும். நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படாமல் போனோமே? தூதருக்கு வழிப்படாமல் போனோமே? எங்கள் பெரியார்களுக்கும், தலைவர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்ததனால் எங்களை அவர்கள் வழிகெடுத்து விட்டார்களே! (அல்குர்ஆன் 33:66) என்று புலம்பத்தான் போகிறார்கள்.

நாங்கள் இறைவனிடம் வாதாட வக்கீல்களை வைத்திருக்கிறோம் என்று சமாதிகளைக் கட்டி அழுவோரும் அங்கே வரத்தான் போகிறார்கள். அன்றைய தினத்தில் அவர்களின் வாய்கள் மீது நாம் முத்திரையிடுவோம். அவர்களின் கைகளும் கால்களும் அவர்கள் செய்தது பற்றிக் கூற ஆரம்பிக்கும்.

(அல்குர்ஆன் 36:65)

இந்த நிலையை வக்கீல்களும், வக்கீல்களை ஏற்படுத்தியவர்களும் சந்திக்கத்தான் போகிறார்கள்.

கடமை தவறியவர்கள், தடையை மீறியவர்கள், மனித உரிமையில் கை வைத்தவர்கள் யாராயினும் அதற்கான பலனை யவ்மித்தீனில் (நியாயத் தீர்ப்பு நாளில்) அனுபவித்தே ஆக வேண்டும். யாரும், எதன் மூலமும் தப்பித்து விட முடியாது என்பதைச் சொல்லித் தருவதற்கே தன்னை மாலிகியவ்மித்தீன் என்கிறான்.

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

(அல்குர்ஆன் 26:88,89)

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்).

(அல்குர்ஆன் 74:40-47)

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.

(அல்குர்ஆன் 83:1-6)

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன் 9:34,35)

நியாயத் தீர்ப்பு நாள் பற்றிய நம்பிக்கையின் காரணமாகவே தமக்கு இழைக்கப்பட்ட அவ்வளவு துன்பங்களையும் நபிமார்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அந்நாளில் கிடைக்கப் போகும் பரிசுகளைப் பெரிதாக மதித்ததனாலேயே சுடு மணலையும் சிலரால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

தூக்கு மேடையை முத்தமிட முடிந்தது. இருகூராகக் கிழிக்கப்படுவோம் என்று தெரிந்தும் கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது. நாட்டை விட்டு விரட்டப்படும் போதும், சமூகப் பரிஷ்காரம் செய்யப்படும் போதும், வம்புச் சண்டைக்கு வந்த போதும், வறுமை வாட்டிய போதும் அத்தனையையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

அவர்களைப் பைத்தியம் என்று பட்டம் சூட்டிய நேரமாகட்டும்! அவர்களின் மனைவியரின் ஒழுக்கத்தின் மீது களங்கம் சுமத்தப்பட்ட நேரமாகட்டும்! இத்தனையையும் அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது? நியாயத் தீர்ப்பு நாளில் அந்த நாளின் அதிபதியிடம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை.

மதுவிலும், மங்கையர் சுகத்திலும் மதி மயங்கியவர்களின் மயக்கம் தெளிந்ததற்கும். இயல்பிலேயே அவர்களிடம் குடி கொண்டிருந்த முரட்டுத்தனம் இருந்த இடம் தெரியாமல் போனதற்கும், தாழ்ந்த நிலையில் இருந்தவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் புழுவாய் மதித்தவர்கள், அவர்களையே தங்களின் தலைவர்களாக, உடன் பிறவாச் சகோதரர்களாக மதித்ததற்கும், நேர்மை, நாணயம், நல்லொழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது வாழ்ந்தவர்கள் இவற்றையெல்லாம் உலகுக்கே படித்து தரும் ஆசான்களாக மாறியதற்கும், அந்த நாளைப் பற்றிய நம்பிக்கையும், அந்த நாளின் அதிபதி பற்றி அவர்களுக்கிருந்த அச்சம் தான் காரணம்.

நியாயத் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை இல்லாததனாலேயே இந்த உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

அனைத்தைப் பற்றியும் விசாரித்து தக்க தீர்ப்பு வழங்கப்படும் நாள் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டு விட்டால் அனைத்து தீமைகளிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் மனித குலம் விடுபடும். இதனால் தான் ரப்பு, ரஹ்மான், ரஹீம் என்பதுடன் மிகவும் அவசியமான மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பையும் சேர்த்து வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அந்த நாளை நம்புகின்றவர்களில் சிலர் குறுக்கு வழியில் தப்பித்து விடலாம் என்ற அளவுக்குத் தான் அந்த நாளை நம்புகிறார்கள். எந்தக் குறுக்கு வழியும் அங்கே உதவாது என்பதைப் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.

(அல்குர்ஆன் 82:19)

எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும், தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிய நரகமெனும் வேதனையைச் சுவையுங்கள்! என்று அநீதி இழைத்தோருக்குக் கூறுவோம்.

(அல்குர்ஆன் 34:42)

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள். அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான். அவர்கள் அனைவரும் கியாமத் நாளில் தன்னந்தனியாகவே வருவார்கள்.

(அல்குர்ஆன் 19:93,94,95)

அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது. ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 78:37,38)

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.

(அல்குர்ஆன் 78:40)

இந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 22:56)

அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்றைய தினம் ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே. இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். சீக்கிரம் வரக்கூடிய நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.

(அல்குர்ஆன் 40:16,17,18)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 2:254)

எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:25)

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.

(அல்குர்ஆன் 3:30)

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்! என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)

(அல்குர்ஆன் 3:106)

பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போல் இன்னொரு மடங்கும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின் வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 5:36)

இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று அல்லாஹ் கூறுவான்.

(அல்குர்ஆன் 5:119)

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக! அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.

(அல்குர்ஆன் 6:15,16)

அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.

(அல்குர்ஆன் 11:105)

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர்! பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.

(அல்குர்ஆன் 14:42)

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

(அல்குர்ஆன் 24:24)

அந்த நாள் பற்றி இப்படி ஏராளமான வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். இந்த வசனங்களும் யவ்முல் ஆகிர் என்ற வார்த்தை இடம் பெறும் நூற்றுக்கணக்கான வசனங்களும், மாலிகியவ்மித்தீனுடைய விரிவுரைகளேயாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கமும், திருத்தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கமும் அந்த நாள் பற்றி மனிதனுக்கு எச்சரிக்கை செய்வது தான். இந்த வகையில் முழுக் குர்ஆனுமே மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பின் விளக்கம் தான்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர் ரஹீம் மாலிகி யவ்மித்தீன் ஆகிய மூன்று திருவசனங்களுக்கும் உரிய பொருளை இப்போது காண்போம்.

அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் ஒருங்கே அமையப் பெற்ற நியாயத் தீர்ப்பு நாளின் முழு அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இவ்வசனங்களின் பொருள்.

அல்லாஹ்வை ஏன் புகழ வேண்டும்?

இத்தகைய பண்புகளும், தகுதிகளும் உள்ள அல்லாஹ்வை ஏன் புகழ வேண்டும்? அதனால் இறைவனின் தகுதி எதுவும் அதிகமாகி விடப்போகிறதா? நிச்சயமாக ஏற்படப் போவதில்லை. புகழ்கின்ற மனிதர்கள் தான் இவ்வுலகிலும், மறு உலகிலும் அளப்பரிய நன்மைகளை இதனால் பெற்றுக் கொள்கின்றனர். மனிதர்களுக்கிடையே ஏற்படக் கூடிய பெறாமை, பெருமை, ஆணவம் ஆகிய எல்லாக் கெட்ட குணங்களிலிருந்தும் அல்லாஹ்வைப் புகழ்வதன் மூலம் மனிதன் விடுபடலாம்.

அல்லாஹ் சிலரை விட சிலருக்கு அறிவை அதிகம் வழங்கி இருக்கிறான். அந்தத் திறமையின் மூலம் ஏதேனும் சாதனைகளை நிகழ்த்தி விடும் போது அவனுக்குள் ஷைத்தான் தன்னுடைய வேலையைத் துவக்கி விடுகிறான். என்னைப் போல் எவருளர்? மற்றவர்கள் என்னை விட மட்டமானவர்களே என்று எண்ண ஆரம்பிக்கிறான்.

இதன் மூலம் அவனிடம் இருந்த எளிமை, நல்லொழுக்கப் பண்பாடுகள் யாவுமே தலைகீழாய் மாறி விடுவதைக் காண்கிறோம். இந்த அறிவும் ஆற்றலும் என்னைப் படைத்த இறைவனால் எனக்குத் தரப்பட்டவை. இதற்கான பெருமையும், புகழும் எனக்குரியதன்று. என்னைப் படைத்த இறைவனுக்கே இது சொந்தம் என்ற பக்குவத்தை அல்லாஹ்வைப் புகழ்வதன் மூலம் ஒருவன் பெற்றுக் கொள்கிறான். அல்ஹம்துலில்லாஹ்! (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று உணர்வதன் மூலம் மட்டுமே, சாத்தானின் இந்தத் தூண்டுதலிலிருந்து மனிதன் விடுபட முடியும்.

சிலருக்கு அல்லாஹ் அபரிதமான செல்வத்தை வழங்கியிருக்கிறான். வேறு சிலருக்கு நல்ல உடல் வலிமையை வழங்கியிருக்கிறான். சிலரை அழகிய தோற்றத்தில் படைத்திருக்கிறான். சிலருக்கு குழந்தைச் செல்வத்தைத் தாராளமாக அல்லாஹ் வழங்கியிருக்கிறான். இவற்றையெல்லாம் பெற்ற மனிதன் தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவர்களை மட்டமானவர்களாகவும் கருதி, மமதை கொள்ள முற்படுகிறான்.

மனிதர்களுக்கிடையே உள்ள நல்லுறவு இதனால் பாதிக்கப்பட்டு போட்டி, பொறாமை, பூசல், பகை போன்ற சீர்கேடுகளை மனிதன் சந்திக்க நேரிடுகின்றது. இதை முற்றாக அகற்ற என்ன வழி?

என்னிடம் உள்ள செல்வம், நான் பெற்றெடுத்த மழலைச் செல்வங்கள், என்னுடைய வலிமை, அழகு ஆகிய யாவுமே என்னைப் படைத்த அல்லாஹ் எனக்கு வழங்கிய அருட்கொடை. இதில் நான் பெருமை அடிக்க எதுவுமே இல்லை. அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் என்னைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே உரிமையானது என்று உணர்வதைத் தவிர இந்தத் தீய குணத்தை மாற்ற வேறு வழி எதுவுமில்லை.

உலகத்தில் வேறு எவருக்கும் வழங்காத பெரும் செல்வங்களைத் தன் தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கிவிட்டு, இது என் இறைவனின் அருட்கொடை என்று சொல்ல வைக்கிறான் வல்ல அல்லாஹ்.

(அல்குர்ஆன் 27:40)

இறைவனின் படைப்பினங்களிலேயே மிக உயர்வான இடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இது போன்ற கட்டளையை இட அல்லாஹ் தவறவில்லை.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்

(அல்குர்ஆன் 110:1-3)

இருபத்தி மூன்று ஆண்டுகள் படாத பாடுபட்டு, பல்வேறு தியாகங்கள் புரிந்து, நாடு துறந்து, நல்லோர் பலரைப் பலி கொடுத்து மக்களைச் சத்திய மார்க்கத்தின் பால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தனர். இவ்வளவு சிரமத்திற்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உண்மை மார்க்கத்தில் இணையும் போது இது என்னால் என் பிரச்சாரத்தால் என்னுடைய தியாகத்தால் தான் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காக உமது இறைவனின் புகழைப் பாடுவீராக! என்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு எண்ண மாட்டார்கள் என்றாலும் அவர்களுக்குச் சொல்வதைப் போல் நமக்குக் கற்றுத் தருகின்றான். இதுவும் அல்ஹம்து லில்லாஹ் வின் விளக்கவுரை தான்.

நான், எனது என்பது போன்ற ஆணவப் போக்கை மனிதன் கைவிட்டு எல்லாப் பெருமைகளையும், புகழமையும் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமாக்கி விட வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதற்காகத் தான் முதல் அத்தியாயத்திலேயே புகழுக்கு உரிமை கொண்டாடுகிறான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பக்குவப்படுத்துவதற்காக யார் யார் காலிலோ விழுந்து பொருளையும், சுயமரியாதையையும் பறிகொடுத்து வருகிறான். இஸ்லாம் கூறும் எளிமையான இந்த ஆன்மீக வழி உண்மையிலேயே மனிதனைப் பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது.

தனது நிலை உயரும் போதெல்லாம் இதற்கான புகழும், பெருமையும் என்னைச் சேராது. என் இறைவனையே சேரும் என்பதை மட்டும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு பாருங்கள்! உண்மையான ஆன்மீக நிலையை நீங்கள் அடைவதை நீங்களே உணர்வீர்கள்! நான் எனது என்ற ஆணவம் அழிந்து போவதைக் காண்பீர்கள்! ஆணவம் அழிந்த பின் உங்களிடமிருந்து வெளிப்படும் காரியங்கள் யாவும் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.

அல்ஹம்துலில்லாஹ் எனும் மந்திரச் சொல் மூலம் மனித குலம் பெறுகின்ற மகத்தான நன்மை இது.

உண்மையில் எல்லாப் பெருமைக்கும் வல்ல அல்லாஹ் மட்டுமே உரிமையாளன் என்பதை ஏற்க மறுப்போர் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரும் என்று வல்ல அல்லாஹ் எச்சரிக்கிறான்.

مسند أحمد
7382 – حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُفْيَانُ: أَوَّلَ مَرَّةٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَعَادَهُ فَقَالَ الْأَغَرِّ: عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ” قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعِزَّةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، أُلْقِهِ (1) فِي النَّارِ ” (2)

கவுரவம் எனது கீழாடை. பெருமை எனது மேலாடை. இவ்விரண்டிலும் எவன் என்னுடன் போட்டிக்கு வருகிறானோ அவனை நான் வேதனைப்படுத்துவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத்

صحيح البخاري 
4918 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ: سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الخُزَاعِيَّ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ، جَوَّاظٍ مُسْتَكْبِرٍ “

நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டுவிட்டு பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி – 4918, 6072, 6657

صحيح مسلم 
64 – (2865) وحَدَّثَنِي أَبُو عَمَّارٍ حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ، عَنْ مَطَرٍ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَخِي بَنِي مُجَاشِعٍ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ خَطِيبًا، فَقَالَ: «إِنَّ اللهَ أَمَرَنِي» وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، وَزَادَ فِيهِ «وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ» وَقَالَ فِي حَدِيثِهِ «وَهُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْغُونَ أَهْلًا وَلَا مَالًا»، فَقُلْتُ: فَيَكُونُ ذَلِكَ؟ يَا أَبَا عَبْدِ اللهِ قَالَ: نَعَمْ، وَاللهِ لَقَدْ أَدْرَكْتُهُمْ فِي الْجَاهِلِيَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَرْعَى عَلَى الْحَيِّ، مَا بِهِ إِلَّا وَلِيدَتُهُمْ يَطَؤُهَا

நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர், சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: இயாழ் பின் ஹிமார் (ரலி)

நூல்: முஸ்லிம் – 5109

இது போன்ற ஹதீஸ்களும், பெருமையடிப்பவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று வருகின்ற வசனங்களும், இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு வரும் கட்டளைகளும் யாவுமே அல்ஹம்துலில்லாஹ் வின் விளக்கவுரைகளேயாகும்.

صحيح البخاري 
1130 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ المُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ – أَوْ سَاقَاهُ – فَيُقَالُ لَهُ فَيَقُولُ: «أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கால்கள் வீங்கிவிடும் அளவுக்கு நின்று வணங்குவதைக் கண்ட நபித்தோழர்கள் உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்ட பிறகும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் இறைவனுக்கு நன்றியுள்ள ஒரு அடியானாக இருக்க ஆசைப்படக் கூடாதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: முகீரா (ரலி)

நூல்: புகாரி – 1130, 4836, 4837, 6471

ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்த போதும் உயர்ந்து விட்டோம் என்று பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை. யாவும் என் இறைவனுக்கே சொந்தம் என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே இறைவனின் திருப்தியை அடைய முடியும்.

صحيح مسلم 
89 – (2734) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ – وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ – قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا»،

ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு அல்லாஹ்வைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழும் போதும் அல்லாஹ் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திபடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் – 4915

மிகப்பெரும் சாதனைகளைப் புரியும் போது மட்டுமல்ல. ஒரு கவள உணவைப் பெறும் போதும் அதற்கான நன்றியை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி இறைவனுக்குச் சொந்தமாக்கி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தருகிறார்கள்.

இறைத்திருப்தியை அடைவதையே குறிக்கோளாகக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் தம் வாழ்வில் அடைகின்ற உயர்வின் போதும், சின்னஞ்சிறு அருட்கொடைகளைப் பெறும் போதும் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பதை உணர்ந்து நடந்து கொள்வதன் மூலமே அந்தக் குறிக்கோளை எட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவனது திருப்தியை மறுமையில் அடைவதுடன் இம்மையிலும் கூட இந்தப் பண்பு மகத்தான மாறுதல்களை உருவாக்கி விடும். சண்டை, சச்சரவு, காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, தீயகுணங்கள் யாவும் அகன்று சமத்துவமும், சகோதரத்துவமும் நிரம்பிய சமுதாயம் உருவாகி விடும். படைத்த இறைவனுக்கே எல்லாப் புகழையும் உரித்தாக்குவோம்.