Tamil Bayan Points

05) நபிமார்களுக்கு அருளப்பட்ட அதிகாரம்

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

5) நபிமார்களுக்கு அருளப்பட்ட அதிகாரம்

அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர் வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித் தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர் வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.

அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித் தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம். இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

(திருக்குர்ஆன்:6:84 – 89.)

இவ்வசனங்களில்

  1. இப்றாஹீம் (அலை)
  2. இஸ்ஹாக் (அலை)
  3. யஃகூப் (அலை)
  4. நூஹ் (அலை)
  5. தாவூத் (அலை)
  6. சுலைமான் (அலை)
  7. அய்யூப் (அலை)
  8. யூசுப் (அலை)
  9. மூஸா (அலை)
  10. ஹாரூன் (அலை)
  11. ஸக்கரிய்யா (அலை)
  12. யஹ்யா (அலை)
  13. ஈஸா (அலை)
  14. இல்யாஸ் (அலை)
  15. இஸ்மாயீல் (அலை)
  16. அல்யஸவு (அலை)
  17. யூனுஸ் (அலை)
  18. லூத் (அலை)

ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான். அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும், சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு இவர்களுக்குக் கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும் வழங்கினோம். நுபுவ்வத்தையும் வழங்கினோம் என்று அல்லாஹ் 89 வது வசனத்தில் கூறுகிறான்.

கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக ஹுக்மை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத் (அலை), சுலைமான் (அலை), யூசுப் (அலை), மூஸா (அலை) போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக மார்க்கச் சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள். அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுபுவ்வத்தையும், ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத – காஃபிர்களாக இல்லாத – ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம் என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ நமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது. இம்மூன்றையும் மறுப்பவர்கள் காஃபிர்கள் என்றும் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

எனவே புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் நபிமார்கள் அனுப்பப்படவே இல்லை. மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர். அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.

வேதம் மட்டும் போதும் என்றால் தூதருக்கு வேலை இல்லை

வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அல்லாஹ் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும். தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அதை வேதம் என்று நம்புவதற்கு முன்னால் இவர் தூதர் தான் என நம்ப வேண்டும். தூதரை, தூதர் என்று நம்பினால் தான் அவர் கொண்டு வந்ததை வேதம் என்று நம்புவார்கள்.

தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக மக்கள் தூதர்களை முதலில் மறுப்பார்கள். அவர் கடவுளின் தூதர் இல்லை என்றால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுப்பார்கள். இதை ஊகமாக நாம் கூறவில்லை. இந்தக் காரணங்களைக் கூறி இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டதற்கு திருக்குர்ஆன் சாட்சி கூறுகிறது.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

(திருக்குர்ஆன்:17:94.)

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?என்று கேட்கின்றனர்.

(திருக்குர்ஆன்:25:7.)

வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!என்று அவர்கள் கேட்டனர்.

(திருக்குர்ஆன்:14:10.)

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன்:23:33.)

இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா? என்றனர்.

(திருக்குர்ஆன்:23:47.)

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்என்று (அவ்வூரார்) கூறினர்

(திருக்குர்ஆன்:36:15.)

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!(என்றும் கூறினர்)

(திருக்குர்ஆன்:26:154.)

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

(திருக்குர்ஆன்:26:186.)

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.

(திருக்குர்ஆன்:54:24.)

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(திருக்குர்ஆன்:64:6.)

ஏக இறைவனை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததற்குக் காரணம் நம்மைப் போன்ற ஒரு மனிதர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும்என்று அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் தான். தம்மைப் போன்ற மனிதர்களை இறைத் தூதர்கள் என்று நம்புவது மனிதர்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

(முஹம்மதே!) வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டுஎன்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள். அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.

(திருக்குர்ஆன்:4:153.)

ஒரு மனிதர் தன்னை இறைத் தூதர் என்று வாதிட்டு அதன் பின்னர் அவர் கொண்டு வந்த நூலை இறை வேதம் என்று நம்புவதை விட வானிலிருந்து அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு நூலைப் போட்டால் அதை இறை வேதம் என நம்புவதில் மக்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

வேதம் மட்டும் போதும்; இறைத்தூதரின் வழிகாட்டுதல் தேவை இல்லைஎன்பது இறைவனின் முடிவாக இருந்தால் அவன் இதைத் தான் செய்திருப்பான். வானிலிருந்து ஒரு நூலைப் போடுவது அவனுக்கு எளிதானது. மக்கள் நம்புவதற்கும் ஏற்றது. இவ்வாறு செய்வதில் ஏராளமான நன்மைகளும் ஏற்படும்.

அடி, உதை, உயிர்ப் பலி ஏதுமின்றி மக்கள் அனைவரும் எளிதாக இதை ஏற்றுக் கொள்வார்கள். இறைத் தூதர் வழியாக வேதம் கிடைக்கும் போது ஏற்படும் நம்பிக்கையை விட அதிகமான நம்பிக்கை இதனால் ஏற்படுவதால் வேதத்தில் உள்ளதை அப்படியே பின்பற்றுவார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து வேதங்களைப் போடுவதால் கருத்து வேறுபாடுகள் குறையும். வேதம் மட்டும் வழிகாட்டி விடும் என்றால் அல்லாஹ் இதைத் தான் செய்திருப்பான். வேண்டாத வேலையை அல்லாஹ் ஒரு போதும் செய்ய மாட்டான். நமது மூக்கை நாம் தொடுவதாக இருந்தால் கூட நேரடியாகத் தான் நாம் தொடுவோமே தவிர சுற்றி வளைத்துத் தொட மாட்டோம். அவ்வாறு யாரேனும் தொட முயன்றால் அவனுக்கு என்னவோ நேர்ந்து விட்டது எனக் கருதுவோம்.

நாமே இவ்வளவு தெளிவாக இருக்கும் போது எல்லாம் வல்ல இறைவன் இப்படிச் செய்வானா? வேதத்தைக் கொண்டு வந்து தருவதைத் தவிர வேறொரு முக்கியமான பணியும் தூதருக்கு இருந்தால் தவிர தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கவே மாட்டான். குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் அந்த முக்கியமான பணி என்ன என்பதைக் கூறுவார்களா?

வேதத்தைக் கொண்டு வந்து அதற்கு விளக்கம் சொல்லி, வாழ்ந்து காட்டி வழிகாட்டும் பணியும் இறைத் தூதரின் பணி என்பதால் தான் வேதத்தை வானிலிருந்து போடாமல் மக்கள் நம்பிக்கை கொள்வதற்குச் சிரமமாகக் கருதினாலும் மனிதரைத் தூதராக நியமித்து அவர் மூலம் இறைவன் வேத்தை வழங்கினான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

தூதராக வானவரை அனுப்பாதது ஏன்?

வானிலிருந்து வேதத்தைப் போடாவிட்டால் மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம் வேதத்தைக் கொடுத்து அனுப்பினால் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியுமே எனவும் மக்கள் விரும்பினர்கள். சாப்பிடக் கூடியவராகவும் பருகக் கூடியவராகவும் இல்லாத – மனிதனிடம் இருக்கக் கூடிய ஏனைய பலவீனங்கள் இல்லாத – வானவர்கள் இறைவனின் தூதர்களாக அனுப்பப்பட்டால் அவர்களை ஏற்பதற்குத் தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது.

தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக தூதர்களை முதலில் மறுப்பார்கள். அவர் கடவுளின் தூதர் இல்லை என்றால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுப்பார்கள். இந்தக் காரணங்களைக் கூறி இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டதற்கு திருக்குர்ஆன் சாட்சி கூறுகிறது.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?என்று கேட்கின்றனர்.

(திருக்குர்ஆன்:25:7.)

இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

(திருக்குர்ஆன்:6:8,9.)

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை என்றனர்.

(திருக்குர்ஆன்:23:24.)

அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்! என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர். அதற்கவர்கள் எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்எனக் கூறினர்.

(திருக்குர்ஆன்:41:14.)

ஒரு வானவர் இறைத் தூதராக அனுப்பப்படும் போது அவர் எதையும் உண்ணாமல் பருகாமல் தங்களுடன் வாழும் போது அவரை இறைத் தூதர் என்று எளிதில் நம்பலாம். அவர் கொண்டு வந்தது இறை வேதம் தான் என்பதையும் நம்பலாம். இது தான் மக்களின் விருப்பமாக இருந்தது என்பதற்கு மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் சான்று. அந்தக் கோரிக்கைக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கிறான்.

வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

(திருக்குர்ஆன்:6:9.)

பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம் என்பதைக் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:17:95.)

வானவரையே தூதராக அனுப்புமாறு இவர்கள் கேட்கின்றனர். வானவரை அனுப்புவதாக நாம் முடிவு செய்தாலும் அந்த வானவரை மனிதத் தன்மை கொண்டவராக மாற்றித் தான் அனுப்புவோம். மனிதத் தன்மையுடன் வரும் அவர் உண்பார்; பருகுவார். ஏற்கனவே அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை மீண்டும் எழுப்புவார்கள் என்று அல்லாஹ் விடையளிக்கிறான்.

வானவரைத் தூதராக அனுப்புவதாக இருந்தால் கூட அவரை மனிதராக மாற்றித் தான் அனுப்புவேன் என்று அல்லாஹ் ஏன் கூறுகிறான் என்று சிந்திக்க வேண்டும். வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டும் தான் தூதரின் பணி என்றால் வானவர் வந்து கொடுத்தால் என்ன? மனிதர் வந்து கொடுத்தால் என்ன?

மனிதர்களுக்கு மனிதர் தான் செய்முறை விளக்கம் தர முடியும். நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும் என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. வேதத்தைக் கொண்டு வரும் தூதர்கள் வேதத்தின் போதனைகளுக்கு விளக்கம் கூறி செயல் முறை விளக்கமும் தர வேண்டியிருக்கின்ற ஒரே காரணத்தினால் தான்

வானிலிருந்து வேதப் புத்தகத்தைப் போடாமல்…

வானவரைத் தூதர்களாக அனுப்பாமல்…

மனிதர்களையே அனுப்புகிறான்.

வேதம் மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறி வாழ்ந்து காட்டும் வேலையும் தூதர்களுடையது என்பதை இதிலிருந்தும் விளங்கலாம். குர்ஆன் மட்டும் போதும் என்போர் தூதரின் வருகையால் ஒரு பயனும் இல்லை; பயனற்ற வேலையை இறைவன் செய்து விட்டான் என்று கூறாமல் கூறி இறைவனின் தகுதியில் குறை காண்கிறார்கள்.

ஒரு சமுதாயத்திற்குப் பல தூதர்கள் ஏன்?

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும், அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும்.

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன்:36:13,14.)

இதைத் தொடர்ந்த மேலும் ஆறு வசனங்களிலும் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பதோடு தூதர்களின் பணி முடிந்து விட்டது என்றால் ஒரு தூதரை மட்டும் அல்லாஹ் அனுப்பி இருப்பான். இரண்டு தூதர்களை அனுப்பி இருக்க மாட்டான். எவ்வளவு தான் விளக்கிக் கூறிய பிறகும் மக்கள் ஏற்காத போது மேலும் ஒரு தூதரை அனுப்பியிருக்கத் தேவையேயில்லை. இறைத் தூதர்களின் பணி வேதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டுமல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறுவதும், பிரச்சாரம் செய்வதும் இறைத் தூதர்களின் பணியாக இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் மூன்று தூதர்களை அனுப்பியிருக்க முடியும்.

மக்களின் கடின சித்தம், விளங்கும் திறனில் குறைவு போன்ற காரணங்களால் ஒரு தூதரால் இதை முழுமையாகச் செய்ய முடியாது என்று இறைவன் கருதும் போது அதிகமான தூதர்களை அனுப்பி வைக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் வேதத்தை விட தூதர்களுக்கு அல்லாஹ் அதிகமான முக்கியத்துவத்தை அளித்திருக்கிறான் என்பதை விளங்கலாம். இது போன்று மற்றொரு காலகட்டத்தில் மூஸா நபியுடன் துணையாக ஹாரூன் நபியையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.

(திருக்குர்ஆன்:25:35.)

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! (என்று மூஸா கேட்டார்)

(திருக்குர்ஆன்:20:29,30,31.)

என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்(என்றும் கூறினார்). உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். (என்று இறைவன் கூறினான்.)

(திருக்குர்ஆன்:28:34,35.)

ஃபிர்அவ்னிடம் (நீங்கள் இருவரும்) சென்று நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு! என்று கூறுங்கள்!

(திருக்குர்ஆன்:26:16.)

ஒரு காலகட்டத்தில் ஒரு சமுதாயத்திற்கு இரண்டு தூதர்கள் அனுப்பப்பட்டதை இவ்வசனங்கள் கூறுவதுடன் அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான காரணத்தையும் கூறுகின்றன. வேதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலை மட்டும் தான் இறைத் தூதர்களுடையது என்றால் மூஸா (அலை) மட்டுமே அந்தப் பணியைச் செய்யப் போதுமாகும். வேதத்தைக் கொண்டு வந்து தருவதற்கு இரண்டு தூதர்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

மூஸா நபியவர்கள் தம்மால் தெளிவாக விளக்க முடியாது என்றும் தம்மை விட ஹாரூன் விளக்கமளிக்கும் திறன் அதிகம் பெற்றவர் என்றும் காரணம் கூறி, ஹாரூனையும் என்னுடன் அனுப்பு என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக் கொண்டு மூஸா நபியை விட அதிக விளக்கும் திறமை பெற்றிருந்த ஹாரூன் நபியையும் துணையாக – தூதராக – அனுப்புகின்றான்.

மக்களுக்குப் புரியும்படி விளக்குவதும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதும் இறைத் தூதர்களின் பணியாக இருந்தது என்பதை இதிலிருந்தும் சந்தேகமற அறிந்து கொள்ளலாம். இதை விட முக்கியமான மற்றொரு அம்சமும் மூஸா நபி வரலாற்றில் கவனிக்கத் தக்கதாகும்.

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை. இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர். அப்போதும் வேதம் அருளப்படவில்லை.

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான். ஏழாவது அத்தியாயம் 103 வது வசனத்திலிருந்து 150 வது வசனம் வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம்.

103 வது வசனம் முதல் 141 வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப்பட்டதை அல்லாஹ் கூறுகின்றான்.

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.  எதிரிகள் அழிக்கப்படும் வரை அவர்களுக்கு எந்த வேதமும் அருளப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு நீண்ட நெடுங்காலம் அவர்கள் எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்தனர்? வேதமில்லாத இன்னொரு வஹீயின் மூலம் தான் அவர்கள் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும்.

தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கும், வேதம் அருளப்பட்டதற்கும் உள்ள நீண்ட கால இடைவெளியிலிருந்து வேதம் மட்டும் இறைவனால் அருளப்படுவதில்லை. வேதமில்லாத வேறு வஹீயின் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய இறைத் தூதர்கள் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தனர் என்பதை அறியலாம்.

எனவே தூதர்களின் விளக்கம் தேவையில்லை என்று வாதிடுவது குர்ஆனுக்கே எதிரானதாகும். அல்லாஹ்வின் கூற்றுக்கும் அவனது தூதரின் கூற்றுக்கும் வேறுபாடு கற்பிப்போர் காஃபிர்கள்.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம் எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (காஃபிர்கள். நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம். அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:4:150,151,152.)

திருக்குர்ஆன் மட்டுமே எங்களுக்குப் போதும், திருத் தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம். வேறு சிலதை நிராகரிப்போம் என்று கூறுபவர்கள் மெய்யாகவே காஃபிர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் தெளிவாகக் கூறும் இவ்வுண்மையை மறுத்திட இவ்வசனத்திற்கு சிலர் தவறான பொருள் கொடுத்து வருகின்றனர். திருக்குர்ஆனின் சில தமிழாக்கங்களில் இவ்வசனம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைத் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்கிக் காட்டுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் சமமானவர்களே. அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது. அவர்களில் சிலரை ஏற்று வேறு சிலரை மறுக்கக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. எல்லாத் தூதர்களையும் நம்ப வேண்டும் என்பது சரி தான். இதைத் திருக்குர்ஆன் வேறு சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது. அத்தகைய வசனங்களுக்குத் தான் இவ்விளக்கம் பொருந்துமே தவிர இவ்வசனத்திற்கு அவ்விளக்கம் அறவே பொருந்தாது.

ஏனெனில் இவ்வசனம் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று பொருள் கொள்ளும் வகையில் அமையவே இல்லை.

வயுரீதூன அன் யுபர்ரிகூ பைன ருஸுலிஹிஎன்று கூறப்பட்டால் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்ட எண்ணுகிறார்கள்என்று பொருள்.

ஆனால் இவ்வசனத்தில் பைன ருஸுலிஹி(தூதர்களுக்கு இடையில்) என்று கூறாமல் பைனல்லாஹி வருஸுலிஹி (அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையில்) என்று தான் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்ற சொற்றொடருக்கு தூதர்களிடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்று பொருள் கொள்வதை விட அறியாமை ஏதும் இருக்க முடியாது.

எனவே இவ்வசனம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதைத் தான் கூறுகிறது. யாருடைய விளக்கமும் இன்றி நேரடியான வாசகமே அப்படித் தான் அமைந்திருக்கின்றது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருளையும் சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே நிச்சயமாக பாரபட்சம் உள்ளது. அல்லாஹ்வைப் போல் அவன் தூதர்களைக் கருதக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை அல்லாஹ்வின் தூதருக்குச் செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படியானால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன?

இதற்காக நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில் எந்த வகையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதையும் இவ்வசனத்திலேயே அல்லாஹ் தெளிவாகக் கூறி விடுகின்றான். சிலவற்றை ஏற்போம். சிலவற்றை மறுப்போம் என்று கூறுவதையே பாரபட்சம் காட்டுதல் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் சொன்னதை நாங்கள் ஏற்போம். அவன் தூதர்கள் கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் நிச்சயம் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை மறுத்து அல்லாஹ்வும் அவனது தூதரும் சமம் என ஒருவர் கருதினால் அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுவார். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் வேறுபாடு காட்டக் கூடாது.

அல்லாஹ் ஒருவரைத் தூதராக நியமித்தால் அவர் கூறும் செய்திகள் அல்லாஹ்வின் செய்திகள் என்று நம்ப வேண்டும். தூதர் கூறும் செய்திகளைஒருவர் மறுத்தால் அவர் உண்மையில் அவரை அனுப்பிய அல்லாஹ்வைத் தான் மறுக்கிறார். இதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வாறு வேறுபாடு காட்டுபவர்களின் நிலை என்ன என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் பாதியை ஏற்று மீதியை மறுத்து, புது வழியை உருவாக்கியதால் இவர்கள் தாம் உண்மையாகவே காஃபிர்கள். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறதுஎன்று பிரகடனம் செய்கின்றான்.

குர்ஆன் மட்டும் போதும். நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை எனக் கூறுவோர் இவ்வசனத்தின் தெளிவான தீர்ப்பின்படி முஸ்லிம்கள் அல்லர். சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் காஃபிர்களே!

மேலே நாம் எடுத்துக் காட்டிய 150, 151, 152 ஆகிய வசனங்களில் மூன்றாவது வசனத்தை இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவாக வளைக்க நினைக்கின்றனர்.

யார் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புகிறார்களோ – மேலும் அவர்களில் எவருக்குமிடையே பாரபட்சம் காட்டாமல் உள்ளனரோ அவர்களின் பரிசுகளை அவர்களுக்கு அவன் வழங்குவான் என்பது தான் 152வது வசனம்.

இவ்வசனத்தில் இறைத் தூதர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறப்படுவதால் 150வது வசனத்திற்கும் அவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

முதலில் ஒரு அடிப்படையை இவர்கள் அறியவில்லை. இரண்டு விதமான கருத்துக்கள் கொள்ள எந்த வசனம் இடம் தருகின்றதோ அது போன்ற வசனங்களுக்குத் தான் – எந்த விளக்கம் கொடுக்கலாம் என்பதற்காக – வேறு வசனங்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்.

எந்த வசனம் இரண்டு கருத்துக்கள் கொள்ள இடம் தரவில்லையோ அது போன்ற வசனங்களுக்கு இன்னொரு வசனத்தின் துணையுடன் விளக்கம் கூறுவதாகக் கருதிக் கொண்டு நேரடியான பொருளை நிராகரிக்கக் கூடாது. 150வது வசனத்தில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுகிறார்களோஎன்று கூறப்படுகின்றது. இதற்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற ஒரு கருத்து தான் இதற்கு இருக்கிறது.

தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பது தான் இதன் கருத்து என்றால் அல்லாஹ்வுக்கும் என்ற வாசகம் தேவையில்லாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆகி விடும். இறை வேதத்தில் இத்தகைய வீணான சொற்கள் இருப்பதாகக் கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

எனவே அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 150வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும், தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 152வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் கொடுக்க வேண்டுமே தவிர இல்லாத ஒன்றை வலிந்து திணிக்கக் கூடாது.

அல்லாஹ் சொன்னதை அதாவது குர்ஆனை மட்டும் தான் ஏற்பேன்; தூதர் சொன்னதை அதாவது ஹதீஸ்களை ஏற்க மாட்டேன்என்று கூறுவது அப்பட்டமான இறை மறுப்பு என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்திய பிறகு ஹதீஸ்களை எப்படி நிராகரிக்க முடியும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டிய விளக்கம்

முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்!

(திருக்குர்ஆன்:4:105.)

விளக்கம் தேவைப்படக் கூடிய ஒவ்வொரு வசனத்திற்கும் இது தான் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

குர்ஆனை எவ்வாறு விளங்கிட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து இவ்வேதத்தை அவர்களிடம் வழங்கினான். நபிகள் நாயகத்தின் விளக்கம் ஏதும் அவசியம் இல்லை என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எதைக் காட்டினானோ அது எது? தமக்கு இறைவன் காட்டித் தந்ததை அடிப்படையாக வைத்து நபிகள் நாயகம் (ஸல்) வழங்கிய தீர்ப்புக்கள் யாவை? என்பதைச் சிந்திப்பவர்கள் ஹதீஸ்களை மறுக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டித் தந்ததைக் கொண்டு தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற இந்த வசனத்தின் அறிவுரையை, இவர்கள் மறுக்கிறார்கள்.

அழகிய முன்மாதிரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதப் புத்தகத்தைப் பெற்று மக்களிடம் கொடுப்பதற்கு மட்டும் அனுப்பப்படவில்லை. செயல்முறை விளக்கம் அளிப்பதற்காகவும் சேர்த்தே அனுப்பப்பட்டார்கள் என்பதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(திருக்குர்ஆன்:33:21.)

உஸ்வத் – முன்மாதிரி என்றால் ஒருவரது செயலை நடவடிக்கைகளைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும். ஒருவர் கொண்டு வந்து தந்த புத்தகத்தைப் பெற்று அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கும் அப்புத்தகத்தில் உள்ளபடி நடப்பதற்கும் உஸ்வத் – முன்மாதிரி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை.

ஒரு தபால்காரர் நம்மிடம் ஒரு தபாலைக் கொண்டு வந்து தருகின்றார். அதை நாம் வாங்கிக் கொள்கின்றோம். பின்னர் அதை வாசிக்கிறோம். அதன் பின்னர் அதில் கூறப்பட்டவாறு செயல்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் தபால்காரரை முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டோம் என்று யாரும் கூறுவதுண்டா? அப்படி யாரேனும் கூறினால் அவரது அறிவை நாம் சந்தேகப்பட மாட்டோமா? இவ்வாறு கூறுவோருக்கும், ஹதீஸ்கள் வேண்டாம் என்று கூறுவோருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

ஏனெனில் புத்தகத்தைக் கொண்டு வந்து நம்மிடம் தருவது மட்டுமே நபிகள் நாயகத்தின் பணி; அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது இவர்கள் எதை மறுக்கிறார்கள்? குர்ஆனையே மறுக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன்மாதிரியாக அனுப்பப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன் மாதிரி – வாழ்ந்து காட்டிய முறை – தேவையில்லை என்போர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் மறுப்பவர்கள் என்ற கடுமையான எச்சரிக்கை இவ்வசனத்தில் உள்ளது. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் மாதிரியாகத் திகழ்வார்கள் என்று இவ்வசனம் தெளிவாகவே கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நடவடிக்கை மூலம் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அல்லாஹ் கூறுவது எப்போது சாத்தியமாகும்? ஹதீஸ்களை ஏற்றுச் செயல்பட்டால் தான் சாத்தியமாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கை ஹதீஸ்களில் தான் கிடைக்கும்.

குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக உள்ளது.