Tamil Bayan Points

47) 57 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

57 வது வசனம்

57. அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.

(அல்குர்ஆன் : 36 : 57.)

உலகில் நாம் பார்த்து ஆசைப்படும் அனைத்து பழங்களையும் அனைவராலும் வாங்க இயலாது. வாங்குவதற்கு பணம் இருந்தாலும் நாம் விரும்பிய பழங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சொர்க்கத்தில் இந்நிலை இருக்காது. விரும்பிய பழங்கள் கிடைக்கும். பழங்கள் மட்டுமின்றி அவர் விரும்பியது எதுவாக இருந்தாலும் அனைத்தும் சொர்க்கத்தில் அவருக்கு கிடைக்கும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், “நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம். (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார்.

(இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், “எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

நூல் புகாரி-2348

விரும்பி வாயால் கேட்பது மட்டுமின்றி மனதால் நினைத்தது கூட சொர்க்கத்திலே கிடைத்து விடும்.

அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப் படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.

(அல்குர்ஆன் : 25 : 16.) 

தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறக் கூடியவைகளும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.

(அல்குர்ஆன் : 43 : 71.) 

நாம் பிரமிக்கும் வகையில் உள்ள இந்த இன்பங்கள் சொர்க்கத்தின் சிறிதளவுதான். இதை விட கூடுதலாக நாம் கற்பனை செய்ய முடியாதளவிற்கு அல்லாஹ் பல இன்பங்களை அதில் தயாரித்துள்ளான்.

சொர்க்கத்தில் பெண்களுக்கும் துணைகள் உண்டா?

சொர்க்கத்தில் துணைகள் உண்டு என்று 56 வது வசனத்தில் கூறப்பட்டது.

சொர்க்கத்தில் உள்ள ஆண்களுக்கு “ஹூருல் ஈன்” எனும் பெண் துணைகள் இருப்பது போன்று பெண்களுக்கு ஆண் துணைகளும் உண்டா என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

இக்கேள்விக்கு பதில் கூறும் சிலர் ஆண்களுக்கு தான் துணைகள் உண்டு என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் பெண்களுக்கு சொர்க்கத்தில் துணைகள் இல்லை என்று கூறுகின்றனர். அது தவறாகும். அது எப்படி தவறு என்பதை பார்ப்போம்.

குர்ஆனின் அணுகுமுறை

பொதுவாக குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் மற்றும் இன்னபிற விஷயங்கள் ஆண்களை நோக்கி கூறும் வகையில் ஆண்பாலாகவே அமையும்.

உதாரணமாக தமிழில் ஒரு ஆணை நோக்கி பேசும்போது “நீ” என்று கூறுவோம். பெண்ணை நோக்கி பேசும்போதும் “நீ” என்றே கூறுவோம். இரண்டு வார்த்தை பிரயோகமும் ஒன்றாகதான் உள்ளது. இதில் ஆண்களையும் பெண்களையும் குறிப்பதற்கு தனித்தனி சொற்கள் இல்லை. எனினும் அரபியில் தனித்தனி சொற்கள் உண்டு.

அரபியில் ஆணை நோக்கி நீ என்று பேசும்போது “அன்த்த” என்று கூறப்படும். பெண்ணை நீ என்று நோக்கி பேசும்போது அன்த்தி” என்று கூறப்படும். மேலும் பன்மையாக அவர்கள் என்று ஆண்பாலாக கூறும்போது “ஹூம்” என்றும் பெண்பாலாக கூறும்போது “ஹூன்ன” என்றும் சிறிய வேறுபாட்டோடு கூறப்படும்.

ஆனால் தமிழில் இது போன்ற வேறுபாடு இல்லை. இரு பாலருக்கும் அவர்கள்” என்றுதான் கூறப்படும்.

தொழுகை, நோன்பு போன்ற கட்டளைகளை குர்ஆன் கூறும்போது ஆண்பாலாக மட்டும்தான் கூறுகிறது.

பெண்களை குறிக்கும் வகையில் தனியாக கூறப்படவில்லை. இதை அடிப்படையாக கொண்டு தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் ஆண்களுக்கு மட்டும்தான் என்று கருதுவதில்லை. ஏனெனில் குர்ஆனுடைய பெரும்பான்மையான விஷயங்கள் மொழிவழக்கில் ஆண்பாலாகவே கூறப்பட்டாலும் இரு பாலரையும் குறிப்பதாகவே உள்ளது.

அவ்வாறே சொர்க்கத்து துணைகள் தொடர்பாக வருகின்ற வசனங்களையும் இருபாலருக்கும் பொதுவாகத்தான் கருதவேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் நபிமொழியும் அமைந்துள்ளது.

ஒரு முறை உம்முஸலமா (ரலி) அவர்கள் “குர்ஆனில் ஆண்களை பற்றி கூறப்படுவது போல் பெண்களை பற்றி கூறப்படவில்லையே ஏன்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அதற்கு பதிலளிக்கும் விதமாக பின்வரும் (33 : 35 வது) வசனம் இறங்கியது.

35. முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

அல்குர் ஆன் 33:35

(ஹதீஸின் கருத்து…)

நூல் அஹ்மத் 25363

மற்றொரு செய்தியும் இதை உறுதிபடுத்துகின்றது.

“அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்தது தொடர்பாக அல்லாஹ் (ஆண்களை மட்டுமே கூறுகிறான்) பெண்களை பற்றி கூறுவதை கேட்கமுடியவில்லையே (ஏன்)?” என்று உம்முஸலமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது “உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்” என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.

உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) ஹிஜ்ரத் செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளானோர், போரிட்டோர், மற்றும் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது.” எனும் (3: 195) வது வசனம் இறங்கியது.

நூல் திர்மிதீ-2949

மேலும் உலகில் கிடைக்கும் துணைகளை விட சிறந்த துணை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் கிடைக்கும் என்பதையே ஜனாஸாவிற்கு நாம் செய்யும் பிரார்த்தனை உணர்த்துகின்றது.

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன்.

அவர்கள், “அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்” என்று பிரார்த்தித்தார்கள்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி),அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக;

மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக;இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!) அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.

ஸஹீஹ் முஸ்லிம்-1756.

எனவே சொர்க்கத்தில் ஆண்களுக்கு துணைகள் உண்டு என்பதை போலவே பெண்களுக்கு துணைகள் உண்டு என்பதே சரியானதாகும். இவைதான் யாசீன் அத்தியாயத்தின் 57 வது வசனத்தின் விளக்கமாகும்.