Tamil Bayan Points

மார்க்கத்தின் பார்வையில் மினா உயிர்ப் பலிகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 26, 2023 by Trichy Farook

மார்க்கத்தின் பார்வையில் மினா உயிர்ப் பலிகள்

இறைவனை நெருங்குவதற்காக இன்று பலர் பல வகையான வணக்கங்களைப் புரிந்து வருகிறார்கள். தங்களைத் தாமே வருத்திக் கொண்டு புரியும் வணக்கமே இறைவனுக்குப் பிடித்தமானது என்றும் அதன் மூலமே அவனது பொருத்தத்தைப் பெற முடியும் என்றும் நினைக்கிறார்கள்.

காலணிகள் இருக்கும் போது, “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்று கூறிக் கொண்டு செருப்பு அணியாமல் கரடு முரடான பாதையில் நடந்தும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தும், பல அடி நீளமுள்ள வேல்களை நாவிலும், மேனியிலும் குத்திக் கொள்வதும், தேரைத் தன் முதுகில் மாட்டி இழுப்பதும், தீ மிதிப்பதும், மண்ணில் புரள்வதும், மண் சோறு உண்பதும் இது போன்ற செயல்கள் தான் முக்தி பெறுவதற்குரிய, இறைவனை அடைவதற்குரிய வழி என்றும் இறைவனுக்கு விருப்பமானது என்றும் நினைத்து தமது மனம் போன போக்கில் செய்து வருகிறார்கள்.

ஆனால் மற்ற மதங்கள் எப்படி இருந்தாலும் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் இது போன்ற வணக்கங்களுக்கு அறவே அனுமதி இல்லை. மக்கள் தன்னை வணங்குவதற்காகச் சிரமப்படுவதை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை. இப்படிப்பட்ட தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள நம் மக்கள் வணக்க வழிபாடுகளைச் சிரமமாக்கிக் கொள்கிறார்கள்.

இந்த வருடம் ஹஜ் கிரியையில் மினாவில் கல் எறியும் போது ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 362 பேர் இறந்து போனார்கள் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தோம். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருடாவருடம் கூடுகின்ற அந்தக் கூட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கக் கூடாதென்று கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு இரவு பகலாகத் திட்டமிட்டு அதற்காக எல்லாவிதமான வசதி வாய்ப்புகளையும் சவூதி அரசாங்கம் செய்தும் கூட இது போன்ற சில அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன.

இவை நிகழ்வதற்குக் காரணம் என்ன?

இஸ்லாத்தைப் பற்றிய அறியாமை

இஸ்லாம் ஒவ்வொரு வணக்க வழிபாடுகளைச் செய்யும் முறைகளைத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளது. அவ்வணக்க வழிபாடுகளுக்கு நபி (ஸல்) அவர்களை அழகிய முன் மாதிரியாக ஆக்கியுள்ளது. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜைப் பற்றியும் தெளிவான விளக்கங்களை அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்யும் போது, “ஹஜ் கிரியையில் எனது வழிமுறையையே பற்றிப் பிடியுங்கள்” என்று கூறியும் இருக்கிறார்கள். இஸ்லாம் கூறிய முறைப்படி முஸ்லிம்கள் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வார்களானால் அதில் எந்த வித அசம்பாவிதங்களும் நடக்க வாய்ப்பு இருக்காது.

ஆனால் மக்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். இதனால் இவ்வணக்கங்கள் அவர்களுக்கு மிகுந்த சிரமமாக ஆகி விடுகின்றன. பிறருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

சக்தியில்லாததைச் செய்யத் தேவையில்லை

ஹஜ்ஜைப் பற்றி போதிய அறிவு இல்லாத காரணத்தினால் 362 பேரைப் பலி கொண்ட இந்த விபத்து நடந்துள்ளது.

முடியாத பட்சத்திலும் அவசியம் கல்லெறிந்தாக வேண்டும்; இல்லா விட்டால் ஹஜ் கூடாது என்று மக்கள் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

கல் எறிவதற்கான வாய்ப்புகள் இலகுவாகக் கிடைக்கும் போது அவசியம் கல் எறிய வேண்டும்.

ஆனால் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் கல்லெறிவது அசாத்தியமான ஒன்று. கல் எறிய முடியாதவர்கள் ஏழு கற்களை அந்த இடத்தை நோக்கி எறிந்து கொள்வதே போதுமானதாகும். ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கடமைகளைச் சுமத்துவதில்லை என்று குர்ஆன் கூறுகிறது.

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ؕ

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:286)

சலுகைகளைப் பயன்படுத்தாத ஹாஜிகள்

சிலருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமும் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்.

பெண்கள், வயதானவர்கள், பலவீனமானவர்கள் ஆகியோர் இரவிலேயே சென்று கல் எறிவதற்கு அனுமதியுள்ளது. எனவே பகலில் நெரிசலில் இவர்கள் சிக்க மாட்டார்கள்.

நெரிசலில் சிக்கி மரணிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், வயதானவர்களாகவும் தான் இருக்கிறார்கள். எனவே இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த அனுமதியைப் பயன்படுத்துவதால் சிரமமின்றி கல் எறிந்து கொள்ளலாம். பகலில் கல் எறிபவர்களும் நெரிசல் இல்லாமல் இலகுவாகக் கல் எறிந்து கொள்வார்கள்.

 ابْنَ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ

أَنَا مِمَّنْ قَدَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ الْمُزْدَلِفَةِ فِي ضَعَفَةِ أَهْلِهِ

தன் குடும்பத்தின் பலவீனமானவர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-1678 

عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ

رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ لَهُ صَهْبَاءَ لاَ ضَرْبَ ، وَلاَ طَرْدَ وَلاَ إِلَيْكَ إِلَيْكَ

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் இருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை. விரட்டுதல் இல்லை. வழி விடு வழி விடு என்பது போன்ற கூச்சல் இல்லை.

அறி : குதாமா இப்னு அப்துல்லாஹ் (ரலி)
நூல் : நஸாயீ-3061 (3011), திர்மிதி 827 இப்னுமாஜா

عَنْ أَسْمَاءَ
أَنَّهَا نَزَلَتْ لَيْلَةَ جَمْعٍ عِنْدَ الْمُزْدَلِفَةِ فَقَامَتْ تُصَلِّي فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ : لاَ فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ قَالَتْ فَارْتَحِلُوا فَارْتَحَلْنَا وَمَضَيْنَا حَتَّى رَمَتِ الْجَمْرَةَ ثُمَّ رَجَعَتْ فَصَلَّتِ الصُّبْحَ فِي مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا يَا هَنْتَاهْ مَا أُرَانَا إِلاَّ قَدْ غَلَّسْنَا قَالَتْ يَا بُنَيَّ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَذِنَ لِلظُّعُنِ

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்றார்கள். நான் ஆம் என்றேன். அப்போது அவர்கள் புறப்படுங்கள் என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரத்துல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுப்ஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கு, “நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளார்கள்” என பதிலளித்தார்கள்.

அறி : அப்துல்லாஹ் (ரலி)
நூல் : புகாரி-1679 

பத்தாம் நாள் கிரியைகளை வரிசைப் படி செய்வது நபி வழி என்றாலும் அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை,

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ
رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ الْجَمْرَةِ وَهُوَ يُسْأَلُ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ ، وَلاَ حَرَجَ قَالَ آخَرُ يَا رَسُولَ اللهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ قَالَ انْحَرْ ، وَلاَ حَرَجَ فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ قُدِّمَ ، وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ ، وَلاَ حَرَجَ.

நபி (ஸல்) அவர்கள் ஜமரதுல் அகபாவில் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல் எறிவதற்கு முன்பே தலையை மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபியவர்கள், “இப்போது கல் எறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். மற்றொருவர் அவர்களிடம் வந்து, “நான் கல் எறிவதற்கு முன்பாக குர்பானி கொடுத்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல் எறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து, “நான் கல் எறிவதற்கு முன்பே கஃபாவை தவாஃப் செய்து விட்டேன்” என்றார். அதற்கு நபியவர்கள், “இப்போது கல் எறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள்.

அறி : அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலி)
நூல் : புகாரி-124 , முஸ்லிம், அஹ்மது

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم طَافَ بِالْبَيْتِ وَهْوَ عَلَى بَعِيرٍ كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ فِي يَدِهِ وَكَبَّرَ

மக்கள் நெரிசலில் சிக்கி அவதியுறக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதை சைகையின் மூலமும் முத்தமிட்டுக் காட்டிள்ளார்கள்.

நூல் : புகாரி-1632

எனவே கல் எறியும் போதும், மக்கள் நெரிசல் ஏற்படுவதினால் கல் எறிவதையும் சைகையாகச் செய்து கொள்ளலாம். இயலாமையைக் கவனித்து நபி (ஸல்) அவர்கள் முத்தமிடுவதைச் சைகையாகச் செய்துள்ளார்கள். கல் எறிவதிலும் இயலாமை ஏற்படுவதால் இயலாதவர்கள் சைகையாகச் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை.

தவறான வழி காட்டும் ஆலிம்கள்

மக்களுக்கு ஹஜ் சட்டங்களைப் போதிக்கின்ற ஆலிம்களும் நபி (ஸல்) அவர்கள் காண்பித்த வழிமுறைகளைக் கூறாமல் இமாம்களின் பெயரால் எழுதப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலோ, அல்லது தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றவாறோ சட்டங்களைக் கூறுகிறார்கள். எளிமையான இஸ்லாத்தைச் சிரமமானதாகக் காட்டும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.

ஹஜ் இஃப்ராத், ஹஜ் தமத்துஃ, ஹஜ் கிரான் என்று ஹஜ் மூன்று வகைப்படும். இதில் ஹஜ் தமத்துஃ மற்றும் ஹஜ் கிரான் ஆகிய இரு முறைகளில் ஹஜ் செய்பவர்கள் ஒரு பலிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும். பலிப் பிராணியை கொடுப்பதற்கு இயலாதவர்கள் ஹஜ்ஜின் போது மூன்று நாளும் ஹஜ்ஜை முடித்து விட்டு ஊருக்குத் திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப் பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.

உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப் பிராணியை (பலியிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:196)

ஹஜ் செய்யக் கூடிய அனைத்து ஹாஜிகளுக்கும் இந்தச் சட்டம் இல்லை. மாறாக மேற்சொன்ன முறைகளில் ஹஜ் செய்பவர்களுக்கு மாத்திரம் தான் இந்தச் சட்டம். அதுவும் பலிப் பிராணி கொடுக்க முடியாத போது தான்.

பலிப் பிராணியைக் கொடுக்க முடியாதவர்கள் கூட மக்காவில் மூன்று நாட்களும் ஊருக்கு வந்த பின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஹஜ்ஜின் போது ஏற்படும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ் இந்தச் சலுகையை வழங்குகின்றான்.

ஆனால் இங்கிருந்து ஹஜ் வழிகாட்டியாகச் சென்ற ஆலிம் ஒருவர், பத்து நாட்களும் மக்காவிலேயே நோன்பு நோற்பது சிறப்பு என்று கூறி, தன்னுடன் வந்த அனைவரையும் நோன்பு நோற்க வைத்துள்ளார். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் அங்கேயே குர்பானி கொடுத்தவர்கள் தான். இது போன்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நன்மை என்ற பெயரில் நுழைக்கின்றனர்.

இதனால் இவ்வணக்கம் பெரும் கஷ்டமானதாக மக்களுக்குத் தோற்றம் அளிக்கிறது. அது மட்டுமல்ல! நபியவர்கள் ஒரு பயணத்தில் ஒரு ஹஜ், ஒரு உம்ரா தான் செய்துள்ளார்கள்.

நபியவர்களின் இந்த சுன்னத்திற்கு மாற்றமாக சில மார்க்க ஆலிம்கள் பல உம்ராக்கள் செய்யலாம் என்று கூறி ஏராளமான உம்ராக்களைச் செய்யத் தூண்டுகின்றனர்.

அதிலும் இங்கிருந்து சென்ற வழிகாட்டி ஆலிம் ஒருவர், மக்காவிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள ஜஃரானா என்ற இடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்தால் அதற்குப் பெயர் “படா உம்ரா” என்றும், அவ்வாறு செய்வது நன்மை அதிகம் என்றும் கூறியுள்ளார். இது போன்று வழிகாட்டியாக வரும் ஆலிம்கள் நபிவழிக்கு மாற்றமான பித்அத்திற்கு இழுத்துச் செல்வதோடு மட்டுமல்லாது மக்களுக்குச் சிரமத்தையும் ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகிறது

இவ்வாறு செய்வது இஸ்லாத்திற்கும் நபிவழிக்கும் மாற்றமாகும். காரணம் மார்க்கமும் மாநபியவர்களும் சொன்னதைச் செய்ய வேண்டுமே தவிர இல்லாதவற்றையெல்லாம் செய்யக் கூடாது.

மேலும் ஷைத்தானுக்குக் கல் எறியும் சமயத்தில் மொச்சக் கொட்டையைப் போன்ற பொடிக்கற்களையே எறிய வேண்டும் என்று மார்க்கம் போதித்திருக்கின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக பெரிய கற்களைக் கொண்டும், செருப்பு மற்றும் தனது கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு வீசியெறிவதைப் பார்க்க முடிகிறது.

இது போன்ற காரியங்களைத் தடுத்து மக்களின் சிரமத்தைப் போக்க வேண்டிய ஆலிம்களும் (எல்லோரும் அப்படிக் கிடையாது) மார்க்கத்தில் இல்லாததைக் கூறி மேலும் சிரமத்தையே ஏற்படுத்துகின்றனர்.

ஹஜ்ஜைப் பற்றிய சரியான வழிகாட்டல் இல்லாததால் இதுவும் அசம்பாவிதத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

இயன்றதையே செய்ய வேண்டும்

நபியவர்கள் ஹஜ்ஜைப் பற்றிச் சொல்லும் போது தான் மிக முக்கியமான ஒரு செய்தியைக் கூறுகின்றார்கள். என்ன அது? இதோ:

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ
أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمُ الْحَجَّ فَحُجُّوا ». فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلاَثًا فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ – ثُمَّ قَالَ – ذَرُونِى مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَىْءٍ فَدَعُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களிடம் உரையாற்றினார்கள். அப்போது “மக்களே! அல்லாஹ், உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கி விட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டிலுமா ஹஜ் செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஆம் என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வொரு) ஆண்டிலும் கடமையாகி விடும்.

பின்னர் அது உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய் விடும்” என்று கூறி விட்டு, “நான் எதை (செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களுடைய முடிவுக்கு விட்டு விட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டு விடுங்கள்.

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும் தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை முடிந்த அளவுக்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்தால் அதைச் செய்யாமல் விட்டு விடுங்கள்” என்றார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-2599 

அனுமதி வழங்கிய அல்லது வலியுறுத்தப்பட்ட காரியங்களில் கூட முடிந்தவைகளைத் தான் செய்ய வேண்டும் எனும் போது நபியவர்கள் கட்டளையிடாததை நாமாகச் செய்வது அதிகப் பிரசங்கித்தனமாகும். நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதைப் போன்றல்லவா ஆகும்? இது போன்ற சிரமத்தையே மார்க்கம் கண்டிக்கின்றது.

 عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ
بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ ، وَلاَ يَقْعُدَ ، وَلاَ يَسْتَظِلَّ ، وَلاَ يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ.

நபியவர்கள் (ஜும்ஆ நாள்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். “இவர் பெயர் அபூ இஸ்ராயீல் “நின்று கொண்டே இருப்பேன்; உட்கார மாட்டேன்; நிழலில் ஒதுங்க மாட்டேன்; பேச மாட்டேன்; நோன்பு நோற்பேன்’ என நேர்ச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்” என மக்கள் கூறினார்கள்.

உடனே நபியவர்கள், “அவருக்கு உத்தரவிடுங்கள். அவர் பேசட்டும்; நிழல் பெறட்டும்; உட்காரட்டும்; நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

அறி :இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-6704 

மேற்கண்ட ஹதீஸிலிருந்து, ஒருவன் இறை வணக்கம் என்ற பெயரில் அவனாகவே எதையாவது கற்பனை செய்து கொண்டு, தன்னை வருத்திக் கொள்வதற்கு மார்க்கம் அனுமதிப்பதில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இதுவெல்லாம் தேவையில்லாத சிரமமே! இவ்வாறு செய்யும் காரியங்கள் தான் அசம்பாவிதங்கள் நடப்பதற்குக் காரணங்களாக அமைகின்றன

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம் மிகவும் எளிமையான மார்க்கமாகும். அகில உலக அருள்பாலிப்பவன், படைப்பினங்களின் இரட்சகன் அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும்

அது அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாக அமைந்த அல்லாஹ்வின் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றையும் நெறிமுறையாகக் கொண்டு செயல்படுத்தும் மார்க்கமாகும்

“நான் கடவுளை வழிபாடு செய்கிறேன்; ஆராதனை செய்கிறேன்” என்று ஒரு மனிதன் தன் விருப்பப்படி எதையும் செய்திட முடியாது. அதைப் போன்றே மார்க்கம் சொல்லும் காரியத்தையே ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொண்டோ தனக்கோ அல்லது பிறருக்கோ இடர் தரும் என்பதைத் தெரிந்து கொண்டே செய்தால் அதையும் தீமையான செயலாகவே கருதுகிறது. காரணம் இஸ்லாம் சிரமத்தைப் போதிக்கவில்லை. மாறாகக் கண்டிக்கிறது.

مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ‏
اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى

(முஹம்மதே!) நீர் சிரமப்படுவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை. (நம்மை) அஞ்சுபவருக்கு அறிவுரையாகவே (அருளினோம்)

(அல்குர்ஆன்: 20:2,3)

يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ

அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:185)

وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍ‌ؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَ‌ؕ

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன்: 22:78)

நன்மை தானே! எப்படிச் செய்தாலென்ன? என்று ஒரு காரியத்தைத் தன் இஷ்டத்திற்கு யார் செய்தாலும் அதுவும் தவறேயாகும். காரணம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு எல்லையை வகுத்திருக்கும் போது அந்த எல்லையை மீறுவதும் தவறு தானே! இதைத் தான் சில முஸ்லிம்கள் புரிந்து கொள்வதில்லை.

இஸ்லாத்தின் விளக்கங்களைப் புரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்கின்ற முல்லாக்களும் புரிவதில்லை. முன்னோர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா? என்று கூறி அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாற்றமான காரியங்களைச் செய்வதற்கு வழி வகுத்து விடுகிறார்கள்.

மேலும் நன்மையில் நடுநிலையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. அவ்வாறு நடுநிலையைப் பேணி நிதானத்தைக் கடைப்பிடிக்கும் போது தான் அல்லாஹ்வுடைய பேரருள் கிட்டி சொர்க்கத்தையும் அடைய முடியும். அதற்கு மாற்றமாகச் செயல்படும் போது துன்பமே வந்து தொல்லை தரும் என்கிறது இஸ்லாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
إِنَّ الدِّينَ يُسْرٌ وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ

“நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தம் மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அவரை அது மிகைத்து விடும். எனவே நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள். நற்செய்தியையே சொல்லுங்கள். காலையிலும், மாலையிலும், இரவிலும் சிறிது நேரம் (அல்லாஹ்விடத்தில்) உதவி தேடுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள்.

அறி :அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-39

«لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا،

“உங்களில் யாரையும் அவரின் அமல்கள் ஈடேற்றம் அடையச் செய்யாது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பொழுது தோழர்கள், “நீங்களுமா?” என்றார்கள். அதற்கு, “நானும் அடைய முடியாது. என்றாலும் அல்லாஹ் என்னைத் தன்னுடைய அருளைக் கொண்டு போர்த்தினாலே தவிர! எனவே நேர்மையாக, நிதானமாக நடந்திடுங்கள்” என்றார்கள்.

(நூல்: புகாரி-5673)

நம்முடைய எல்லா நல்ல காரியங்களிலும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் போது நிச்சயமாக அது சிரமமில்லாத வகையில் தான் அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த அடிப்டையில் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோமாக!

பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானீ