Tamil Bayan Points

45) 55 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

55 வது வசனம்

55. அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்.

(திருக்குர்ஆன் : 36 : 55.) 

கற்பனைக்கு எட்டாத சொர்க்கத்து இன்பங்கள்

இந்த வசனம் சொர்க்கவாசிகளுடைய இன்பத்தின் உச்சகட்டத்தை கூறுகிறது.

இவ்வசனத்தில் “(தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்” என்பதை குறிப்பதற்கு அரபியில் “ஃபீ ஷூகுலின் ஃபாகிஹூன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஷூகுல் என்றால் வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்தாமல் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பதாகும்.

இந்த அடிப்படையில் சொர்க்கவாசிகள் இன்பத்தில் மட்டுமே திழைத்து கொண்டிருப்பார்கள். வேறு எதிலும் அவர்களுடைய கவனம் செல்லாது. இதற்கு நிகராக வேறு எந்த இன்பமும் கிடையாது. உலகத்தில் மனிதர்கள் என்னதான் இன்பங்களை அனுபவித்தாலும் அதில் பல தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் சொர்க்கவாசிகளுக்கு இது போன்று எவ்வித தங்குதடையும் இல்லாத முழுமையான இன்பம் மட்டுமே கிடைக்கும். அதை குறிப்பதற்குதான் “ஷூகுல்” என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சொர்க்கத்து இன்பங்கள் நம் கற்பனைக்கு கூட எட்டாத அளவிற்கு இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்களும் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி-3244.

சொர்க்கத்து இன்பங்களில் சிறிதளவை நாம் அடைந்தால் கூட இவ்வுலகில் பட்ட துன்பங்களனைத்தும் மறந்ததவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!” என்று பதிலளிப்பார்.

அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை” என்று கூறுவார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5407.

இவ்வுலகில் எந்த செல்வந்தரும் வாழ்ந்திராத பகட்டான வாழ்வு சொர்க்கத்தில் உண்டு.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும்.

(அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும்.

(சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி-3245.

பொதுவாக ஆறுகள் என்றாலே அது இயற்கையாகவே மனிதர்களுக்கு இன்பம் தரக்கூடியதாகும். எனவேதான் சுற்றுலா செல்பவர்கள் ஆற்று பகுதிகளை நோக்கி அதிகமாக செல்கிறார்கள். இத்தகைய ஆறுகளை விட சிறந்த தூய்மையான ஆறுகளை சொர்க்கத்தில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?

(அல்குர் ஆன் : 47:15.) 

உலகத்தில் அனைத்திலும் கலப்படம் நிறைந்திருக்கும் நிலையில் எந்தவொன்றிலும் துளிக்கலப்படம் இல்லாத தூய்மையானவை சொர்க்கத்தில் உண்டு என மேற்கண்ட வசனம் கூறுகிறது. இவை தவிர விலைமதிப்பற்ற சொகுசு அறைகளும் சொர்க்கத்தில் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.

இதை (அபூ மூசா) அப்துல்லாஹ் பின் கைஸ் அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-3243

மேலும் விரும்பிய உணவுகளையும் அங்கே சாப்பிடலாம். இவ்வுலகம் போன்று சாப்பிட்டவை கழிவுகளாக வெளியேறாது. மாறாக கஸ்தூரி மனம் கொண்ட வியர்வையாக வெளியேறிவிடும். அவர்களுடைய ஏப்பமும் கஸ்தூரி மனம் கொண்டதாக இருக்கும். அதன் பிறகு மறு உணவிற்கு அவர்கள் தயராகிவிடுவார்கள்.