Tamil Bayan Points

43) 51, 52 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

51, 52 வது வசனம்

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

(அல்குர்ஆன் : 36 : 51,52.) 

ஸூர் ஊதப்படுவதும் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவதும்

51 வது வசனத்தில் ஸூர் ஊதப்படும் போது மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவது பற்றி கூறப்படுகிறது.

இது அல்லாத மற்ற சில வசனங்களிலும் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவது பற்றி இடம் பெற்றுள்ளது.

எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக. (அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள்.

(அல்குர் ஆன் : 54:6, 7.)

பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.

(அல்குர் ஆன் : 70:43.) 

மண்ணறைகளிலிருந்து எழும்போது பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் எழுவார்கள் என்றும் பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் எழுவார்கள் என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மண்ணறை வேதனை உண்டா?

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 52 வது வசனத்தில் “எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள்.” என்றும் கூறப்படுகிறது. பொதுவாக மண்ணறையிலிருந்து எழும் அனைவரும் இவ்வாறே கேட்பார்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் இவ்வாறு கேட்பது ஆச்சரியமல்ல. ஏனெனில் அவர்கள் நிம்மதியாக மண்ணறையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை யாரேனும் எழுப்பினால் இவ்வாறுதான் கேட்பார்கள்.

ஆனால் இறைமறுப்பாளர்கள் இவ்வாறு கேட்பது ஆச்சரியமானதாகும். ஏனெனில் அவர்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவர். வேதனையிலிருந்து எழும் போது எங்களை உறக்கத்திலிருந்து ஏன் எழுப்பினீர்கள்” என்று கேட்கிறார்கள்.

இதை ஆதாரமாக கொண்டு சிலர் மண்ணறை வேதனை கிடையாது என்றும் வாதிடுகின்றனர். எனவே இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இவ்விஷயத்தில் இறைமறுப்பாளர்கள் சொல்வதை நாம் கவனிக்கக்கூடாது. ஏனெனில் ஒரு உலகத்திலிருந்து வேறொரு உலகத்திற்கு அவர்கள் செல்லும் போது முந்தைய உலகத்தில் நடந்த நிகழ்வை மறந்துவிடுவர். இதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது..

மறுக்கமுடியாத உடன்படிக்கை.

“ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

(திருக்குர்ஆன் : 7:172, 173.) 

நாம் அனைவரும் இவ்வுலகில் பிறப்பதற்கு முன் இந்த உடன்படிக்கை நடந்தது என்று மேற்படி வசனம் கூறுகின்றது. எனினும் நம் யாருக்கும் இந்த உடன்படிக்கை நடந்தது நினைவிலிருக்காது. அந்த உலகத்திலிருந்து இவ்வுலகத்திற்கு வந்த பிறகு அங்கு நடந்த அனைத்தையும் மறந்துவிட்டுளோம் என்பதே இதற்கு காரணம். நமக்கு நினைவில்லாததால் இப்படியொரு உடன்படிக்கை நடைபெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதே போன்றுதான் மண்ணறை உலகிலிருந்து எழுப்பப்படும் போது அங்கு அவர் அனுபவித்த துன்பம் அவருக்கு நினைவில் இருப்பதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஷைத்தானை வணங்கக் கூடாது என்ற உடன்படிக்கை

மேலும் ஷைத்தானை வணங்கக் கூடாது என்றும் நம்மிடம் உடன்படிக்கை எடுக்கப்பட்டது.

60,61.“ஆதமுடைய மக்களே!ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதி மொழி எடுக்கவில்லையா?”

(அத்தியாயம் : 36 : 60,61.) 

இது போன்று நம்மிடம் உடன்படிக்கை எடுக்கப்பட்டது உண்மைதான். எனினும் யாருக்கும் இது நினைவிருக்காது. ஏனெனில் வேறு உலகிற்கு நாம் வந்துவிட்டோம். இதே போன்றுதான் இறைமறுப்பாளர்களும் நினைவின்றி மண்ணறையில் உறக்கத்திலிருந்து தங்களை எழுப்புவதாக கூறுகின்றனர்.

மனிதர்கள் மறந்துவிட்ட பல விஷயங்கள்

உலகத்தில் வாழ்ந்தவர்களை மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவர்களிடம் எவ்வளவு காலம் உலகில் தங்கியிருந்தீர்கள் என்று கேட்பான்.

அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ, அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.

(அல்குர் ஆன் : 79 : 46.)

பல வருடங்கள் உலகில் வாழ்ந்தவர்கள் ஒரு நாளின் காலைப் பொழுது அல்லது மாலை பொழுது மட்டுமே தாங்கள் வாழ்ந்ததாக கூறுகிறார்கள். இது உண்மையல்ல. ஏனெனில வேறொரு உலகிற்கு சென்றதால் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களை மறந்துவிட்டார்கள். குற்றவாளிகள் இதை விட குறைவாக கூறுவார்கள்.

அந்த நேரம் வரும் போது சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

(அல்குர் ஆன் : 30:55.) 

சிறிது நேரம்தான் தாங்கள் வாழ்ந்தோம் என்று குற்றவாளிகள் கூறுவது உண்மையல்ல. ஏனெனில் உலகில் நடந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

மேற்கண்ட விஷயங்களை மறந்ததை போலவே மண்ணறை எனும் உலகத்திலிருந்து மறுமை எனும் மற்றொரு உலகத்திற்கு அவர்கள் செல்லும் போது மண்ணறையில் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அதனால்தான் தாங்கள் வேதனை செய்யப்பட்டோம் என்பதை அறியாமல் ‘எங்கள் உறக்கத் தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்கின்றனர்.

அதிர்ச்சியால் மறந்துவிடும் மனிதன்

மேலும் மனிதர்கள் ஏதாவது அதிர்ச்சியான நிகழ்வை சந்தித்தால் முன்னர் நடந்ததை மறந்துவிடுகின்றனர். கடந்த காலங்களில் தான் எங்கே இருந்தோம் என்பதையும் அறியாமல் “நான் இப்போது எங்கே இருக்கிறேன்” என்றும் கேட்கின்றனர். மறுமைநாளும் இது போன்ற பேரதிர்ச்சியான சம்பவமாகும். அந்த அதிர்ச்சியில் தாய் தான் பாலூட்டிய குழந்தையை கூட மறந்துவிடுவாள்.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(அல்குர் ஆன் : 22:1, 2.) 

இத்தகைய பேரதிர்ச்சியால் மண்ணறைவாசிகள் தங்களுக்கு நடந்ததை மறந்து விடுகின்றனர்.

மண்ணறை வேதனை பற்றிய குர்ஆன் வசனங்கள்.

யாசீன் அத்தியாயத்தின் 50, 51 வது வசனத்தை படித்துவிட்டு மேற்கண்ட விளக்கத்தை அறியாமல் சிலர் மண்ணறை வேதனை இல்லை என்று வாதிடுகின்றனர். அது தவறாகும். மேலும் மண்ணறை வேதனை குறித்து பேசக்கூடிய வசனங்கள் நபிமொழிகளில் மட்டுமின்றி குர்ஆனிலும் உள்ளது.

காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

(அல்குர்ஆன் : 40 : 46.) 

மேற்கண்ட வசனத்தில் காலையிலும் மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுவார்கள் என்று கூறப்படுவது மண்ணறை வேதனையையே குறிக்கிறது. ஏனெனில் இதற்கு பிறகு அந்த நேரம் (மறுமைநாள்) வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்கள் வேதனை செய்யப்படுவர் என்று கூறப்படுகிறது. எனவே முதலில் உள்ள வேதனை மண்ணறை வேதனைதான் என்பதை அறியலாம்.

மேலும் சில வசனங்களும் மண்ணறை வேதனை பற்றி கூறுகிறது.

(ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.

ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

(திருக்குர்ஆன் : 8:50, 51, 52.) 

இவ்வசனங்களில் ஃபிர்அவ்னின் ஆட்களை தண்டித்ததை போன்றே இறை நிராகரிப்பாளர்களையும் தண்டிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணறை வேதனை இறை நிராகரிப்பாளர்களுக்கும் உண்டு என்பதை அறியலாம். எனவே குர்ஆனில் மண்ணறை வேதனை குறித்த வசனங்கள் இல்லை என்று கூறுவது தவறாகும்.

மண்ணறை வேதனை பற்றிய ஹதீஸ்கள்

இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமின்றி முஸ்லிம்களில் சிலருக்கும் மண்ணறை வேதனை உண்டு என்பதை நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை.

  • ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்;
  • இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்” எனக் கூறிவிட்டு,

ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் புகாரி-1361

பொதுவாக மண்ணறை வேதனை இறைநிராகரிப்பாளர்களுக்கு மட்டும்தான் இருக்கும். எனினும் மறைவாக சிறுநீர் கழிக்காவிட்டாலும் அல்லது கோள் சொல்லி திரிந்தாலும் முஸ்லிமாக இருப்பினும் அவருக்கு மண்ணறை வேதனை உண்டு என்பதை இதன் மூலம் அறியலாம். இது அல்லாத மற்ற சில ஹதீஸ்களும் மண்ணறை வேதனையை உறுதிபடுத்துகின்றது.