Tamil Bayan Points

41) 48, 49 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

48, 49 வது வசனம்

48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று அவர்கள் கேட்கின்றனர்.

49. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும்.

(அல்குர்ஆன் : 36 : 48,49.)

இறைத்தூதர்கள் மறுமைநாளை பற்றி மக்களிடம் எச்சரித்த போது இறைமறுப்பாளர்கள் அதை பரிகாசம் செய்யும் விதமாக “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று கேட்டனர். இதற்கு 49 வது வசனத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான். அது எதிர்பார்க்காத விதத்தில் ஏற்படும் பெரும் சப்தம் என்று கூறுகிறான். அது அவர்களை அழித்துவிடும் என்று எச்சரிக்கையும் செய்கிறான். இது போன்று பல நேரங்களில் அவர்கள் கேட்டுள்ளதாக குர்ஆன் கூறுகிறது.

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிகழும்?)” என்று கேட்கின்றனர்.

நரகத்திலிருந்து தமது முகங்களையும், முதுகுகளையும் அவர்கள் தடுக்க முடியாத, உதவி செய்யப்படாத – நேரத்தை (ஏக இறைவனை) மறுப்போர் அறிய வேண்டாமா?

மாறாக, அது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

(முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே, கேலி செய்தோரைச் சுற்றி வளைத்தது.

(அல்குர்ஆன் : 21 : 38,39,40,41.) 

மறுமைநாள் எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் திடீரென்று அது அவர்களிடம் வரும்போது திகைத்து, அழிந்து விடுவார்கள். எந்த அவகாசமும் அவர்களுக்கு அளிக்கப்படாது என்று அல்லாஹ் பதிலளிக்கிறான்.

மேலும் மறுமைநாளை அவசரமாக தேடினாலும் அது அவர்களை அடைந்தே தீரும் என்று பின்வரும் வசனத்தில் பதிலளிக்கிறான்.

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று அவர்கள் கேட்கின்றனர்.

“நீங்கள் அவசரமாகத் தேடுபவற்றில் ஒரு பகுதி உங்களை வந்தடையும்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் : 27 : 71,72.) 

மறுமைநாளை பற்றிய அறிவு யாரிடம் உள்ளது?

மேலும் மறுமைநாள் எப்போது நிகழும் என இறைமறுப்பாளர்கள் கேட்டபோது அது எந்த நாளில் நிகழும் என நபி (ஸல்) அவர்களும் அறியமாட்டார்கள். அல்லாஹ் மட்டும்தான் அறிவான் என்றும் அல்லாஹ் பதிலளிக்கிறான்.

அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் : 67 : 26.)

(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.

(அல்குர்ஆன் : 79 : 42,43,44,45.)

எனவே மறுமைநாள் எந்த தினத்தில் நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

மறுமைநாளின் அடையாளங்கள்

மறுமைநாளை யாரும் அறியாவிட்டாலும் அது அருகில்தான் உள்ளது என குர்ஆன் அறிவிக்கிறது.

அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.

(அத்தியாயம் : 70 : 6,7.) 

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்று துல்லியமாக நமக்கு சொல்லப்படாவிட்டாலும் அந்நாள் நெருங்கி வருவதற்கான சிறிய மற்றும் பெரிய அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். சிறிய அடையாளங்களில் பல இன்றைய காலத்தில் நிகழ்ந்தும் விட்டது.

கடைவீதிகள் பெருகிவிடும்

‘கடைவீதிகள் பெருகும் வரை மறுமைநாள் நிகழாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் அஹ்மத்-10306

அக்கிரமக்காரர்களும் ஆடையணிந்து நிர்வாணியான பெண்களும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-4316.

கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை மக்கள் அங்கீகரிப்பதில்லை. எனினும் தற்போதைய காலத்தில் இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். இதுவும் மறுமைநாளின் சிறிய அடையாளங்கள் நிறைவேறிவிட்டதை உணர்த்துகிறது.

தான் மரணிக்கவேண்டுமென மனிதன் விரும்புவான்

மற்றொரு அடையாளத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, “அந்தோ! நான் இவரது இடத்தில் (கப்றுக்குள்) இருக்கக் கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை யுக முடிவு நாள் வராது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5572.

இந்த முன்னறிவிப்பு இன்றைக்கு மெய்யாகிவிட்டது. அதிகமான மக்கள் மரணத்தை தேடி தற்கொலை செய்து கொள்கிறார்கள். வாழ்வில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லை இன்ன பிற கஷ்டங்களை தாங்க இயலாமல் தான் மரணித்து விட்டால் தனக்கு நிம்மதியாக இருக்குமே என பலரும் விரும்புகின்றனர். இதுவும் மறுமைநாள் நெருங்குவதை மெய்ப்படுத்துகிறது.

இப்படி பல அடையாளங்களை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.