Tamil Bayan Points

41) ஆயுதங்களே அறியாத அப்பாவிகளா?

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

41) ஆயுதங்களே அறியாத அப்பாவிகளா?

நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்கள் அனைத்தும் மற்றவர்களால் நிகழ்த்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டது என்றால் முஸ்லிம்கள் ஒன்றுமே செய்யாத அப்பாவிகளா? தீவிரவாதத்தை நினைத்துக்கூடப் பார்க்காத புண்ணிய ஆத்மாக்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நாம் கூறுவது என்னவென்றால், முஸ்லிம்களும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். எல்லா சமூகத்திலும் சிலர் இருப்பதைப் போல இங்கும் சிலர் இருக்கிறார்கள்.

அந்தச் சிலரை தீவிரவாதிகள் என்று சொல்லுங்கள், தனிமைப்படுத்துங்கள் தண்டனைக் கொடுங்கள். அதை விட்டு விட்டு அனைத்து முஸ்லிம்களையும் ஏன் அவர்களோடு சேர்த்துப் பார்க்கிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி.

தீவிரவாதப் பாதையில் பயணிக்கும் அந்த ஒரு சிலருக்கு முஸ்லிம்கள் யாரும் ஆதரவுகூடத் தெரிவிப்பதில்லை. கோவை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஒரு வழக்கறிஞரைக் கூட முஸ்லிம்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. அரசாங்கச் செலவில் நியமிக்கப்பட்டவர்கள்தான் அவர்களின் வழக்கை நடத்தினார்கள்.

தீவிரவாதத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு தருவதாக இருந்தால் கோவை குண்டு வெடிப்புக் குற்றவாளிகளுக்கு அது கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில் அனைவரும் ஒத்துக் கொள்கிற ஒரு நியாயம் அதன் பின்னணியில் இருந்தது.

காவிப்படையும் காக்கி உடையும் சேர்ந்து கொண்டு 19 முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாக துடிக்கத் துடிக்கச் சுட்டுத் தள்ளினார்கள். முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை சூறையாடினார்கள். அரசு மருத்துவமனை எதிரில் காவல்துறையின் கண்களுக்கு முன்னால் அப்பாஸ் என்ற இளைஞனை எரித்துக் கொலை செய்தார்கள்.

மருத்துவமனைக்குள் கொண்டு சென்றபோது வெறியர்களின் மிரட்டலால் அவனுக்கு வைத்தியம் பார்க்க மறுத்தார்கள். இத்தனை பெரிய கொடுமைகள் நடந்தும் ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ, யாரும் அவர்களுக்கு எந்த நியாயத்தையும் வழங்கவில்லை.

குற்றவாளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஒரு ஆறுதல்கூடச் சொல்லவில்லை. யார் மீது முஸ்லிம்கள் விரல் நீட்டி குற்றம் சுமத்தினார்களோ, அந்த காவலருக்கு பட்டயம் வழங்கி கௌரவித்தது கருணாநிதியின் திமுக அரசு.

அமைச்சர்கள் வந்து சந்தித்திருந்தாலே, முஸ்லிம்கள் சமாதானம் அடைந்திருப்பார்கள். அதற்குக் கூட வழியில்லாமல் வாசலை இறுகச் சாத்திக் கொண்டார்கள் ஆட்சியாளர்கள். அன்றைய தமது புதிய கூட்டாளியான பாஜகவின் மனம் கோணி விடக்கூடாது என்பதற்காக கொடூரமான ஒரு மௌனத்தைக் கடைபிடித்தது திமுக.

இந்தக் கொடுமைக்கு பழி தீர்ப்பதற்காகத் தான் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் கோவையில் பாஜகவின் தேர்தல் பிரச்சார மேடை அருகிலும் மேலும் பல இடங்களிலும் வெடித்த சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் கூட 19 பேர் படுகொலையின் பதிலடியாகத் தான் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என காவல்துறையே ஒத்துக் கொண்டது.

இப்படி ஒரு ஏற்கத் தகுந்த காரணம் இருந்தபோதும் முஸ்லிம்கள் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை. சம்பந்தப் பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய முன்வரவில்லை. இவர்களா தீவிரவாதத்தின் பங்காளிகள்? என்பதை கொஞ்சம் நெஞ்சில் கை வைத்து யோசித்துப் பாருங்கள்.

தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் அதிக பாதிப்பு முஸ்லிம்களுக்குத் தான். ஏனெனில், மற்றவர்கள் செய்தால் தப்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. முஸ்லிம்கள் செய்தால் சட்டத் துறை, காவல் துறை, நீதித் துறை என அனைத்து மட்டத்திலும் அவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வு தப்பிச் செல்வதற்குரிய எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை.

சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்றாலே, முஸ்லிமென்றால் சாகடித்து விடுவார்களோ என்று அஞ்சும் நிலைதான் இங்குள்ளது.

2001 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டார் காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குரு. இவருக்கு மரண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் வரிகளைப் படித்தால் உலகமே வியந்து போகும்.

குற்றவாளி என்று கூறி தண்டனை கொடுப்பது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் மரபு. உலகிலே நிரபராதி என்று கூறிவிட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஒரே மனிதன் அப்சல் குருவாகத்தான் இருப்பார்.

உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், அப்சல் குருவை குற்றவாளி என்பதற்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. தீவிரவாத இயக்கங்களுடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பதும் நிரூபணமாகவில்லை.

ஆயினும் மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

இவருக்கு முன்பே மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பலர் ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டு காத்திருந்தனர். அதையெல்லாம் கிடப்பில் போட்ட மத்திய அரசு இவரது மனுவை மட்டும் உடனடியாகப் பரிசீலித்து நிராகரித்து, தூக்கில் போட உத்தரவிட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஜாமீன், பரோல், சட்ட உதவி என எந்தவொன்றும் முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படுவதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.

எதையாவது செய்து மாட்டிக் கொண்டால் அல்லல்படுவோம் என்பதை அறிந்துகொண்டே தீவிரவா தத்தைத் தேடிப் போவார்களா? முஸ்லிம் என்றாலே கூடுதலாக தண்டிக்கப்படும் சூழலில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாதே என்று அச்சப்பட மாட்டார்களா?

அதைவிட சமூக அமைப்பில் தீவிரவாதி தீவிரவாதி எனும் அவப் பெயருடன் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு கொடுக்கல் வாங்கலில் தள்ளி வைக்கப்பட்டு அதனால் ஏற்படும் மன உளைச்சலை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்களா? என்பதை நியாய உணர்வோடு சிந்தனை செய்து பாருங்கள்.

அமைதியை நிலை நாட்டவே ஆயுதப் பிரயோகம், போர்கள்

இஸ்லாமிய மார்க்கம் மக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள அரசுகளுக்கு ஆயுதப் பிரயோகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. குற்றங் களுக்கு தண்டனை வழங்குவதும், அநீதிக்கெதிரான போர்களை நடத்து வதும் அந்த வகையில் உள்ளதுதான்.

குர்ஆனில் அவர்களை வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று கூறப்படும் செய்திகளை எடுத்துக் கொண்டு, இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களை கொல்லச் சொல்வதாக சிலர் கூறி வருகின்றனர். குர்ஆனில் கூறப்படும் இதுபோன்ற கட்டளைகள் யாவும் வீதிகளுக்கும், பொதுமக்கள் புழங்கும் சந்தைகளுக்கும் சொல்லப்பட்டதல்ல.

எதிரிகளோடு மோதும் போர்க் களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம். நமக்கும் அண்டை நாட்டுக்கும் இடையில் சண்டை நடந்தால் நம் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நாம் என்ன சொல்வோம்? நமது பிரதமர் என்ன சொல்வார்? அதைத்தான் குர்ஆன் கூறுகிறது.

களத்திற்கு வந்து விட்டால் கனிவு காட்டக் கூடாது. சாதுர்யமாகக் காய் நகர்த்தி எதிரியின் கழுத்தை வெட்டி வீச வேண்டும். இரக்கப்பட்டால் எதிரி நம்மை வீழ்த்தி விடுவான். இப்படித் தானே அனைவரும் பேசுவோம். இதைத்தான் இஸ்லாமும் பேசுகிறது.

வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று கூறும் வசனங்களின் முன்பின் தொடர்களைச் சேர்த்துப் படித்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும்.