Tamil Bayan Points

41) அருவருப்பான பேச்சு

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

அருவருப்பான பேச்சு

இன்று எதை எடுத்தாலும் ஆபாசம். எங்கும் ஆபாசம். எதிலும் ஆபாசம். நீரின்றி உலகில்லை என்பதை மாற்றி ஆபாசமின்றி உலகில்லை என்று சொல்லுமளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைப் போன்று ஆபாசம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. டிவியை திறந்தால் ஆபாசம். வெளியே நடமாடினால் விதவிதமான ஆபாச போஸ்டர்கள்தான் கண்ணில் படுகின்றன.

பஸ்ஸில் ஏறினால் அங்கேயும் ஆபாச மழை காட்சியாகவும் பாடலாகவும் பொழிகின்றது இவ்வாறான ஆபாச காட்சிகளை கண்டு கழிக்கும் மக்களின் பேச்சில் ஆபாசம் இல்லாமலிருக்குமா? மற்றவர்கள் எப்படியோ? ஆனால்ஒரு முஸ்லிம் தனது நாவை மற்ற தீயவற்றிலிருந்து பாதுகாப்பதை போன்று இந்த அருவருப்பான. ஆபாசமான பேச்சிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். 

யார் ஆபாசமாக பேசுகின்றார்களோ அவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவர்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம். ஒருவர் டபுள் மீனிங்கில் பேசுவார் என்று தெரிந்தால் அவரை சுற்றி எப்பவும் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. 

குறிப்பாக இளைய பருவத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி பேச ஆரம்பித்தால் அவர்களிடையே ஆபாசமில்லாத பேச்சை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. கொச்சை கொச்சையாய் வசனங்களை அள்ளி தெரிக்கின்றனர். இது போன்ற ஆபாசம் நம்முடைய பேச்சில் மட்டுமல்ல எதிலும் இருக்க கூடாது என்று இறைவன் தடை செய்கின்றான்.

நீதி நன்மை மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை தீமை மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான் நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

(அல்குர்ஆன்:16:90.) 

ஒரு சமயம் நபிகளாரை யூதர்கள் திட்டிவிடுகிறார்கள் இந்நேரத்தில் ஆயிஷா ரலி அவர்கள் எதிரிகளை திட்டுவதற்காக உங்களுக்கு மரணம் நேரட்டும் இறைவனின் கோபம் தான் உங்களுக்கு கிடைக்கும் என்ற வார்த்தையை கொட்டி விடுகின்றார்கள். இதை பார்த்து கொண்டிருந்த நபிகளார் இதையே அருவருப்பான பேச்சு என்று கண்டிக்கின்றார்கள். இனி இது போல் ஒரு போதும் பேசக்கூடாது என்றும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்கள். 

யூதர்கள் (சிலர்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், ‘(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தன்னுடைய கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்களின் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்’ என்று (அவர்களுக்கு பதில்) சொன்னேன்.

(அப்போது) நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் (அவர்களுக்கு அளித்த பதிலை) நீ கேட்கவில்லையா? (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து ‘வ அலைக்கும்’ – அவ்வாறே உங்களின் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு பதிலளித்துவிட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி-6030

நம்முடைய பார்வையில் சின்னதாய் தெரியும் இந்த வார்த்தையையே அருவருப்பானது என்று நபிகளார் கண்டிக்கின்றார்களே நாம் விடும் அருவருப்பான வார்த்தைகளை எல்லாம் எந்த பட்டியலில் சேர்ப்பது.