Tamil Bayan Points

41) அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதரே

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 29, 2022 by Trichy Farook

41) அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதரே

அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை தமிழில் தொகுத்த சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கனவிற்கு விளக்கம் கொடுத்தால் அவ்விளக்கம் அணு அளவு கூட பிசகாது என்று எழுதுகிறார்கள். நபித்தோழர்களின் விளக்கத்தை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்விரு சாராரின் கருத்தும் தவறானதாகும். ஏனென்றால் அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதர் தான். அவர்களின் விளக்கத்திலும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும் என்பதே உண்மை. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு. குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு.

அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்று விடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவதாக) மற்றொரு மனிதரும் அதைப் பற்றிக் கொண்டு அதனுடன் மேலே சென்று விட்டார்.

பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது என்று சொன்னார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மேகம் தான் இஸ்லாமாகும். சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர். குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர்.

வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது நீங்கள் இருந்து வருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார்.

அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்து விடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதரே என் தந்தை தங்களுக்கு அற்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? தவறா? என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சிலவற்றைச் சரியாக சொல்லி விட்டீர்கள். சிலவற்றைத் தவறாகச் சொல்லி விட்டீர்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் (இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப் போவதில்லை) என்றார்கள்.

நூல் : புகாரி-7046 

அபூபக்ர் (ரலி) அவர்கள் நம்மையெல்லாம் விட சிறந்தவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒருவரை மதிப்பது என்பது வேறு. மார்க்க விஷயத்தில் பின்பற்றுவது என்பது வேறு. நபித்தோழர்களில் யாருக்கும் வஹீ வரவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் இம்மார்க்கம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது.

எனவே இதிலே யாரும் எதுவும் சேர்க்க முடியாது. நபித்தோழர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால் நாம் மார்க்க சட்டதிட்டங்களில் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது. அதே நேரத்தில் அவர்களை நேசிப்பதிலும் மதிப்பதிலும் குறைவு வைத்துவிடக் கூடாது.