Tamil Bayan Points

4) ஸலாமின் ஒழுங்குகள்

நூல்கள்: சந்திக்கும் வேளையில்

Last Updated on January 2, 2020 by

ஸலாமின் ஒழுங்குகள்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் ஸலாம் சொல்வதற்கு முந்தலாம் என்றாலும் யார் முந்திக் கொள்வது சரியான முறை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு ஸலாம் கூற வேண்டும். நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் வற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மீது ஸலாம் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6232, 6234

மற்றொரு அறிவிப்பில் வயதில் சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் புகாரி 6231

வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவதே சிறந்தது என்றாலும் சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஸலாம் கூறுவதும் நல்ல முன்மாதிரியாகும்.

அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 6247

மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது

உண்ணும் போதும், பருகும் போதும், இன்ன பிற காரியங்களில் ஈடுபட்டிருக்கும் போதும் ஒருவருக்கு நாம் ஸலாம் கூறலாம். அவரும் பதில் ஸலாம் கூறலாம் ஆயினும் மலஜலம் கழிப்பவருக்கு ஸலாம் கூறக் கூடாது. அந்த நிலையில் பதிலும் கூறக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு மறுமொழி கூறவில்லை.

நூல் : முஸ்லிம் 555

ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.

ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது ஆதாரமற்ற கூற்றாகும்.

வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெண்மணி விருந்தளிப்பார். அவரிடம் விருந்து உண்ணச் செல்லும் நாங்கள் அவருக்கு ஸலாம் கூறுவோம் என்று ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 938, 6248

முஸாஃபஹா கைகுலுக்குதல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கை குலுக்குவதும் நபிவழியாகும்.

ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் 4537

ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் அங்கீகாரம் செய்கின்றனர்.

கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில் பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளிய பின் கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

அது பற்றி அவர்கள் குறிப்பிடும் போது நான் பள்ளிவாசலில் நுழைந்தேன். அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தனர். தல்ஹா (ரலி) அவர்கள் உடனே என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 4418,

நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள் உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள் என்று குறிப்பிட்டார்கள். பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன் எனவும் கூறினார்கள்.

நூல் : இப்னுமாஜா 2865

பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து ஆண்களிடம் முஸாஃபஹா செய்பவர்களாக இருந்தனர் என்பதை விளங்க முடியும்.

ஆண்கள், ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும் முஸாஃபஹா செய்வது நபிவழியில் உள்ளதாகும்.

முஸாஃபஹா செய்யும் சரியான முறையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்கள் பலர் முஸாஃபஹாச் செய்யும் போது தமது இரு கைகளால் மற்றவரின் இரு கைகளைப் பிடிக்கின்றனர். வேறு சிலர் இவ்வாறு முஸாஃபஹாச் செய்யும் போது மற்றவரின் இடது கை கட்டை விரலை அழுத்திப் பார்க்கின்றனர்.

கில்று என்பவர் இன்னும் உயிரோடு உள்ளார், அவருக்கு இடது கை கட்டை விரலில் எலும்பு இருக்காது. அவர் எந்த எந்த மனிதரின் தோற்றத்திலும் வருவார். அவரை முஸாஃபஹா செய்து விட்டால் நாம் அவ்லியா ஆகலாம் என்று மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் கட்டிய கட்டுக் கதை தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா செய்யும் சரியான முறையாகும். ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும்.

இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த நிலை ஏற்படும். இரண்டு கைகளால் செய்யும் போது இடது உள்ளங்கை மற்றவரின் வலது புறங்கையில் தான் படும். இரு பக்கமும் உள்ளங்கைகள் சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப் பொருளே ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அகராதியை மேற்கோள் காட்டி இப்னு ஹஜர், இப்னுல் கய்யிம் போன்ற பல அறிஞர்கள் ஒரு கையால் முஸாஃபஹாச் செய்வது தான் சரியான முறை என்கின்றனர். இரண்டு கைகளால் முஸாஃபஹாச் செய்ய வேண்டும். அல்லது செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸாஃபஹா என்ற பாடத்தில் இந்த ஹதீஸை புகாரி இமாம் பதிவு செய்திருந்தாலும் அந்த ஹதீஸக்கும் முஸாஃபஹாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத் தந்தனர். அப்போது எனது ஒரு கை அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே இருந்தது என்பது தான் அந்த ஹதீஸ்.

நூல் : புகாரி 6265

ஒருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர் தமது இரு கைகளால் மாணவரின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கலாம் என்பது தான் இதிலிருந்து தெரிகிறது. ஒருவரைச் சந்திக்கும் போது செய்யும் முஸாஃபஹா பற்றி இது குறிப்பிடவில்லை.

மேலும் இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும் இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாஃபஹாவுக்கு இதை ஆதாரமாகக் காட்டுவோர் ஒருவர் ஒரு கையையும் மற்றவர் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டியணைத்தல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று சொல்லும் அளவுக்கு ஏற்கத் தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இது பற்றி சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடை இழுபட நிர்வாணமாக அவரை நோக்கிச் சென்றார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்ததில்லை. உடனே அவரைக் கட்டிய முத்தமிட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 2656

ஆயிஷா (ரலி) கூறியதாக உர்வா அவர் அறிவிக்கிறார்.

உர்வா கூறியதாக ஸஹ்ரி அறிவிக்கிறார்.

ஸஹ்ரி கூறியதாக முஹம்மத் பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார்.

முஹம்மத் பின் இஸ்ஹாக் கூறியதாக யஹ்யா பின் முஹம்மத் அறிவிக்கிறார்.

யஹ்யா பின் முஹம்மத் கூறியதாக அவரது மகன் இப்றாஹீம் அறிவிக்கிறார்.

இப்றாஹீம் கூறியதாக புகாரி இமாம் அறிவிக்கிறார்.

புகாரி இமாம் கூறியதாக திர்மிதி இமாம் பதிவு செய்கிறார்.

இந்த அறிவிப்பாளர்களில் யஹ்யா பின் முஹம்மத் என்பவரும் பலவீனமானவர். அவர் வழியாக அறிவிக்கும் அவரது மகன் இப்றாஹீமும் பலவீனமானவர். பலவீனமான இருவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்படுவதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்வாணமாக கதவைத் திறக்கச் சென்றார்கள் என்பது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது. நபியின் மனைவியாக இருந்தும் ஆயிஷா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதற்கு முன்பும் பின்பும் நிர்வாணமாகப் பார்த்ததில்லை எனக் கூறியதாக அறிவிப்பதும் இச்செய்தியின் பலவீனத்தை இன்னும் அதிகரிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களைச் சந்திக்கும் போது உங்களை முஸாஃபஹா செய்வார்களா? என்று அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது சந்தித்தாலும் என்னிடம் முஸாஃபஹா செய்யாமல் இருந்ததில்லை. ஒரு நாள் என்னைத் தேடி ஆளனுப்பினார்கள். நான் வீட்டில் இருக்கவில்லை.

வீட்டுக்கு வந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பியது எனக்குச் சொல்லப்பட்டது. உடனே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது கட்டிலில் இருந்தனர். அப்போது என்னைக் கட்டியணைத்தனர். இது (முஸாஃபஹாவை விட) சிறந்ததாக இருந்தது என்று அபூதர் (ரலி) விடையளித்தார்கள் என்று ஒரு மனிதர் கூறினார்.

நூல்கள் : அபூதாவூத் 4538, அஹ்மத் 20470, 20502

அபூதர் (ரலி)யிடம் கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர் குறிப்பிடாமல் ஒரு மனிதர் அறிவித்தார் என்று அய்யூப் பின் புஹைர் என்பார் அறிவிக்கிறார்.

அந்த மனிதரின் பெயர் என்ன? அவர் நல்லவரா? கெட்டவரா? நினைவாற்றல் உள்ளவரா? இல்லாதவரா? என்பது போன்ற எந்த விபரமும் கூறப்படாததால் இது ஆதாரமாகக் கொள்ள முடியாத செய்தியாகும்.

நபித் தோழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது முஸாஃபஹா செய்வார்கள். பயணத்திலிருந்து ஊர் வந்தால் கட்டியணைப்பார்கள் என்ற அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : தப்ரானியின் அவ்ஸத்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக கதாதா அறிவிக்கிறார்.

கதாதா கூறியதாக ஷுஃபா அறிவிக்கிறார்.

ஷுஃபா கூறியதாக அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் கூறியதாக அஹ்மத் பின் எஹ்யா கூறுகிறார்.

அஹ்மத் பின் யஹ்யா கூறியதாக நூலாசிரியர் தப்ரானி பதிவு செய்துள்ளார்.

ஹதீஸின் இறுதியில் ஷுஃபா வழியாக அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் என்பவரைத் தவிர வேறு எவரும் இந்த ஹதீஸை அறிவிக்கவில்லை. அவர் கூறியதாக யஹ்யா மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்று தப்ரானி குறிப்பிடுகிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப், யஹ்யா பின் சுலைமான் அல்ஜஅபி ஆகிய இருவரும் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதாலேயே தப்ரானி இவ்வாறு கூறுகிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் என்பாரை அஹ்மத் பின் ஹம்பல், அப்துல்லாஹ் பின் முபாரக் ஆகியோர் குறை கூறியுள்ளனர். இவரது ஹதீஸில் சிறிதளவு பலவீனம் உள்ளது என்று யஃகூப் பின் பா, இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகின்றனர். மற்றும் பலர் இவரை நம்பகமானவர் எனக் கூறுகின்றனர். இவர் தனித்து அறிவிப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தான் இவரைப் பற்றிய முடிவாகும்.

யஹ்யா பின் சுலைமான் அல் ஜஅபி என்பவரைப் பற்றியும் அறிஞர்கள் இவ்வாறே முடிவு செய்துள்ளனர். எனவே இந்த ஹதீஸும் ஆதாரத்துக்கு ஏற்றதல்ல. மேலும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தொடர்பு படுத்திக் கூறப்படவில்லை. நபித்தோழர்களின் நடைமுறையாகவே கூறப்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கட்டியணைத்தல் தொடர்பாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸம் இல்லை.

மேலும் சில சமயங்களில் கட்டியணைத்தல் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும். முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சலவை ஆடையுடன் ஒருவர் செல்வார். வியர்வை நாற்றத்துடன் அழுக்கான ஆடை அணிந்தவர் அவரைக் கட்டியணைத்தால் அவர் வெறுப்படைவார். அவரது சட்டை கசங்கியதால் கோபம் கொள்வார். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இது வெறுப்பை விதைப்பதைக் காண்கிறோம்.

எனவே கை குலுக்குவதோடு நிறுத்திக் கொள்வது தான் நபிவழியாகும்.

கைகளை முத்தமிடுதல்

நாம் யாரைப் பெரியவர்கள் என்று எண்ணுகிறோமோ அவர்களின் கைகளை முத்தமிடும் மூட நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது.

மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளதற்கு சில ஹதீஸ்கள் உள்ளன. அதன் நம்பகத் தன்மையில் கருத்து வேறுபாடு உள்ளது. அவற்றை நம்பகமானது என்று வைத்துக் கொண்டாலும் அது இச்செயலுக்கு ஆதாரமாகாது.

பெரியவர்கள், மகான்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களின் கைகளை முத்தமிட்டால் அதனால் பரகத் எனும் பாக்கியம் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்க ளை மகான் என்று நம்புவது மார்க்கத்தின் கடமையாக ஆகி விடுகிறது. அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யாரை மகான்கன் என்று குறிப்பிட்டுச் சொன்னார்களோ அவர்களையும் மகான்கள் என்று நாம் நம்பலாம்.

மற்ற எவரையும் மகான் என்றோ இறைவனுக்கு நெருக்கமானவர் என்றோ முடிவு செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை. நாம் மகான் என்று நினைப்பவர் இறைவனிடம் த்தானாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே மகான் என்று இறைவனாலும் இறைத் தூதராலும் அறிவிக்கப்படாத அனைவரும் சமமான நிலையில் உள்ளவர்களே. இறைவனுக்கு இவர் நெருக்கமானவர் என்று யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியாது எனும் போது வெறும் தாடியையும், ஜிப்பாவையும் பேச்சாற்றலையும், அரபு மொழி அறிவையும் வைத்துக் கொண்டு மகான் என்று முடிவு செய்வது இறைவனது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குற்றமாகும். மகானா அல்லவா என்பதை நானல்லவா தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க நீ யார் என்று அல்லாஹ் கேட்டால் அதற்கு நம்மிடம் ஏற்கத்தக்க பதில் இல்லை.

எனவே எந்த மனிதரையும் முத்தமிட நமக்கு அனுமதி இல்லை. ஸலாம் கூறுவதும் முஸாஃபஹா செய்வதும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

காலில் விழுதல்

சிலர் இந்த எல்லையையும் கடந்து மகான்கன் என்று இவர்களாகத் கற்பனை செய்து கொண்டவர்களின் கால்களில் விழுகின்றனர். இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் : 7:206

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

(திருக்குர்ஆன்:41:37)

அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்.

(திருக்குர்ஆன்:53:62)

படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)

நூல் : திர்மிதி 1079

நான் ஹீரா எனும் ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அவ்வூர் மக்கள் ஸஜ்தா செய்ததை நான் பார்த்தேன். ஸஜ்தா செய்யப்படுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரை விட அதிக தகுதி படைத்தவர்களாயிற்றே என்று (எனக்குள்) நான் கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஹீரா ஊர் மக்கள் தமது தலைவருக்கு ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதற்கு அதிகத் தகுதி உடையவர்கள் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது சமாதியை நீ கடந்து சென்றால் அதற்கு ஸஜ்தாச் செய்வாயா? எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யாதீர்கள்.

ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தாச் செய்ய அனுமதித்திருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவருக்கு அதிகம் கடன்பட்டுள்ளனர் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : கைஸ் பின் சஅத் (ரலி)

நூல் : அபூதாவூத் 1828

முஆத் (ரலி) ஷாம் அல்லது ஏமன் நாட்டுக்கு வந்தார். அங்கே கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததைக் கண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டனர். (மதீனா வந்தததும்) அல்லாஹ்வின் தூதரே கிறித்தவர்கள் தமது மத குருக்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். (இவ்வாறு) கண்ணியம் செய்வதற்கு நீங்கள் அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று என் மனதில் எண்ணினேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

இது தான் எங்களுக்கு முந்தைய நபிமார்களின் முகமன் அவர்கள் கூறினார்கள். இதை எங்கள் நபிக்கு செய்திட நாங்கள் அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் தங்கள் வேதத்தை மாற்றியது போல் தங்கள் நபிமார்கள் மீது பொய் கூறுகின்றனர். இதை விடச் சிறந்ததை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அது தான் ஸலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்பா (ரலி)

நூல் : அஹ்மத் 18591

சமுதாயத்தில் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்றாலும் அவர் காலில் விழுவதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.