Tamil Bayan Points

04) வஹீயின் வகைகள்

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

4) வஹீயின் வகைகள்

அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். எனவே வஹீயைப் பற்றி மார்க்கத்தின் நிலை என்ன? என்பதைக் குர்ஆனிலிருந்தே நாம் ஆராய்வோம்.

வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

(திருக்குர்ஆன்:42:51.)

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.

  • வஹீயின் மூலம் பேசுவது
  • திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது
  • தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.

இதில் முதலாவதாகக் கூறப்படும் வஹீயைப் பற்றி (வஹீயின் மூலம் பேசுவது) பின்னர் விரிவாகப் பார்ப்போம். மற்ற இரண்டு வழிகளைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகின்றது என முதலில் ஆராய்வோம்.

மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் நேருக்கு நேர் உரையாடியதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மூஸா (அலை) அவர்கள் இறைவனை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் கூறியதைத் தமது செவிகளால் கேட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் எடுத்துக் காட்டுகிறது.

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

(திருக்குர்ஆன்:4:164.)

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு (இறைவன்) என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம் என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார்.

அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார்.. மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக! என்று (இறைவன்) கூறினான்.

(திருக்குர்ஆன்:7:143,144.)

இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப்பட்டவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். தூர் மலையின் வலப் பகுதியிலிருந்து அவரை அழைத்தோம். (நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.

(அல்குர்ஆன்:19:51,52.)

அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.

(திருக்குர்ஆன்:28:30.)

அங்கே அவர் வந்த போது மூஸாவே! என்று அழைக்கப்பட்டார். நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் துவா எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!

(திருக்குர்ஆன்:20:11,12,13.)

மூஸாவே என்று அழைத்து நான் தான் உம்முடைய இறைவன் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்தும், அதைத் தொடர்ந்து வரும் உரையாடல்களிலிருந்தும் இது அல்லாஹ்வின் நேரடிப் பேச்சு என்பதை விளங்கலாம்.

இது திரைக்கப்பாலிருந்து அல்லாஹ் பேசும் வகையைச் சேர்ந்த வஹீ ஆகும்.

ஒரு தூதரை அனுப்பிப் பேசுவான் என்பது இரண்டாவது வகை

என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.

(திருக்குர்ஆன்:16:2.)

வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(திருக்குர்ஆன்:22:75.)

இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளை நேருக்கு நேர் கூறுவது போல், தான் கூற விரும்புவதை வானவர் மூலம் இறைவன் சொல்லி அனுப்பியுள்ளான் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறது.

ஜக்கரியா (அலை), மர்யம் (அலை) இப்ராஹீம் (அலை) ஆகியோருக்குக் குழந்தை பிறக்கவுள்ள செய்தியை வானவர் மூலம் அல்லாஹ் சொல்லி அனுப்பினான். லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்படவுள்ள செய்தியை வானவர் மூலம் சொல்லி அனுப்பினான். பின்வரும் வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

(திருக்குர்ஆன்:3:39.)

மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

(திருக்குர்ஆன்:3:42.)

மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதி மிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

(திருக்குர்ஆன்:3:45.)

நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன் என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன்:19:19.)

அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்!என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

(திருக்குர்ஆன்:51:28.)

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.

(திருக்குர்ஆன்:11:69.)

அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம் என்றார். நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன்:15:52,53.)

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம் என்றனர்.

(திருக்குர்ஆன்:29:31.)

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். இது மிகவும் கடினமான நாள்எனவும் கூறினார்.

(திருக்குர்ஆன்:11:77.)

அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன்:15:61,62.)

வானவர் என்னும் தூதர் வழியாகத் தனது செய்திகளைச் சொல்லி அனுப்புதல் என்ற வகையில் தான் குர்ஆனும் சேரும். ஜிப்ரீல் எனும் வானவர் வழியாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் அருளப்பட்டது. திருக்குர்ஆனே இது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

(திருக்குர்ஆன்:2:97.)

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

(திருக்குர்ஆன்:26:193.)

53:56, 16:102, 81:19, 20:21 ஆகிய வசனங்களிலும் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்பட்ட விபரம் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தூதரை அனுப்பிப் பேசுதல் எனும் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

மனிதர்களுடன் அல்லாஹ் பேசுவதற்குரிய மூன்று வழிகளில் இரண்டு வழிகளைப் பார்த்தோம். நேரடியாகப் பேசுவது என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. வானவர்கள் வழியாகச் சொல்லி அனுப்புவதன் பொருளும் நமக்கு விளங்குகிறது. வஹீயின் மூலம் பேசுதல் என்பது மூன்றாவது வழியாக மேற்கண்ட 42:51 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக வஹீ எனும் சொல் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் அனைத்து வகைச் செய்திகளையும் குறிக்கும் என்றாலும் இவ்வசனத்தில் அவ்வாறு பொதுவான கருத்தைக் கொடுக்க முடியாது.

இரண்டு வகையான வஹீயை வேறு வார்த்தைகளால் கூறிவிட்டு மூன்றாவதாக வஹீயின் மூலம்எனக் கூறப்பட்டுள்ளதால் அவ்விரண்டு வகையிலும் சேராத மற்றொரு வகை வஹீயை மட்டுமே இது குறிக்க முடியும். இவ்விரு வகை தவிர ஏதேனும் வஹீ இருக்கிறது என்றால் தான் கூற விரும்புவதைத் தனது தூதரின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தல் என்பது தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

வஹீயில் இப்படி ஒரு வகை உள்ளது என்பதைத் திருகுர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

தேனீக்கள் எவ்வளவு தொலைவு பறந்து சென்றாலும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தனது கூட்டுக்கு வந்து விடும் என்பதைப் பற்றி திருக்குர்ஆன் பேசும் போது 16:68 வசனத்தில் தேனீக்களுக்கு உமது இறைவன் வஹீ அறிவித்தான் என்று கூறுகிறது.

அதாவது தான் கூற விரும்பும் செய்தியைத் தேனீக்களுக்கு உள்ளுணர்வாக இறைவன் ஏற்படுத்தினான் என இவ்வசனம் கூறுகிறது. இது போன்ற வஹீ மூலமும் இறைவன் தனது தூதர்களிடம் பேசுவான். இது மூன்றாவது வகையாகும்.

குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் இறைவன் நேருக்கு நேராகப் பேசி அருளிய செய்தியை மறுக்கின்றனர். உள்ளுணர்வு மூலம் இறைவன் அறிவிக்கும் செய்தியையும் மறுக்கின்றனர்.

வானவர் எனும் தூதர்கள் வழியாக குர்ஆன் அருளப்பட்டாலும் வானவர் வழியாக குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்திருக்கலாம். அவற்றையும் இவர்கள் மறுத்தவர்களாகின்றனர்.

இறைவன் அருளியதைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையில் இவர்கள் பெரும்பகுதியை மறுக்கின்றனர். ஹதீஸ்களைப் பின்பற்றுவோர் தான் அல்லாஹ் அருளியதை முழுமையாக நம்புகின்றனர்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் ஏற்படலாம். மனிதர்களுடன் மூன்று வழிகளில் பேசுவான் என்பதன் கருத்து இம்மூன்று வழிகளிலும் ஒவ்வொருவருடனும் பேசுவான் என்பது அல்ல. இம்மூன்று வழிகளைத் தவிர வேறு வழிகளில் பேச மாட்டான் என்பது தான் இதன் பொருள்.

சில தூதர்களிடம் இறைவன் நேருக்கு நேர் பேசினாலும், சில தூதர்களிடம் உள்ளுணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பேசினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறைவன் பேசியது ஜிப்ரீல் (அலை) வழியாக மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இம்மூன்று வழிகளிலும் இறைவன் செய்திகளை வழங்கினான் என்றால் அதற்குத் தெளிவான ஆதாரம் வேண்டுமே என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகம் முற்றிலும் சரியான சந்தேகம் தான். ஆனால் இதற்குக் குர்ஆனில் தக்க விடை உண்டு. மூன்று வழிகளில் தவிர இறைவன் எவரிடமும் பேச மாட்டான் என்பது 42:51 வசனமாகும். அதற்கு அடுத்த வசனத்தில் நமது கட்டளையில் உயிரோட்டமானதை இவ்வாறே உமக்கு நாம் வஹீயாக அறிவித்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வாறே என்பதன் பொருள் என்ன? இதற்கு முந்தைய வசனத்தில் எவ்வாறு வஹீ அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டதோ அவ்வாறே உமக்கும் அறிவித்தோம் என்பதைத் தவிர வேறு பொருள் இருக்க முடியாது.

மனிதர்களிடம் இறைவன் பேசுவதற்குரிய மூன்று வழிகளிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இறைவன் பேசி இருக்கிறான் என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய மூன்று வகைச் செய்திகளில் இரண்டை இவர்கள் மறுக்கிறார்கள் என்பதில் ஐயம் இல்லை. அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் அல்ல. அது அல்லாத செய்திகளும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றாக உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசுவதெல்லாம் வஹீ தான்

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை.

(திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை; அவர் பேசுவதெல்லாம் வஹீ என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் கூறுகிறது. இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹீ என்பது தான் இதற்கு விளக்கம் என்று இவர்கள் கூறுகின்றனர். குர்ஆன் வஹீயாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு இல்லை.

இவர் மனோ இச்சைப்படி பேச மாட்டார்என்ற வாக்கியம் பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் எடுத்துக் கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது. மனோ இச்சைப்படி பேச மாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹீ தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுவது மேலும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இவர்களாகக் கற்பனை செய்து வாதிடக் கூடாது.

மனோ இச்சையைக் கலக்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல. மாறாக அவை இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹீ எனும் இறைச் செய்தி தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹீயாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹீயாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதிட்டால் – அந்தப் பேச்சுக்கள் வஹீ இல்லை என வாதிட்டால் – மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை அவர் நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியவை எல்லாம் வஹீ என்றால் அவர்கள் செய்த சில கரியங்களை இறைவன் கண்டித்துள்ளானே? அது ஏன் என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் நியாயமானது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில முடிவுகளை இறைவன் மறுத்தது பற்றி குர்ஆனே பல இடங்களில் எடுத்துரைக்கிறது.

நான் இனிமேல் தேன் அருந்த மாட்டேன் என்று கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேனை ஹராமாக்கிக் கொண்ட போது அதை அல்லாஹ் கண்டித்துள்ளான்.

(திருக்குர்ஆன்:66:1.)

ஸைத் அவர்கள் தமது மனைவியை விவாக ரத்துச் செய்யப் போவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தில் இருந்த கருத்துக்கு மாற்றமாக அவருக்கு அறிவுரை கூறினார்கள். இதை இறைவன் கண்டித்துள்ளான்.

(திருக்குர்ஆன்:33:37.)

முக்கியப் பிரமுகரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது ஒரு குருடர் வந்து ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அலட்சியம் செய்தார்கள். இதை இறைவன் கண்டித்துள்ளான்.

(திருக்குர்ஆன்:80:1.)

இப்படி இன்னும் சில சம்பவங்கள் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியது எல்லாம் வஹீ என்றால் அதை எப்படி அல்லாஹ் கண்டிப்பான்? என்பது தான் அந்தச் சந்தேகம்.

இது நியாயமான சந்தேகம் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசுவதெல்லாம் வஹீ தான் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள் இரண்டு நிலைகளில் இருந்தன. ஒன்று இறைத் தூதர் என்ற முறையில் அமைந்தவை. மற்றொன்று மனிதர் என்ற நிலையில் அமைந்தவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசுவதெல்லாம் வஹீ என்றால் இறைத் தூதர் என்ற முறையில் அவர்கள் பேசியவை அனைத்தும் வஹீ என்பது தான் அதன் பொருள். மனிதர் என்ற முறையில் அவர்கள் பேசியவை அனைத்தும் வஹீ என்பது அதன் பொருள் அல்ல. இது அனைவரும் உள்ளூர ஏற்றுக் கொண்டுள்ள சாதாரண உண்மை தான்.

ஒரு நாட்டின் பிரதமரை எடுத்துக் கொண்டால் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் பிரதமர் என்ற அடிப்படையில் அமைந்தவை என்று யாரும் கருதுவதில்லை.

அவர் உண்பது, பருகுவது, உறங்குவது போன்ற காரியங்களைச் செய்யும் போது அவை பிரதமர் என்ற அடிப்படையில் செய்தவை அல்ல என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறோம். பிரதமர் உறங்கினார் என்று நாம் கூறினாலும் அவர் உறங்கியது பிரதமர் என்ற முறையில் அல்ல என்பது ஒவ்வொருவருக்கும் தெரிகிறது.

பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்; எதிர்க்கட்சியை விமர்சித்தார் என்ற செய்தியை நாம் அறியும் போது அவரது இந்த நடவடிக்கை கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலானது; பிரதமர் என்ற அடிப்படையிலானது அல்ல என்று நாம் பிரித்தறிகிறோம்.

அண்டை நாட்டின் மீது போர் தொடுப்போம்; பெட்ரோல் விலையைக் குறைப்போம்என்பது போன்ற அறிவிப்புகளைப் பிரதமர் செய்யும் போது அவை பிரதமர் என்ற அடிப்படையில் செய்யப்பட்டவை என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

எந்த மனிதனுக்கும் இது போன்ற இரண்டு நிலைகள் உள்ளன. அவன் ஏற்றுள்ள பணி மற்றும் பொறுப்பின் காரணமாக அவன் செய்பவை ஒரு நிலை. எந்தப் பொறுப்பும் இல்லாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் அவன் செய்பவை மற்றொரு நிலை. இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இரண்டு நிலைகள் இருந்தன.

அவர்கள் கோதுமை ரொட்டி சாப்பிட்டது, ஒட்டகத்தில் பயணித்தது, கோபப்பட்டது, கவலைப்பட்டது, அவர்களுக்குப் பசி எடுத்தது, சிரித்தது என்று பல காரியங்கள் இறைத் தூதர் என்ற அடிப்படையில் நடந்தவை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

அவர்கள் தொழுதது, நோன்பு நோற்றது, இன்னபிற வணக்க வழிபாடுகள் செய்தது, வணக்க வழிபாடுகள் தொடர்பாகப் பேசியது போன்றவை வஹீ அடிப்படையில் அமைந்தவை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம். இவ்வாறு வேறுபடுத்தி புரிந்து கொண்டால் மேற்கண்ட சந்தேகம் எழ வாய்ப்பு இல்லை.

வணக்க வழிபாடுகள் தொடர்புடையதாக இல்லாமல் அவர்கள் அளித்த அனுமதி அல்லது அவர்கள் செய்த தடை ஆகியவை மனிதர் என்ற முறையில் செய்ததா? இறைத் தூதர் என்ற முறையில் செய்ததா? என்று குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் உரிய முறையில் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பமும் வர வாய்ப்பில்லை.

அவர்கள் அனுமதி அளித்தது. தடை செய்தது போன்றவை இரண்டு வகைகளிலும் அமையும். அவர்கள் அனுமதித்தவைகளையும் தடை செய்தவைகளையும் இறைவன் கண்டிக்காமல் விட்டு விட்டால் அவை வஹீ அடிப்படையில் அமைந்தவை என்று நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களின் அனுமதியையோ, அல்லது தடையையோ அல்லாஹ் கண்டித்து விட்டால் அவை மனிதர் என்ற முறையில் செய்தவை, சொன்னவை என்று முடிவு செய்ய இயலும். எனவே இதிலும் குழப்பம் ஏற்பட வழியில்லை.

குர்ஆனில் கூறப்படாத பல விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சட்டமாக்கிய போது அந்தச் சட்டங்களை இறைவன் தனது சட்டம் என்று அங்கீகரித்துள்ளான். (இது பின்னர் விபரமாக விளக்கப்பட உள்ளது) நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் பேசிய அனைத்தும் வஹீ என்பதற்கு இவையும் ஆதாரமாக அமைந்துள்ளன.

வேதமும் ஞானமும்

அல்லாஹ்விடமிருந்து வேதம் மட்டுமே அருளப்பட்டது என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. மாறாக வேதத்தையும், ஞானத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

(திருக்குர்ஆன்:2:129.)

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

(திருக்குர்ஆன்:2:151.)

அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன்:2:231.)

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:3:164.)

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். உமக்கு எந்தத் தீங்கும் அவர்களால் தர முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

(திருக்குர்ஆன்:4:113.)

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:33:34.)

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:62:2.)

நபிகள் நாயகத்துக்கு மட்டுமின்றி மற்ற இறைத் தூதர்களுக்கும் வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க திருக்குர்ஆன் : 3:48, 3:81, 4:54, 5:110)

இறைவன் எந்த ஒரு வார்த்தையையும் தேவையில்லாமல் பயன்படுத்த மாட்டான் என்று நம்பி, திருக்குர்ஆனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து மேற்கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்தால் இறைவன் வேதத்தை மட்டும் நபிகள் நாயகத்துக்கு அருளவில்லை; வேதத்துடன் ஹிக்மத் எனும் ஞானத்தையும் சேர்த்து அருளி இருக்கிறான் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொள்ளலாம்.

இதற்குத் தக்க பதில் கூற முடியாதவர்கள் வேதத்தையும் ஞானத்தையும் என்ற சொற்றொடர் ஞானமுடைய வேதம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உளறுகின்றனர்.

ஞானமுடைய வேதம் என்பதை வேதத்தையும் ஞானத்தையும் போன்ற வார்த்தைகளால் மூளையுள்ள எவரும் கூற மாட்டார். ஞானமிக்க வேதம், ஞானம் நிரம்பிய வேதம் என்பது போன்ற வார்த்தைகளால் தான் இக்கருத்தைத் தெரிவிப்பார். வேதமும் ஞானமும் என்பது இரண்டு பொருட்களைத் தான் குறிக்கும் என்பது கூட இவர்களுக்கு விளங்கவில்லை.

மேலும் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்களும் இவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

குர்ஆனைப் பற்றிக் கூறும் போது குர்ஆனை இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுவது போல் 4:113 வசனத்தில் குர்ஆனையும் இறக்கினோம். ஞானத்தையும் இறக்கினோம் என்று கூறுகிறான். அப்படியானால் குர்ஆன் போலவே ஞானமும் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

வேதத்தை மட்டுமின்றி அதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஞானத்துடனும் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இறைத் தூதர்கள் அளித்த விளக்கமும் மார்க்க ஆதாரம் என்பதற்கு மேற்கண்ட வசனங்களும் சான்றுகளாகவுள்ளன.

இறைத் தூதரின் நான்கு பணிகள்

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தூதுப் பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. பின் வரும் அந்த வசனங்களும் நபிகள் நாயகத்தின் ஹதீஸ்கள் அவசியம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

(திருக்குர்ஆன்:2:129.)

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

(திருக்குர்ஆன்:2:151.)

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:3:164.)

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:62:2.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

  • குர்ஆனை ஓதிக் காட்டுவது
  • தூய்மைப்படுத்துவது,
  • மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பது
  • மக்கள் அறியாதவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது

ஆகியவை அந்த நான்கு பணிகள்.

இந்த நான்கு சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.

வேதத்தை இறைவனிடம் பெற்று மக்களிடம் கொடுப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் இந்த நான்கு சொற்றொடர்களை இறைவன் கூறியிருக்க மாட்டான். வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்என்பதோடு நிறுத்திக் கொள்வான். வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியவுடன் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஆனால் வேதத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது வசனங்களை ஓதிக் காட்டுவார்; வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்றுவேதம் தொடர்பாக இரண்டு பணிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இவ்வசனங்களில் கூறுகிறான். ஓதிக் காட்டுதல் என்றால் வசனங்களை வாசித்துக் காட்டுதல் என்று புரிந்து கொள்கிறோம். வேதத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?

வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

(திருக்குர்ஆன்:29:48.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியும் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்ததாக ஆகுமே தவிர குர்ஆனைக் கற்றுக் கொடுத்ததாக ஆகாது.

ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு தூதர்கள் அவசியம் இல்லை. அந்த மொழியை அறிந்த யார் வேண்டுமானலும் அதைச் செய்ய முடியும். எனவே தேவைப்படும் வசனங்களுக்கு சொல்லாலும் செயலாலும் இவர் விளக்கம் தருவார் என்பது தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார் என்பதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டார்கள் என்பதன் கருத்து அவ்விளக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பது தான்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய திருக்குர்ஆன் எவ்வாறு வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளதோ அவ்வாறே அவர்களின் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களும் வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளன என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

குர்ஆனை முறையாகவும் முழுமையாகவும் விளங்கிட நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதை தெள்ளத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் அமைந்துள்ளன.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்பதுடன் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் அறியாதவற்றை அவர் கற்றுக் கொடுப்பார் என்றும் கூறுகிறான். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்களைத் தூய்மைப்படுத்துவார் என்றும் கூறுகிறான்.

குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை இல்லை என்றால் அதற்கு மாற்றமான பொருள் தரும் வகையில் இவ்வளவு சொற்களை இறைவன் பயன்படுத்தி நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்று கூறுவானா?

முந்தைய நபிமார்களுக்கும் ஞானம் அருளப்பட்டது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு வேதத்துடன் ஞானத்தையும் அல்லாஹ் கொடுத்து அனுப்பினானோ அது போல் மற்ற நபிமார்களுக்கும் வேதத்துடன் ஞானத்தையும் கொடுத்ததாக பல வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் வழங்கிய பின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக!

(திருக்குர்ஆன்:3:81.)

எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவுபடுத்துகிறான். அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் வழங்கிய பின்என்று இறைவன் குறிப்பிடுகிறான். நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஞானமும் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

 (திருக்குர்ஆன்:4:54.)

இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான். குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் மேலே நாம் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களைத் தான் மறுக்கிறார்கள். குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரமே என்பதற்கான சான்றுகள் இன்னும் உள்ளன.