Tamil Bayan Points

05) தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

நூல்கள்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

Last Updated on March 3, 2022 by

4. தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ‘தொழு! அறுத்துப் பலியிடு’ என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார்.

– அபூ அப்துர்ரஹ்மான், ரியாத்.

பதில்: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பயிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.

(நூல்: முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!

‘மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்’ என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.