Tamil Bayan Points

04) ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு (?)

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

அத்தியாயம் 3

ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு (?)

மனித இனம் உலகில் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்ற வினாவிற்கு சிலர் 30,000வருடங்கள் என்றும், வேறு சிலர் 2,00,000 வருடங்கள் என்றும் கூறுகின்றனர். இவைகளன்றி சில மாற்றுக் கருத்துக்களும் அதில் நிலவு கிறது. ஆனால் எவ்வளவு தொன்மை காலத்தில் மனிதன் தோன்றி இருப்பினும் வானம் இப்போது இருப்பது போல் அப்போதும் இருந்தது. அந்த வானை இப்போது நாம் பார்ப்பது போன்று அப்போதும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை மானிடர்க்கு வெறும் கண்களுக்குப் புலப்படாத அதன் குறிப் பிடும்படியான பற்பல இயற்பியல் பண்புகள் திருக்குர்ஆனுக்கு மட்டும் புலப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட இயற்பாடுகளில் இரண்டை கீழ்க்காணும் திருமறை வசனம் கூறுகிறது :

ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்தான் என்பதை நீங்கள் காணவில்லையா?

(அல்குர்ஆன்:71:15.)

இந்த வசனத்தில் முதலாவதாக வானங்களின் எண் ணிக்கை மொத்தம் ஏழு எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது வரை ஆகாயத்தின் வெளித் தோற்றம் அல்லது வடிவம் எப்படிப்பட்டது என்பதை சரியாக விளங்க முடியவில்லை. ஆகவே ஆகாயங்களின் எண்ணிக்கை என்ன என்பதை அறிவியலாளர்களால் இதுவரை திட்டமாக மதிப்பிட முடியவில்லை. எனவே இது திருக்குர்ஆனுக்குரிய எதிர்கால அறிவியல் ஆதாரமாகும்.

பேரண்டங்களின் எண்ணிக்கை

அறிவியல் உலகம் பெருவெடிப்புச் சித்தாந்தத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஆகாயம் ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடும் எனக் கருதியதில்லை. ஆனால் பெரு வெடிப்புச் சித்தாந்தத்தைப் பற்றிய அறிவியல் அறிவு வந்ததற்குப் பின்னர் நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. இப்போதைய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டிக்குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம். (பார்க்க : எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம் – பக்கம் 129-130) எப்படிப் பார்த்தாலும் ஒரே ஒரு வானம் (பேரண்டம்) எனும் கருத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருப்பது நாம் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆனுடைய அறிவியலை நோக்கிய பயணத்தின் முதல் கால்வைப்பாக இருக்குமோ என்பதற்கு காலம் பதில் சொல்லும். பேரண்டத்தின் அமைப்பைக் குறித்து திருக்குர்ஆன் மற்றொரு அரிய அறிவியல் தகவலையும் தருகிறது. அது வருமாறு :

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

(அல்குர்ஆன்:37:6.)

இத்திருமறை வசனத்திலும் வானங்கள் ஏழு இருப்பினும் நட்சத்திர அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது முதல் வானத்திலேயே ஆகும் எனத் தெளிவாகக் கூறியுள்ளது. பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது எனக் கருதும் அறிவியலாளர்கள் அவற்றுள் ஒன்று கூட நட்சத்திரங்களோ காலக்சிகளோ இருப்பதற்கு வாய்ப்பில்லை என முடிவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால் நமது பேரண்டத்தில் பல்லாயிரம் கோடானு கோடி நட்சத்திரங்களும் காலக்சிகளும் இருக்கின்றனவே! இதெப்படி எனக் கேட்டால் இது குறித்து அறிவியல் உலகில் நிலவி வரும் கருத்தை ஹாக்கிங் அவர்கள் கீழ்வருமாறு அறிமுகப்படுத்துகிறார்.

“If the universe is spatially infinite or if there are infinitely man universes there would probably be some large regions somewhere that started out in a smooth and uniform manner. It is a bit like the well-known horde of monkeys hammering away on type writers most of what they write will be garbage, but very occasionally by pure chance they will type out one of shakespears sonnets. Similarly, in the case of universe could it be that we are living in a region that just happens by chance to be smooth and uniform? At first sight this might seem very improbable, because such smooth regions would be heavily out numbered by chaotic and irregular regions. Howevere suppose that only in the smooth regions were glaxies and stars formed and were conditions right for the development of complicated self-replicating organisms like our selves who were capable of asking the question: Why is the univers is so smooth? This is an example of the application of what is known as the anthropic principle……..” (page 130) 33

அறிவியல் நூல்களை படிக்கும் வழக்கமில்லாதவர் களுக்கு மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் மேற்கோளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாகவே இருக்கும். எனவே அதன் நேரடியான மொழிபெயர்ப்பு அவர்களுக்குப் பயனளிக்காது என்பதால் இந்த மேற்கோளை மையமாக வைத்து நமது பாணியில் அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.

பிரச்சனைகளை உருவாக்கும் வினா

இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவர் தண்ணீர் என்பதன் கூட்டுப் பொருட்கள் எவை எனக் கேட்டால் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என மாணவர்கள் பதிலளிப்பார்கள். ஆசிரியர் மீண்டும் அவை என்ன விகிதத்தில் இணைந்தால் தண்ணீர் தோன்றும் எனக் கேட்டால் 2:1 என்ற விகிதத்தில் இணைந்தால் என பதில் கூறுவார்கள். இந்த வினாக்களுக்கு வேறு எந்த பதிலைக் கூறினாலும் அவை பிழையானதாக இருக்கும்.

ஆசிரியர் மீண்டும் தண்ணீர் எதற்காகத் தோன்றியது எனக் கேட்பாரேயானால் அவை உயிரினங்களின் பயன்பாட்டிற்காக என பெரும்பாலான மாணவர்கள் பதில் சொல்வார்கள். இதைப் போன்று பேரண்டம் எப்படித் தோன்றியது எனக் கேட்டால் பெரு வெடிப்பு, காலம், விரிவாக்கம், பொருட்கள் மற்றும் பற்பல விசைகளால் தோன்றியது என பதில் கூறலாம். இவை பேரண்டமாக எவ்வாறு உருப்பெற்றது எனக் கேட்டால் அதற்குரிய விதிகளால் என பதில் கூறலாம்.

இதுவரை கூறப்பட்டவைகளுக்கு அறிவியல் அடிப்படை உண்டு. எனவே வேறு பதில்களைக் கூறினால் நாம் இது வரை கண்ட அறிவியலுக்கு முரணாகும். இப்போது இன்னும் சற்று ஆழமாகச் சென்று பேரண்டம் ஏன் தோன்றியது எனக் கேட்டால் சிலருக்கு பதில் இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இப்படிக் கூறுவார்கள். “இனவிருத்தி செய்யக் கூடியதும் நம் போன்று சிந்தித்து “பேரண்டம் ஏன் இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது எனக் கேட்கும் அளவிற்கு பகுத்தறிவுள்ளதுமான உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்கு என பதிலளிக்கிறார்கள். இது ஆந்தரபிக் கோட்பாடு என அழைக்கப்படும் அறிவியலாளர்களின் கருத்துரையே (version) அன்றி அறிவியல் சித்தாந்தமன்று.

இந்த அறிவியல் கருத்துரை திருக்குர்ஆனை மெய்ப்பிக்க உதவும் தகவல் என்பதை கடைசி அத்தியாயத்தில் விளக்கியுள்ளோம். எனவே இது வரை பிரச்சனை எதுவும் இல்லை. ஆயினும் அடுத்த வினாவிற்குள் புகும் போது பிரச்சனைகள் எழுகின்றன.

இப்போது நமது வகுப்பாசிரியர் மாணவர்களை நோக்கி உயிரினங்களின் பயன்பாட்டிற்காகவே தண்ணீர் தோன்றியது எனில் அதைத் தோற்றுவித்தவர் யார் எனக் கேட்பாரேயானால் மாணவர்கள் இரண்டு விதமாக பதில்களைக் கூறுவார்கள். ஒரு பிரிவார் தண்ணீரைத் தோற்றுவித்தது விதிகளையும், பொருட்களையும் உருவாக்கிய கடவுளே எனக் கூறும் போது மறு பிரிவைச் சார்ந்தவர்கள் யாரும் எதையும் உருவாக்க வில்லை;எல்லாமே விதிகளின்படி தோன்றியவைகளே எனப் பதில் கூறுவார்கள்.

இதைப் போன்று பேரண்டம் உருவாக்கி யது யார் என்ற வினாவிற்கு சிலர் கடவுள் என்று கூறும் போது அந்த்ரபிக் கோட்பாடு கடவுளைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடித்தது. அந்த பதிலைத் தான் ஹாக்கிங் நமக்கு முன்னர் கண்ட மேற்கோள் வழியாக அறிமுகப்படுத்தினார்.

எண்ணற்ற பேரண்டங்களின் தோற்றுவாய்

மானிடத் தோற்றம் நடைபெறுவதற்கு நட்சத்திரங்கள் இருக்கவேண்டுமென்பதை ஆந்த்ரபிக் கோட்பாடு வலியுறுத்துகிறது. நட்சத்திரங்களும் அவைகளை உருவாக் கும் நெபுலாக்களும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்படும் தொகுதியே காலக்சிகள் ஆகும். காலக்சிகளும்,நட்சத்திரங் களும் தோன்ற வேண்டுமாயின் குறைந்த பட்சம் பெரு வெடிப்பும்,விரிவாக்கமும் முன் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விதத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.

மில்லியன் கணக்கான பேரண்டங்கள் தான்தோன்றித்தனமாக (ஒழுங்கும் வழவழப்பும் இன்றி) தோன்றியதாகவும், அவைகளில் ஒன்றே ஒன்று மட்டும் குழப்பமான நிலையிலிருந்து ஒழுங்கும் (regular) வழவழப்பும் (smooth) பெற்று காலக்சிகளும்,நட்சத்திரங்களும் தோன்றின என அனுமானித்தால் கூட அப்போதும் கடவுளின் தேவையை மறுக்க இயலாத நிலையே தொடரும்.

மில்லியன் கணக்கான பேரண்டங்களில் என்பதற்கு பதிலாக நூறு கோடி என்றோ அல்லது பத்து இலட்சம் கோடி என்றோ எண்ணிக்கை அதிகரித்தால் கூட கடவுளின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கும். எனவே எண்ணற்ற பேரண்டங்கள் தான்தோன்றித் தனமாக தோன்றியதாகவும் அவைகளில் ஒன்றே ஒன்றில் நட்சத்திரங்களும் காலக்சி களும் தப்பித் தவறி தோன்றி விட்டன எனவும் வைத்துக் கொண்டால் கடவுளின் தேவையைத் தவிர்த்து விடலாம் என்று எண்ணி பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது என அனுமானித்தனர்.

இது ஒரு திறமையான (?) கண்டுபிடிப்பு. ஒருவர் ஒரு கொலையைச் செய்து விட்டால் அக்கொலைக்கு அவரைப் பொறுப்பாளியாக்கி விடுவார்கள். அந்தப் பொறுப்பிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமானால் அவர் சகட்டு மேனிக்கு கண்டவரையெல்லாம் வெட்டிக் கொல்ல வேண்டும். அப்போது அவர் எல்லாவிதமான கொலைகளின் பொறுப்பி லிருந்தும் விடுவிக்கப்படுவார். ஏனெனில் அவருக்குப் பைத்தியம். எனவே அவருடைய கொலைகளுக்கு நோக்கம் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்படும்.

ஆனால் பேரண்டங்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டினாலும் நாம் வாழுகின்ற அந்தப் பேரண்டம் நோக்கமின்றி படைக்கப்பட்டதாக எவ்வளவு சிறந்த வழக்குரைஞரின் வாதத் திறமையாலும் நிரூபிக்க முடியாத அளவிற்கு இது ஒழுங்கையும், வழவழப்பையும் பெற்றுள்ளது. இதை எப்படிச் சமாளிப்பது? ஆனால் ஆந்த்ரபிக் கோட்பாட்டினர் நாம் சிந்தித்தது போன்று பைத்தியக்காரத் தனமான ஒரு பைத்தியக்காரனைக் கொண்டு பிரச்சனையைச் சமாளிக்க முயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு படுசூப்பர் ஐடியாவை (?) கண்டு பிடித்தார்கள். இதோ அந்த ஐடியா!

மந்திக்கு வந்த வாழ்வு!

ஒரு குரங்கைப் பிடித்து வந்து தட்டச்சு இயந்திரத்தில் உட்கார வைத்தால் அது சரியாக அந்த தட்டச்சு இயந்திரத்தின் விசைத் தட்டில் (Key Board) தடதடவெனத் தட்டுமாம். அப்படித் தட்டத் தொடங்கினால் பெரும்பாலான தாள்களில் எந்த வார்த்தையும் இல்லாமல் அவை வெறும் குப்பைக் கூளமாகவே (garbage) இருக்குமாம். இந்த நிலையில் ஏதேனும் ஒரு தாளில் `STAR எனும் ஒரு வார்த்தை கிடைக்க வேண்டுமானால் அதற்காக எவ்வளவு தாள்களை அக்குரங்கு வீணடிக்க வேண்டும்? அவை ஏராளமாக இருக்கும்.

இப்போது அந்தக் குரங்கு Twinkle, twinkle little star  என்ற கவிதை வரியை ஒரு தாளில் தற்செயலாக (தப்பித்தவறி) தடதட செய்ய வேண்டுமானால் எவ்வளவு தாள்கள் வீணாக்கப்படும்? ஆனால் நமது பேரண்டம் ஒரு பள்ளிச் சிறுவனால் உருவாக்கப்படும் தரத்திலன்றி நமது அறிவியலையெல்லாம் முடமாக்கிவிடும் பெருவெடிப்பு சிங்குலாரிட்டியிலிருந்து தோன்றியது. எனவே அதற்கீடான அறிவாற்றல் தேவைப்படும் ஒரு கவிதையை டைப் செய்ய வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு கவிதையைத் தேடுவது இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவதற்கு ஒப்பாகும் என்பதை விளக்கத் தேவையில்லை.

அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது. ஏனெனில் கடவுளின் பங்கைத் தவிர்த்தே ஆக வேண்டும். இருக்கவே இருக்கிறது ஷேக்பியரின் கவிதை கள். இக்கவிதைகளை மீறுவதற்கு உலகில் கவிதைகளே இல்லை. (இது உலகில் நிலவும் ஒரு பொதுவான கருத் தாகும்) எனவே அப்படிப்பட்ட கவிதை ஒரு குரங்கின் தடதட பொழுது போக்கிலிருந்து டைப் ஆகி வரவேண்டுமானால் அதனுடைய`நிகழ் தகவு (Probablity) எண்ணற்றதாகும். இதன் பொருள் அக்குரங்கு எண்ணற்ற தாள்களை வீணடித்தால் மட்டுமே அதிலிருந்து ஒரு ஷேக்பியரின் கவிதை தோன்ற முடியும் என்பதாகும்.

அந்த ஷேக்பியரின் கவிதையே நாம் வசிக்கும் இந்தப் பேரண்டம். அக்குரங்கு வீணடித்த எண்ணற்ற ஏனைய தாள்களே ஏனைய ஒழுங்கற்ற (irrogular) மற்றும் வழவழப்பற்ற (smoothless) பேரண்டங்களாகும். இப்பேரண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பேரண்டங்களாகவும் இருக்கலாம் (infinitely many universes) அல்லது அவை யாவும் ஒரு குழுவாக இணைந்திருந்தால் அந்த மகா பேரண்டம் அண்ட வெளியில் எல்லையற்றதாகவும் (spatially infinite) இருக்கலாம்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டங்களின் எண்ணிக்கையை எல்லையற்றதாகக் கூறியதற்குக் காரணம் கடவுளின் தேவையை மறுப்பதற்கே அன்றி அக்கருத்து அறிவியலை அடிப்படையாகக் கொண்டதில்லை என்பதை இப்போது விளங்கிக் கொண்டிருப்பீர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கோட்பாடு தமக்குத்தாமே முரண் பட்டதே என்பதாகும்.

காலம் இல்லையேல் நிகழ்ச்சிகளும் இல்லை!

நாம் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் பேரண்டத்தைப் போன்று சீரான, வழவழப்பான ஒரு பேரண்டம் உருவாகுவதற்குரிய நிகழ்தகவு (நடைபெறு வதற்குரிய சாத்தியக் கூறு) எண்ணற்றவைகளில் ஒன்றாகும் எனில் அது உருவாகுவதற்கு எல்லையற்ற காலமும் தேவைப்படும். ஏனெனில் காலம் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை. காலம் என்பதன் வரைவிலக்கணமே (னநகவைடி) `நிகழ்ச்சிகளின் இடைவெளி (ஒரு நிகழ்ச்சிக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கும் இடையிலுள்ள தூரம்) என்பதாகும். எனவே நிகழ்ச்சிகள் நடைபெற காலமும் இருந்தாக வேண்டும். இதிலிருந்து எண்ணற்ற பேரண்டங்கள் தோன்ற வேண்டுமாயின் அதற்காக எல்லையற்ற காலமும் தேவைப்படும் என்பது திண்ணம்.

சுருங்கக் கூறின் நமது பேரண்டம் எண்ணற்ற பேரண்டங்களுள் ஒன்றாகத் தோன்றும் நிகழ்தகவையே பெற்றுள்ளது எனில் அதன் பொருள் நமது பேரண்டம் தோன்றுவதற்கு எல்லையற்ற காலமும் தேவை என்பதாகும். இப்போது எழும் முதல் கேள்வி எல்லையற்ற காலத்தில் தோன்ற வேண்டிய நமது பேரண்டம் எப்படி இப்போதே தோன்றி விட்டது என்பதாகும்.

மேலும் இக்கோட்பாடு அறிமுகப்படுத்தியிருக்கும் நிகழ்தகவைக் கணித முறைப்படி பரிசோதனை செய்து பார்த்தால் கூட இப்பேரண்டம் தோன்றுதல் என்பது மிகவும் நிகழ்தகவற்றது very improbable- என்பதை ஹாக்கிங் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கோளில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். மேலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் இவ்வாறு அமைவதற்குக் காரணமாக இருந்த அதன் குறிப்பிடும்படியான தொடக்க நிகழ்ச்சிகள் ஏன் அப்படி நடைபெற்றது என்பதை ஒரு கடவுளின் செயலில்லாமல் விளங்கு வது கடினம் என அவர் குறிப்பிட்டு இருப்பதையும் கருத்தில் கொண்டால் ஹாக்கிங் மந்த புத்தி கூட இல்லாத இந்த மந்திக் கவிதை வாதத்தை ஏற்கவில்லை எனப் புலனாகிறது.

மந்திக் கவிதையின் அறிவியல் முரண்பாடுகள்

ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதம் காலம் எல்லையற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னர் கண்டோம். எனவே காலம் எல்லையற்றது இல்லையெனில் மந்திக் கவிதையும் இல்லை என்பது அதன் பொருளாகும். இப்போது நமது கேள்வி காலம் எல்லையற்றது எனும் வாதம் அறிவியல் சார்ந்ததா? என்பதே.

காலம் எல்லையற்றது இல்லையென்றும் அதற்கு ஒரு தொடக்கம் இருக்கிறது என்றும் பெருவெடிப்பு எந்தக் கணத்தில் தொடங்கியதோ அந்தக் கணத்தில் தான் காலம் தொடங்கியது என்பதையும் நாம் முன்னர் கண்டோம். மேலும் பெருவெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நடைபெற்றிருந்தால் கூட அதை நாம் அறிவியல் விதிகளால் கண்டுபிடிக்க இயலாது என்பதே நமது அறிவியலின் நிலை என்பதையும் முன் அத்தியாயங்களில் கண்டோம்.

இந்த நிலையில் பெருவெடிப்புக்கு முன்னால் எண்ணற்ற குழம்பிய சீரற்ற பேரண்டங்கள் தோன்றியுள்ளன என்பதை மந்திக் கவிதையின் ஆதரவாளர்கள் எந்த அறிவியல் விதிகளால் கண்டுபிடித்தனர் என்பதே நமது கேள்வியாகும்.

இறையியலை நிராகரித்து விட்டு அறிவியலை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்த மந்திக் கவிதை வாதம் உள்ளபடியே எல்லாக் கோணங்களிலும் அறிவியலுக்கு முரணாக இருப்பதால் அறிவியல் அன்பர் களால் இதை ஏற்க இயலாது என்பது ஐயத்திற்கு இடமில்லாததாகும்.

இது வரை விவாதித்த விபரங்களிலிருந்து நாம் வசிக்கும் இந்தப் பேரண்டம் கடவுளின் செயலின்றி தோன்றியிருக்க முடியாது எனக் கண்டோம். இருப்பினும் கடவுளின் பங்கு இல்லாமல் இப்பேரண்டம் தோன்றியதாக இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்க முடியுமா எனச் சிலர் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். இவர்களின் வாதத்திற்கு குறைந்த பட்சம் ஒரு வாதத்தகுதி(lawgic)யாவது இருக்க வேண்டு மாயின் பேரண்டங்களின் தோற்றம் எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எவ்வித நோக்கமும் இல்லாத நிகழ்ச்சிப் போக்கு எனும் அறிவியல் சாத்தியமற்ற ஒரு கருத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது என கூற வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் பேரண்டங்களின் தோற்றத்தில் அறிவியல் பார்வை வலியுறுத்தும் கடவுளின் பங்கை ஏற்றுக் கொள்ளும் போது பேரண்டங்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சனையே இல்லை என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே பேரண்டங்களின் எண்ணிக்கை ஏழு எனத் திருக்குர்ஆன் கூறியதிலும் எவ்வித அறிவியல் முரண் பாடும் இல்லை என்பதும் மிகத் தெளிவாகும்.

அடுக்குகளாய் அமைந்த வானம்

அத்தியாயத்தின் தொடக்கத்தில் நாம் கண்ட திருக்குர்ஆன் வசனம் (71:15) ஆகாயங்களின் எண்ணிக்கை ஏழு என்பதோடு அவை பல அடுக்குகளாய் படைக்கப்பட்டுள்ளன எனும் ஓர் அரிய அறிவியல் தகவலையும் தந்துள்ளது. பேரண்டங்களின் (ஆகாயங்களின்) எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லையென்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

சர் வில்லியம் ஹெர்ஷல் என்பவரே முதலாவதாக இத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்ட அறிவியலாளர் ஆவார். கலிலியோ கண்டுபிடித்த தொலை நோக்கியின் தொழில் நுட்பத்தில் சில மாற்றங்களைச் செய்து அதை விட முன்னேறிய மற்றொரு தொலை நோக்கியை உருவாக்கி அவர் விண்ணை ஆராயத் துவங்கினார்.

இருப்பினும் நவீன அறிவியல் உலகின் தொலை நோக்கியுடன் ஒப்பிடும் போது ஹெர்ஷலின் தொலை நோக்கியின் பார்வைத் திறம் மிகவும் குறைவாகவே இருந்ததால் பல வருடங்கள் இடைவிடாமல் முயற்சி செய்த பிறகும் ஆகாயத்தில் 688 அடுக்குகளைத் தாம் அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. பேரண்டங்களின் அடுக்குகளைப் பற்றிய சரியான தகவல் மேலும் மிகத் தாமதமாகவே அறிவியல் உலகம் கண்டுபிடித்தது.

1924ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டு பிடித்தவராவார். காலக்சிகள் என்பதைச் சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள் (ளவயச உடரளவநசள) நட்சத்திர மேகங்கள் (star clusters) அல்லது நெபுலாக்கள் இவற்றுடன் ஏராளமான ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள் (twin stars) பன்மை நட்சத்திரங்கள் (star clouds) வால் நட்சத்திரங்கள் (nutron stars) நியூட்ரான் நட்சத்திரங்கள்  கருங்குழிகள் ((Black holes) மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஓர் அண்டத் தொகுதியாகக் குறிப் பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடியென்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலாளர் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். (பக்கம் 8-9)ஆனால் நவீன கணக் கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.

(பார்க்க பக்கம் 38:39 எ ப்ரீஃப் ஹிடரி ஆப் டைம்)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர் காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம். எப்படிப் பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப் பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்கு களின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

விண்ணகத்தின் அமைப்பைப் பற்றி நாம் இது வரை விவாதித்த விபரங்களில் சில எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை சார்ந்ததாக இருப்பினும் அவற்றுள் ஒன்றாகிய நாம் வசிக்கும் இப்பேரண்டம் என்பது ஏராளமான அடுக்குகளால் உருவாக்கப்பட்டதே என்பதை நாம் இப்போதே கண்டுபிடித்து விட்டிருக்கிறோம்.

வானங்கள் அடுக்குகளால் அமைந்தவையே எனப் பொருள்படும் திருக்குர்ஆன் வசனத்தை மெய்ப்பிக்கும் அறிவியல் ஆதாரமே இதுவாகும். நவீன அறிவியல் உலகில் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளின் உதவியால் ஆகாயத்தில் அறிவியல் ஆய்வுகள் நடத்துபவர்களால் மட்டும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த அறிவியல் உண்மை ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடிந்தது என்பதை சிந்திக்கும் போது திருக்குர்ஆன் பேரண்டங்களைப் படைத்த இறைவனின் ஞானத்திலிருந்து தோன்றியதே அன்றி ஒரு மனிதனின் அறிவிலிருந்து தோன்றி இருக்க முடியாது என்பது ஓர் அறிவியல் உண்மை யாக நம்மால் மிக எளிதாக விளங்க முடிகிறது.