Tamil Bayan Points

39) 46 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

46 வது வசனம்

46. அவர்களின் இறைவனது சான்றுகளில் எந்தச் சான்று அவர்களிடம் வந்த போதும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.

(அல் குர்ஆன் : 36 : 46.)

சான்றுகளை நம்ப மறுத்தல் கூடாது

எந்த சான்றுகளுமின்றி இறைவனை நம்புவது சிலருக்கு சிரமமாக இருப்பதால் நம்பத்தகுந்த சில சான்றுகளை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்குகிறான். எனினும் சிலர் அதையும் நம்ப மறுக்கின்றனர். இதை மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.

உங்களை நம்புவதற்கு சான்றுகள் வேண்டுமென்று மக்கள் இறைத்தூதர்களிடம் கேட்கும் போது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அதை பெற்றுத் தருவார்கள். அந்த சான்றுகளை பார்த்த பிறகும் சில மக்கள் அதை நம்பியதில்லை.

நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன் : 27 : 13,14.) 

அற்புதத்தை மனதளவில் நம்பியிருந்தாலும் ஆணவம் கொண்டிருந்ததால் வெளிப்படையில் அதை நம்ப மறுக்கின்றனர்.

மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் இறைவனின் சான்றுகளை காட்டினர்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் சந்திரனை பிளந்து காட்டினார்கள். அப்போதும் அம்மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

யுகமுடிவு நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. அவர்கள் சான்றைக் கண்டால் “இது தொடர்ந்து நடக்கும் சூனியம்” எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.

(0அல்குர் ஆன் : 54:1,2,3.) 

இதுவே அதிகமான இறைமறுப்பாளர்களின் இயல்பாகும் மூஸா நபி சமுதாயமும் இவ்வாறே செய்தது.

மூஸா நபி சமுதாயம் நம்ப மறுத்தது

தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை நீக்கிவிட்டால் உங்களை நம்புகிறோம் என்று மூஸா நபியிடம் அவரது சமுதாயம் கேட்டுக் கொண்டது. அல்லாஹ்வின் நாட்டத்தால் அவர்கள் அதை குணப்படுத்திய பிறகு நம்ப மறுத்துவிட்டனர்.

அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் “மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்” என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.

(அல்குர்ஆன் : 7 : 134,135.) 

இவர்கள் அல்லாத இதர இணைவைப்பாளர்களும் இறைவனின் சான்றை ஏதேனும் விதத்தில் பார்த்தும் அதை புறக்கணித்துள்ளனர்.

உதவி செய்யப்பட்ட பின் இணைவைத்தல்

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.

(அல்குர் ஆன் : 29:65.) 

கடுமையான சிரமத்தின் போது முறையாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு, தப்பித்த பிறகு அல்லாஹ்வை மறந்துவிடுகின்றனர். அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றனர்.

இவ்வாறு அல்லாஹ்வின் சான்றுகளை நினைவு கூறாமலிருப்பது தவறாகும்.

வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர்.

(அல்குர்ஆன் : 12 : 105.) 

அன்றாடம் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக பல சான்றுகளை பூமியில் அல்லாஹ் வைத்துள்ளான். அவற்றை கவனிக்காமலிருப்பது தவறு என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது. எனவே அல்லாஹ்வின் சான்றுகளை முறையாக நம்பவேண்டும்.