Tamil Bayan Points

38) 45 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

45 வது வசனம்

45. உங்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது (புறக்கணிக்கின்றனர்).

(அல்குர் ஆன் : 36:45.)

அனைத்து செயல்களையும் அல்லாஹ் அறிகிறான்

“முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்” என இவ்வசனத்தில் கூறப்படுவது அல்லாஹ்வின் கண்காணிப்பாகும். இதை பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகிறது.

அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.

(அல்குர்ஆன் :2 : 255.) 

அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளதை அவன் அறிகிறான். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

(அல்குர்ஆன் : 22 : 76.) 

நமக்கு முன்னும் பின்னும் அல்லாஹ்வுடைய கண்காணிப்பு உள்ளது. அனைத்து நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற கருத்தும் இதில் அடங்கும். மேலும் இதற்கு முன்பு நாம் செய்த செயல்களையும், இனி செய்கின்ற செயல்களையும் அல்லாஹ் அறிவான் என்பதும் இதில் அடங்கும்.

இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.

(அல்குர் ஆன் : 41 : 25.) 

ஷைத்தான்களை தோழர்களாக நியிமிக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் நல்லதாகவே கருதுவார்கள். இவ்வாறு அவர்களை கருதவைப்பதே ஷைத்தானின் தந்திரமாகும்.

இதனால் கடந்த காலத்தில் செய்யும் தீமையையும் வருங்காலத்தில் செய்யும் தீமையையும் அழகானதாக நினைத்து தீமையில் மூழ்கிவிடுவார்கள். இதைத் தவிர்த்து கொள்வதற்காகதான் முன்னும் பின்னும் உள்ளதை அல்லாஹ் அறிகிறான் என எச்சரிக்கும் வகையில் 45 வது வசனத்தில் கூறப்படுகிறது.