Tamil Bayan Points

38) வீண் பேச்சு

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

வீண் பேச்சு

மனிதர்களால் பேசப்படும் மொத்த பேச்சுக்களையும் ஆய்வு செய்தால் அவற்றில் 99 சதவிகிதம் வீண் பேச்சுக்களாகவே இருக்கும். எந்த விதத்திலும் யாருக்கும் பயனில்லாத அர்த்தமற்ற பேச்சுகளில் தாம் பெரும்பாலோனர் ஈடுபடுகின்றனர். தங்களின் பொன்னான நேரங்களை வீண் பேச்சிலேயே கழித்து விடுகின்றனர். தங்களின் முன்னேற்றத்திற்கு இந்த பேச்சு தான் தடையாக இருக்கின்றது என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதாக தெரியவில்லை.

ஒவ்வொரு தெருவிலும் இதற்கென்று ஒரு பஞ்சாயத்து மேடை அல்லது குட்டிச்சுவர் இருக்கும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் அங்கே அமர்ந்து மணிக்கணக்கில் விடிய விடிய பேசிக் கொள்வார்கள். அப்படியென்னதான் பேசுவார்கள் என்கிறீர்களா?

சினிமாவைப்பற்றி பேச ஆரம்பிப்பார்கள் அப்படியே ஒரு படி மேலேறி அந்த நடிகை அழகா இருக்கால்ல என்று ஒரு வார்த்தையை விடுவார்கள். 

அடுத்த கட்டமாக அவளின் வீடு கணவன் அல்லது அந்த நடிகனின் மனைவியைப்பற்றி.. குரங்கு மரம் விட்டு மரம் தாவுவதைப்போல இவர்களின் அர்த்தமற்ற பேச்சும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டே இருக்கும் இப்படியே உலகம் சுற்றி மறுபடியும் தாங்கள் பார்த்த அந்த சினிமாவில் வந்து பேச்சை முடிப்பார்கள்.

பெரியவர்களாக இருந்தால் அரசியலை பற்றி பேசுகிறோம் எனும் பெயரில் பல மணி நேரங்களை போக்கிவிடுவார்கள். ஒரு சமூக பிரச்சனையை அலசி ஆராய்ந்திருக்க மாட்டார்கள் தங்கள் ஊர் மக்களின் இம்மை மறுமை நலன் குறித்து விவாதித்திருக்க மாட்டார்கள். அர்த்தமற்ற பேச்சுக்களிலேயே அன்றைய பொழுதை கழிப்பார்கள். இதனால் அவர்களுக்கு கிடைத்த நன்மை என்ன தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு என்ன பலன்? இதைப்பற்றி யோசிக்க யாரும் தயாரில்லை. 

ஒரு முஸ்லிம் இது போன்ற வீணாண பேச்சுக்களில் ஈடுபடாமல் புறக்கணிப்பான் என்பதாக இறைவனும் இறைத்தூதரும் ஒரு சேர கூறுகின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள் வீணானதைப் புறக்கணிப்பார்கள்

(அல்குர்ஆன்:23:123.) 

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள் வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். 

(அல்குர்ஆன்:25:72.) 

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது. 

(அல்குர்ஆள்:31:6.)