Tamil Bayan Points

38) வார்த்தைக் கோளாறு

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

38) வார்த்தைக் கோளாறு

பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றனர். அவர்களின் தீவிரவாதத்திற்கு அவர்கள் பின்பற்றும் மதம் ஒருபோதும் காரணமாக இருப்பதில்லை. தீவிரவாதச் செயலை ஒரு ஹிந்து செய்தால் அதற்காக இந்து மதத்தைப் பழிக்க முடியாது.

அந்த மதம் அதற்குப் பொறுப்பாகாது. அதுபோலத்தானே ஒரு முஸ்லிம் செய்தாலும் கருதவேண்டும். நடுநிலையாளர்கள் ஒத்துக் கொள்ளும் இந்தக் கருத்தை மீடியாக்கள் ஒத்துக் கொள்வதில்லை.

குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவன் கைது செய்யப்பட்டால் அவன் பெயரைக் குறிப்பிட வேண்டும் அல்லது அவன் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட வேண்டும். இப்படிச் செய்தால் அதை யாரும் குறை சொல்லப் போவதில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளி, மதத்தால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அவனது பெயருக்கு முன்னால் முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதி என்று அடைமொழி கொடுக்கிறார்கள்.

முஸ்லிம் என்ற வார்த்தை வரும் இடத்திலெல்லாம் அதனோடு தீவிரவாதி என்ற சொல்லும் இணைந்தே வருவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள். அதன் மூலம் அதைப் படிப்பவர்களின் உள்ளத்தில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை வெகு இயல்பாக பதித்து விடுகிறார்கள்.

இந்த மரபை மற்றவர்கள் விஷயத்தில் ஏன் இந்த மீடியாக்கள் கடைப்பிடிப்பதில்லை. இந்து தீவிரவாதி, கிறிஸ்தவ தீவிரவாதி, சீக்கிய தீவிரவாதி, பௌத்த தீவிரவாதி, நாத்தீக தீவிரவாதி என்ற சொற்களை எந்தச் செய்தியிலாவது கேட்டிருக்கிறீர்களா? அல்லது எந்தச் செய்தித் தாளிலாவது படித்திருக்கிறீர்களா?

ஒருவேளை பார்த்தால்கூட இது என்ன புதுசா இந்து தீவிரவாதி என்றுதான் கேட்பீர்கள். அதுவே இஸ்லாமியத் தீவிரவாதி என்றால் எந்த எதிர் கேள்வியுமின்றி அதை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். அந்த அளவிற்கு அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி செய்தியாளர்கள் நம்மை பழக்கி விட்டார்கள்.

மற்றவர்களைப்பற்றி சொல்லும்போது நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், உல்ஃபாக்கள் என பெயர் பட்டியலை வாசித்து அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள் இந்த அறிவு ஜீவிகள். 

நிலம், மொழி, உரிமை, அதிகாரம், என்று கூறிக் கொண்டு எங்கள் நிலம் எங்களுக்கே அதை எதிர்த்து நிற்பவர் சவக்குழிக்கே என்ற கோஷத்தை முன்வைத்து இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்களை படுகுழிக்கு அனுப்பியிருக்கிறார்களே இவர்களெல்லாம் யார்? எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

அவர்கள் செய்துவரும் வேலைகள் என்ன? தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் கடைப்பிடிக்கும் போராட்ட வழிமுறைகள் சாத்வீக வழி ஜனநாயகப் போராட்டங்களா? இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், நாத்தீகம் என ஒவ்வொருவருக்கும் பின்பற்றும் கொள்கை ஒன்று இருக்கவில்லையா?

மதத்தால் இஸ்லாமியனாக தன்னைக் காட்டிக் கொள்பவனுக்கு முஸ்லிம் தீவிரவாதி என்று அடைமொழி கொடுத்து ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் முஸ்லிமின் தலையில் இறக்கி வைத்ததைப் போல இவர்களுக்கும் கொடுத்தால் என்ன அடைமொழி கொடுப்பது? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு அவர்கள் தமக்குத் தாமே பதிலளித்துக் கொள்ளட்டும்.

கடந்த 4.1.2013 அன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் ஃபஜ்ருல்லா என்பவரின் வீட்டில் கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஐந்து வயது சிறுவன் உட்பட இருவர் பலி நால்வர் படுகாயம். குடும்பமும் சுற்றத்தாரும் சோகத்தில் மூழ்கியிருக்க மறுநாள் பத்திரிக்கையில் செய்தி வருகிறது

வண்ணாரப் பேட்டையில் விபத்து: சிலிண்டர் வெடித்ததா? வெடி குண்டு வெடித்ததா? போலீஸார் ஆய்வு.

முஸ்லிமின் வீட்டில் நிகழும் விபத்தும் உயிரிழப்பும்கூட மீடியாக்களின் தீவிரவாதப் பசிக்குத் தீனியாகத் தெரிகிறது. மதவெறிக்குத் தூபம் போடும் சாம்பிராணியாக இருக்கிறதென்றால் இந்தக் கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது?

கொலையிலும் இரத்தத்திலும் தீவிரவாதி என்று சொன்னால் அதில் ஒரு லாஜிக் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளலாம். முஸ்லிமாக இருப்பதால் திருடனைக்கூட தீவிரவாதியாக்கி விடுகிறார்கள், அதை என்னவென்று சொல்வது?

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு நட்சத்திர ஆமைகளைக் கடத்துகிறான் ஒரு முஸ்லிம். விமான நிலையத்திலே கண்டறிந்து கைது செய்கிறது காவல் துறை. மறு நாள் பத்திரிக்கையில் செய்தி வருகிறது.

நட்சத்திர ஆமைகளைக் கடத்திய முஸ்லிம் தீவிரவாதி கைது. இதில் என்ன தீவிரவாதம் இருக்கிறது. இதற்கு முன் அவன் செய்த பயங்கரவாதச் செயல் என்ன? எந்த பயங்கரவாத அமைப்பில் அவன் அங்கம் வகிக்கிறான் என்று கேட்டால் எதுவும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அந்த உண்மை மக்களுக்குத் தெரியாதே!

இப்படித் தான் திருட்டுக் குற்றத்தைக்கூட தீவிரவாதக் குற்றமாக மாற்றி விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக!