Tamil Bayan Points

38) சொர்க்கவாசி என்று நற்செய்திக் கூறப்பட்டவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 29, 2022 by Trichy Farook

38) சொர்க்கவாசி என்று நற்செய்திக் கூறப்பட்டவர்

நபி (ஸல்) அவர்களுடன் வாழந்த காலத்திலேயே சொர்க்கவாசி என்ற நற்செய்தியை அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) வாயால் சொல்லக் கேட்டார்கள்.

அபூ மூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் அரீஸ் கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவற்றுக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். இன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாயில் காவலனாக இருப்பேன் என்று நான் சொல்லிக் கொண்டேன்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான் யார் அது? என்றுக் கேட்டேன். அவர்கள் (நான் தான்) அபூபக்ர் என்று பதிலளித்தார்கள். உடனே நான் சற்றுப் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று அல்லாஹ்வின் தூதரே இதோ அபூபக்ர் அவர்கள் உள்ளே வர தங்களிடம் அனுமதி கேட்கிறார்கள் என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும் அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள் என்று சொன்னேன்.

நூல் : புகாரி-3674 

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  1. அபூபக்ர் சொர்க்கத்தில் இருப்பார்.
  2. உமர் சொர்க்கத்தில் இருப்பார்.
  3. உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார்.
  4. அலீ சொர்க்கத்தில் இருப்பார்.
  5. தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார்.
  6. ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார்.
  7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார்.
  8. சஃத் சொர்க்கத்தில் இருப்பார்.
  9. சயீத் சொர்க்கத்தில் இருப்பார்.
  10. அபூ உபைதா பின் ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்.

நூல்: திர்மிதீ-3747 (3680)