Tamil Bayan Points

37) 44 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

44 வது வசனம்

44. நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும் தவிர (மூழ்கடிக்கவில்லை).

(அல் குர்ஆன் : 36 : 44.)

அல்லாஹ்வின் அருளிருந்தால் அழிவில்லை

முந்தைய வசனத்தில் அல்லாஹ் ஒரு கூட்டத்தை அழிக்க நாடிவிட்டால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறப்பட்டிருந்தது. எனினும் இரண்டு காரணங்களுக்காக மட்டும் அழிவிலிருந்து தப்பிக்க இயலும்.

  1. ஒன்று அல்லாஹ் அருள் புரிந்து விட்டால் தப்பிக்க இயலும்.
  2. மற்றொன்று குறிப்பிட்ட தவணை வரை தப்பிக்க இயலும் என 44 வது வசனத்தில் விளக்குகிறான்.

ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணை வரைதான் வாழமுடியும் என மற்றொரு வசனம் கூறுகிறது.

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 10:49.) 

தவணை வராவிட்டால் மரணம் இல்லை

ஒரு சமுதாயமாக இருந்தாலும் தனி மனிதராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையை அல்லாஹ் நிர்ணயித்திருப்பான். அந்த காலக்கெடு வரையிலும் அவர்கள் உயிர்வாழ்வார்கள். இறைவன் நிர்ணயித்த அக்காலக்கெடு வருமுன் பல தீங்குகள் நமக்கு ஏற்பட்டாலும் அதன் மூலம் நமக்கு மரணம் ஏற்படாது.

நடைமுறை வாழ்வில் இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

சில வருடங்களுக்கு முன் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள பெரும் கட்டிடம் இடிந்து விழுந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மரணித்தனர். இந்த விபத்து நடந்து 11 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒருவர் உயிருடன் வருகிறார்.

“நீங்கள் எவ்வாறு உயிருடன் இருந்தீர்கள்? என செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, “இத்தனை நாட்கள் எந்த உணவும் கிடைக்காமல் என்னுடைய சிறுநீரை குடித்து கொண்டுதான் நான் உயிருடன் இருந்தேன்” என்று பதிலளித்தார்.

இன்னொரு சம்பவத்தை பாருங்கள்

பதினோறு மாத குழந்தை மீன் தொட்டிக்கு அருகில் விளையாடி கொண்டிருக்கும் போது உயிருடன் உள்ள ஒரு மீனை எடுத்து சாப்பிட்டுவிடுகிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பிறகு மயக்கமடைந்தது. இதை பார்த்த மருத்துவர்கள் குழந்தை கோமா நிலையை அடைந்துவிட்டது.

எங்களால் காப்பாற்ற இயலாது என்று முதலில் கூறினர். பிறகு ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தையின் வயிற்றில் மீன் உயிரோடு இருப்பதை காண முடிந்தது. பிறகு லேசர் சிகிச்சையால் வயிற்றிலிருந்த படியே மீனை இரண்டு துண்டாக பிளந்து வெளியில் எடுத்தனர். இதனால் அந்த குழந்தை நிம்மதியாக சுவாசித்தது.

இது போன்ற நிகழ்வுகள் மருத்தவ உலகத்தில் அதிசயமான ஒன்றாகும். நமக்கே கூட இத்தகைய அரிதான நிகழ்வு நடந்திருக்கும்.

ஓர் இடத்தில் நாம் நின்று விட்டு பிறகு அங்கிருந்து ஏதேனும் தேவைக்காக விலகிச்செல்வோம். தீடிரென மேலிருந்து ஒரு கல் முன்பு நாம் நின்ற இடத்தில் வந்து விழும். இந்நேரத்தில் அங்கு நின்றிருந்தால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்திருப்போம்.

இது போன்று நூலிழையில் உயிர்பிழைத்த பல சம்பவங்களை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம். இவையனைத்தும் எத்தகைய சோதனைகள் வந்தாலும் குறிப்பிட்ட தவணை வராத வரை அவனுக்கு மரணம் நிகழாது என்பதையே வெளிப்படுத்துகிறது.

தவணை வந்துவிட்டால் மரணம் உறுதி

அதே நேரம் இறைவன் நிர்ணயித்த குறிப்பிட்ட தவணை வந்துவிட்டால் மரணம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

நம் வாழ்வில் எத்தனையோ எதிர்பாராத மரணங்களை கேள்விப்பட்டிருப்போம். நேற்று வரை நம்முடன் பேசிக் கொண்டிருந்தவர் தீடிரென்று மரணமடைந்துவிடுகிறார். உடல் நலத்துடன் இருந்தவர் திடீரென்று இறந்துவிடுகிறார். குறிப்பிட்ட தவணை வந்துவிட்டால் யாராலும் தப்பிக்க இயலாது என்பதை இவையனைத்தும் விளக்குகிறது. இதையே 44 வது வசனம் கூறியது.