Tamil Bayan Points

37) நாணமிக்க தலைவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 29, 2022 by Trichy Farook

37) நாணமிக்க தலைவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னால் தொழில் செய்து தமது குடும்பத்தைக் கவனித்து வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலில் அவர்களால் ஈடுபடமுடியவில்லை.

எனவே பொது நிதியைப் பெருக்குவதையே தம் வேலையாக ஆக்கிக் கொண்டு தமக்குரிய சம்பளமாக பொதுநிதியிலிருந்து தம் குடும்பத்தாருக்கு செலவு செய்யப்படும் என்று ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆன போது எனது தொழில் என் குடும்பத்தாருக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தினர் அறிவர்.

இப்போது நான் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன். இனி அபூபக்ரின் குடும்பத்தினர் இந்தப் பொதுநிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக உழைப்பேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி-2070 

ஆடம்பரம் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உலக வரலாற்றில மின்னிக் கொண்டிருக்கிறார்கள். தான் இறந்தால் ஏற்கனவே தான் அணிந்திருக்கும் பழைய ஆடையே தனக்குப் போதும் இறந்தவனுக்குப் புதிய ஆடைத் தேவையில்லை என்று அவர்கள் கூறிய வார்த்தை நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது. இந்த உண்மையை உணர்ந்தால் கல் நெஞ்சம் கூட கரைந்து போய்விடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  

நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்தீர்கள் என்று கேட்டார்கள். வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன். அபூபக்ர் (ரலி) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள் என்று கேட்டார்கள்.

நான் திங்கட்கிழமை என்றேன். இன்று என்ன கிழமை என்று கேட்டதும் நான் திங்கட்கிழமை என்றேன். அதற்கவர் இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன் என்று கூறிவிட்டுத் தான் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்.

அதில் குங்குமப் பூவின் கறை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார். நான் இது பழையதாயிற்றே என்றேன். அதற்கு அவர் மய்யித்தை விட உயிருடன் இருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர்.

மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார். (அன்று) காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்.

நூல் : புகாரி-1387 

இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் போது தம் குடும்பத்திற்னெ எந்தச் சொத்தையும் விட்டுச் செல்லவில்லை. எல்லாவற்றையும் இழந்து நன்மைகளை அதிகம் சம்பாரித்துக் கொண்டு அல்லாஹ்விடத்தில் சென்றடைந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அவர்கள் எந்த ஒரு தீனாரையும் திர்ஹத்தையும் விட்டுச் செல்லவில்லை. அல்லாஹ் (அவர்களுக்கு நல்ல) இருப்பிடத்தை அமைத்துத் தருவானாக!

நூல் : அபூதாவூத் இமாம் எழுதிய அஸ்ஸுஹ்த் என்ற நூல் (35)