Tamil Bayan Points

37) இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே தீர்வு

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே தீர்வு

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமிய தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால், உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

24:4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

 

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

(திருக்குர்ஆன் 24:4)

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு 80 கசையடி வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது.

குற்றங்கள் குறைந்து மனித சமுதாயம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு, குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள் தான் தீர்வு.