Tamil Bayan Points

36) விபச்சாரக் குற்றம்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

விபச்சாரக் குற்றம்

24:2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

(திருக்குர்ஆன் : 24:2.) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர். திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் வழங்கியுள்ளார்கள்.

கிராமவாசி ஒருவர் மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

(அப்போது) இவரது மனைவியுடன் விபச்சாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், ” உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ” உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள்.

அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி),

ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: புகாரி-2725, 6633, 6828, 6836

ஆண், பெண் இருவரும் இணங்கி செய்யும் விபச்சாரத்திற்கே இந்தத் தண்டனை என்றால், அப்பாவிப் பெண்ணை வன்புணர்வு செய்யும் காமக் கொடூரன்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

இதுபோன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கம் அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பது தான். எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும் என்பதால் “மக்கள் பார்த்துக் கொண்டிருக்கட்டும்” என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.