Tamil Bayan Points

36) மக்களிடம் நடந்து கொண்ட முறைகள்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 30, 2022 by Trichy Farook

36) மக்களிடம் நடந்து கொண்ட முறைகள்

ஒரு சிறந்த ஆட்சியாளன் மக்களிடத்தில் எப்படியெல்லாம் நடந்து கொள்வானோ அம்முறையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களிடத்தில் நடந்து கொண்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் ஆட்சி செய்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்திக் காட்டிய உன்னதமான தலைவராகத் திகழ்ந்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது: 

பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உனக்கு இன்ன இன்னப் பொருட்களைத் தருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும் வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்ன இன்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள் என்று சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்த போது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகள் எடுத்துக் கொள்வீராக என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி-2296 

அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பிரச்சனைகள் கொண்டு வரப்படும் போது தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் நியாயமான அடிப்படையில் மார்க்கம் சொல்கின்ற அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மிக நெருங்கிய தோழராக இருந்த போதிலும் உமர் (ரலி) அவர்களிடத்தில் நியாயம் இல்லாத போது அவர்களுக்கு எதிராகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். இதைப் பின்வரும் சம்பவம் உணர்த்துகிறது.

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: 

அன்சாரிகளைச் சார்ந்த ஒரு பெண்மனி உமர் (ரலி) அவர்களிடத்தில் (மனைவியாக) இருந்த போது ஆஸிம் பின் உமர் என்பவரை (உமர் (ரலி) அவர்களின் மூலம்) பெற்றெடுத்தார். பிறகு அப்பெண்னை விட்டும் உமர் (ரலி) அவர்கள் பிரிந்து விட்டார்கள். (ஒரு நாள்) உமர் (ரலி) அவர்கள் குபா என்ற இடத்திற்கு வந்தார்கள்.

அப்போது பள்ளிவாசலின் முற்றத்தில் தம் மகன் ஆஸிம் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரது கொடுங்கையை பிடித்து தம் வாகனத்தில் தனக்கு முன்னால் வைத்தார்கள். அப்போது அச்சிறுவனின் பாட்டியார் வந்து உமர் (ரலி) அவர்களிடத்தில் சர்ச்சையில் ஈடுபட்டார்கள்.

இறுதியில் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இவன் என்னுடைய மகன். (என்னிடத்தில் தான் இருப்பான்.) என்று கூறினார்கள். இவன் எனது மகன் (என்னிடத்தில் தான் இருப்பான்) என்று அப்பெண் கூறினார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அப்பெண்ணுடன் அச்சிறுவனை விட்டுவிடு என்று (உமர் (ரலி) அவர்களிடத்தில்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் பதிலுக்கு ஒரு வார்த்தையும் அபூபக்ரிடம் பேசவில்லை.

நூல் : மாலிக்-2230 (1260)

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்ததோடு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்புகளைத் தரக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். சட்டம் தனக்குத் தெரியாத போது மனம் போன போக்கில் கூறி விடாமல் தெரிந்தவர்களிடம் கேட்டு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார்கள்.

கபீஸா பின் துஐப் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

(ஒரு வயதான) பாட்டி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து தனக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்பாட்டியிடத்தில் அல்லாஹ்வின் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வேதத்திலும் உமக்கு ஒன்றுமில்லை (என்று நான் நினைக்கிறேன்).

(இது தொடர்பாக) நான் மக்களிடத்தில் கேட்கிறேன். தாங்கள் செல்லுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடத்தில் (பாட்டிக்கு சொத்தில் பங்கு உண்டா என்று) கேட்ட போது முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது பாட்டிக்கு ஆறில் ஒரு பங்கை அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (இதற்கு ஆதரவாக) உம்முடன் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) கூறியதைப் போன்றே கூறினார்கள். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் பாட்டிக்கு ஆறில் ஒன்று என்றப் பங்கைச் செயல்படுத்தினார்கள்.

நூல் : திர்மிதீ-2100 (2027)