Tamil Bayan Points

36) நோயை சபிக்காதீர்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

நோயை சபிக்காதீர்

மனிதர்களுள் பெரும்பான்மையினர் தங்களுக்கு வரும் நோயை சபிப்பவர்களாக இருக்கின்றார்கள். சே. சரியா சாப்பிடக்கூட முடியல் எல்லாம் இந்த தலைவலி படுத்தும் பாடு என்பதாக நமக்கு ஏற்படும் நோயை பழிக்கின்றோம். சபிக்கின்றோம். நோய் என்பது இறைவன் தரும் ஓர் சோதனை. அது ஏற்படுவதற்கு முன்பு வரையிலும் அவற்றிலிருந்து பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

அதே சமயம் நோய் வந்து விட்டால் ஒரு முஸ்லிம் அதை பழிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நீக்குவதற்கான மருத்துவம் செய்ய வேண்டும். இது தான் நபிகளார் காட்டித்தருகின்ற வழிமுறை இந்த அழகிய வழிமுறையில் பொறுமையோடு நோயை அணுகினால் அதன் மூலம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதை விட்டு விட்டு நோயை பழிக்கும் ஒரு இழிவான பண்பு முஸ்லிம்களிடம் இருக்க கூடாது.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடல் நலிலிவற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது உம்முஸ் ஸாயிபே அல்லது உம்முல் முசய்யபே உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண்காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம்-5031