Tamil Bayan Points

35) மக்களுக்குச் செய்த உபதேசங்கள்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 30, 2022 by Trichy Farook

35) மக்களுக்குச் செய்த உபதேசங்கள்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக மட்டும் இருக்கவில்லை. அதிகமான மார்க்க ஞானத்தை அவர்கள் பெற்றிருந்தமையால் மக்களுக்கு நல்லது குறித்து உபதேசம் செய்பவராகவும் மக்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக செல்வதைக் கண்டால் சரியான வழியைக் காண்பித்து நேர்வழியில் செலுத்தக் கூடியவராகவும் இருந்தார்கள்.

கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் (தம் உரையில்) உங்கள் விஷயத்தில் நான் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டுள்ளேன். உங்களில் நான் சிறந்தவன் இல்லை. நான் நல்ல விதமாக நடந்து கொண்டால் எனக்கு உதவியாக இருங்கள். நான் தவறாக நடந்தால் என்னை சீர்செய்யுங்கள்.

ஏனென்றால் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஷைத்தான் என்னிடத்தில் உள்ளான். நான் கோபமாக இருக்கும் போது என்னை விட்டும் விலகி விடுங்கள். உங்கள் உடம்புகளிலும் தோல்களிலும் (காய) வடுவை நான் ஏற்படுத்த மாட்டேன் என்று கூறினார்கள்.

நூல் : அஸ்ஸுஹ்த் லிஅபீ தாவூத் பாகம் : 1 பக்கம் : 34

இப்ராஹிம் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் தம் உரையில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இரவிலோ பகலிலோ ஆட்சி அதிகாரத்தின் மீது பேராசைப்பட்டதில்லை. அதில் ஆசை கொண்டு இரகசியமாகவோ பகிரங்கமாகவோ அல்லாஹ்விடத்தில் நான் அதை வேண்டியதுமில்லை. என்றாலும் (ஒரு தலைவர் நியமிக்கப்படா விட்டால்) குழப்பம் ஏற்படுவதைப் பயந்தேன்.

ஆட்சி செலுத்துவதில் எனக்கு நிம்மதியில்லை. மிகப் பெரிய காரியம் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் (என்னை) உறுதிப்படுத்தினாலே தவிர அதை (கையாளுவதற்கு) எனக்கு எந்தச் சக்தியும் வலிமையும் இல்லை என்று கூறினார்கள்.

நூல் : ஹாகிம்-4422 , பாகம் : 3 பக்கம் : 70

அவ்ஸத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களுக்கு உறையாற்றினார்கள். அப்போது அவர்கள் நான் (நிற்கும்) இந்த இடத்தில் சென்ற வருடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அழுது விட்டார்கள். அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியத்தை வேண்டுங்கள்.

ஏனென்றால் உறுதிக்குப் பிறகு ஆரோக்கியத்தை விட (வேறு பெரிய பாக்கியத்தை) எவரும் கொடுக்கப்பட மாட்டார். உண்மை பேசுவதைக் கடைப் பிடியுங்கள். ஏனென்றால் உண்மையாகிறது நல்ல கரியங்களைக் கொண்டு வரக்கூடியது. அவ்விரண்டும் (பெற்றவர்கள்) சொர்க்கத்தில் இருப்பார்கள். பொய் சொல்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்.

ஏனென்றால் பொய்யாகிறது தீமைகளைக் கொண்டு வரக்கூடியது. அவ்விரண்டும் (பெற்றவர்கள்) நரகத்தில் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். கோபித்துக் கொள்ளாதீர்கள். (நட்பை) முறித்துக் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு சகோதரர்களாய் இருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் (தனது உரையில்) கூறினார்கள்.

நூல் : அஹ்மத்-5 

கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸைனப் என்றழைக்கப்படும் அஹ்மஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமல் இருப்பவளாகக் கண்டார்கள். இவளுக்கென்ன ஆயிற்று? இவள் ஏன் பேசாமல் இருக்கிறாள்? என்று கேட்டார்கள். மக்கள் (இவர் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளிடம் நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌன விரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்டக் காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும் என்று சொன்னார்கள். ஆகவே அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப்) பேசினாள்.

நூல் : புகாரி-3834