Tamil Bayan Points

35) கஜினி முஹம்மது

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

35) கஜினி முஹம்மது

சுருக்கமாக வரலாற்றைச் சொல்லி ஆழமான முஸ்லிம் வெறுப்பை உண்டா?க்கப் பயன்படுபவர் கஜினி முஹம்மது. சோமநாதபுர ஆலயத்தின் மீது 17 முறை படையெடுத்தார், கொள்ளையடித்தார்,பின்னர் கோவிலை இடித்தார் என இப்படி மிகமிக சுருக்கமாகவே இவரது வரலாறு கூறப்படுகிறது.

இந்தக் குறைந்த வரிகளுக்குள்ளாகவே முஸ்லிம்களும் முஸ்லிம் மன்னர்களும் மற்றவர்களை சகித்துக் கொள்ளாத மகா கெட்டவர்கள் என்ற வெறுப்புணர்வு ஊட்டப்பட்டு விடுகிறது.

அந்தக் கால சூழல் குறித்த எந்த விளக்கமும் இல்லாமல் மொட்டையாக சொல்வதாலும் அரசியல் நடவடிக்கைக்கு மதச் சாயம் பூசுவதாலும் ஏற்பட்ட விளைவு இது.

கோவில்கள் என்பது இன்று இருப்பதைப்போல ஆன்மீக வழி பாட்டுக் கூடங்களாக மட்டும் அப்போது இருக்கவில்லை. மன்னர்களின் மறைவிடங்களாகவும் அரசின் செல்வங்களைச் சேர்த்து வைக்கும் கஜானாக்களாகவும் பயன்படுத்தப்பட்டன.

அதனால் தான் அரசர்களின் கோட்டைக் கொத்தளங்களைப்போல கோவில்களுக்கும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலைச் சுற்றி பெரும் பெரும் அகழிகள் தோண்டி முழு நேரமும் வீரர்களால் கண்காணிக்கப்பட்டன.

தஞ்சை பெரிய கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் போன்ற இடங்களில் பெரும் பெரும் அகழிகளை இன்றும் காணலாம். அது போல சமீபத்தில் பெரும் புயலைக் கிளப்பிய திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் சொத்துக்களும் மன்னர் கால கஜானாக்களாகத் தான் கோவில்கள் திகழ்ந்துள்ளன என்பதற்கு சான்றுகளாகும்.

அங்குள்ள ஆறு அறைகளில் மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு கோவில்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

திருவரங்கம் ரங்க நாதர் கோவிலிலும் இதுபோன்ற புதையல்கள் உண்டு என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு கிருஷ்ணமாச்சாரியார். இவையனைத்தும் நம் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கின்றன

ஆகையால் படையெடுப்புகளை மேற்கொள்பவர்களின் முதல் இலக்கு கோவில்களாகத்தான் இருக்கும் அவர்கள் இந்து மன்னர்களாக இருந்தாலும் சரியே! வரலாறு நெடுகிலும் இதற்கான சான்றுகள் நிறைந்து கிடக்கின்றன.

உதாரணத்திற்கு சில…

1791ல் மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றது. அப்போது பரசுராம் பாவே என்ற மராட்டியத் தளபதி கர்னாடக மாநிலம் சிருங்கேரி மடத்தைத் தாக்கினான். 60,00,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றான்.

சாரதா தேவி சிலையை பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து உடைத்தெறிந்தான்(தமிழகத்தில் மாலிக்காபூர் ஓர் ஆய்வு பக் 71 Sardesi J.S. The History of Marathas Vol 3 p 189)

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இருந்த சமணக் குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் பதினென்பூமி வின்னகரம் என்ற வைணவக் கோவிலாக மாற்றப்பட்டது.

பல்லவ மன்னனாகிய மகேந்திர வர்மன் சைவ சமயத்தைப் பின்பற்றினான். பாடலி புத்திரத்தில் இருந்த சமணப் பள்ளியை இடித்துத் தள்ளி விட்டு அவற்றின் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணரத ஈச்சரம் என்று தன் பெயரில் கோவிலைக் கட்டிக் கொண்டான்.

(பல்லவர் வரலாறு பக் 275 – வரலாற்று வெளிச்சத்தில் ஔரங்கஜேப் விகடன் பிரசுரம் – பக் 318 தெய்வப்புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத்தொண்டர் மாக்கதை ப.இராம் நாதப்பிள்ளை சு.அ.இராமசாமிப் புலவர் குறிப்புரைகளுடன் சென்னை 1977)

கி.பி.8 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் ஆலியை ஆண்ட குறுநில மன்னன் திருமங்கையாழ்வார். வைணவ சமயத்தை சேர்ந்த இம்மன்னன் நாகப்பட்டினம் பௌத்த கோவிலைக் கொள்ளையடித்தான். அங்கிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கொண்டு வந்து தங்கத்தை உருக்கி ஸ்ரீரங்கக் கோவிலின் விமான மண்டப கோபுரம் உள்ளிட்ட பல பணிகளை செய்து முடித்தான்.

( நாலாயிர திவ்ய பிரபந்தம் பக்கம் 207 பால சரஸ்வதி பி. கிருஷ்ணமாச்சாரிய ஸ்வாமிகள் பரிசோதித்து வெளியிட்டது)

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் மன்னன் வரகுண பாண்டியனின் மகன் சடையமாறன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றான். பல நகரங்களையும் புத்த விகாரங்களையும் கொள்ளையிட்டான். அங்குள்ள புத்தர் சிலைகளையும் விலையுயர்ந்த பல பொருட்களையும் கைப்பற்றி வந்தான்.

(வரலாற்று வெளிச்சத்தில் ஔரங்ஜேப் விகடன் பிரசுரம் (வ.வெ.ஔ.வி.பி.) – பக் 345 இது இலங்கையின் வரலாற்றை சொல்லும் மகா வம்சத்தில் இடம்பெற்றுள்ளன செய்தி)

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் இலங்கையின் மீது படையெடுத்தான் அனுராதாபுரம், பொலனருவ ஆகிய இடங்களில் இருந்த புத்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினான்.

அந்த ஊர்களின் பெயர்களை மாற்றி ஜனநாத மங்கலம் என தன் பெயரைச் சூட்டினான்.(இழப்பதற்கு ஏதுமில்லை – பக் 66 (வ.வெ.ஔ.வி.பி.) – பக் 349 கே.கே.பிள்ளை, சோழர் வரலாறு 1977 சென்னை பக் 191)

இப்படி இன்னும் பல..

முஸ்லிம் மன்னர்கள் கோவிலை இடித்தார்கள் என்று சொன்ன வரலாற்றாசிரியர்கள் அதற்குரிய காரணத்தைச் சொல்லியிருந்தால், அல்லது இதுபோல இந்து மன்னர்களும் இந்துக் கோவில்களை இடித்திருக்கிறார்கள் என்ற உண்மை யையும் சொல்லிக் கொடுத்திருந்தால் தற்போது முஸ்லிம்கள் மீது ஏற்பட்டிருக்கும் தப்பான எண்ணம் ஏற்பட்டிருக்காது.

மேலும் இந்து மன்னர்களின் படையெடுப்பையும், கோவில் இடிப்பையும் அவர்களது அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாகப் பார்ப்பதைப் போல முஸ்லிம் மன்னர்களின் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தால் எந்த விதமானக் குழப்பத்திற்கும் வேலை இருந்திருக்காது.