Tamil Bayan Points

34) 41 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

41 வது வசனம்

41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.

(அல்குர்ஆன் : 36 : 41,42.) 

நூஹ் நபியின் கப்பல்

41 வது வசனத்தில் நிரப்பபட்ட கப்பல் என்று கூறப்படுவது நூஹ் நபியின் கப்பல்தான். இதை பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம். பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.

(அல்குர்ஆன் : 26 : 119, 120.)

நூஹ் நபியோடு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களை கப்பலில் நிரப்பி, பாதுகாத்து மற்றவர்களை மூழ்கடித்துவிட்டான். இதைத்தான் யாசீன் அத்தியாயத்தின் 41 வது வசனம் மறைமுகமாக கூறியது.

மேலும் இத்தகைய சம்பவங்களை சாதாரணமாக கேட்டுவிட்டு சென்று விடாமல் அனைவரும் அதை படிப்பினையாக கருத வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

(நூஹ் நபியின் காலத்தில்) தண்ணீர் எல்லை மீறிய போது உங்களை நாம் கப்பலில் சுமத்தினோம். அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்கும், கேட்கும் காதுகள் கேட்டு பேணிடவும் (இவ்வாறு செய்தோம்)

(அல்குர்ஆன் : 69:11, 12.) 

நூஹ் நபியின் சமுதாயத்திற்கு இறைத்தண்டனையாகு வெள்ளம் வந்த போது நம்பிக்கை கொண்டவர்களை மட்டும் ஏற்றிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொள்ளாமல் அநீதி இழைத்தோருக்கு மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும் அறிவித்தான்.

“நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்” என்று அவருக்கு அறிவித்தோம்.

(அல்குர்ஆன் : 23:27.) 

மேற்கண்ட சம்பவத்தில் இடம் பெற்றுள்ள கப்பலை அல்லாஹ்வின் சான்றாக நாம் கருத வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய தெளிவுகளை அல்லாஹ் வழங்குகிறான். அதனால்தான் யாசின் அத்தியாயத்தின் 40 வது வசனத்தின் துவக்கத்தில் “நிரப்பபட்ட கப்பலில் அவர்களுக்குரிய அத்தாட்சி இருக்கிறது” என்று கூறுகிறான்.

மற்றொரு வசனத்திலும் இதை அத்தாட்சி என குறிப்பிடுகிறான்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

(அல்குர்ஆன் : 29:14, 15.) 

நூஹ் நபியின் கப்பலும் தற்கால உண்மையும்

தற்காலத்தில் உள்ள மலையேறும் குழுவினர் இநத் கப்பல் தொடர்பாக ஒரு பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர். திருக்குர்ஆன் வரலாற்றை அடிப்படையாக கொண்டு பின்வரும் ஆய்வு முடிவை தெரிவித்துள்ளனர்.

துருக்கி நாட்டில் ஜோர்தான் என்ற மாவட்டத்தில் தரை மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் உள்ள ஒரு மலையின் உச்சியில் பனியால் மூடப்பட்ட பாறையில் இருபது அடி ஆழத்தில் ஒரு கப்பலின் மரத்தாலான உதிரி பாகங்கள் கிடந்ததை உறுதி படுத்துகிறார்கள். மேலும் இதை கண்டு ஆச்சரியமடைகிறார்கள். இவ்வளவு உயரத்தில் கப்பலை கொண்டு வருவது சாத்தியமற்றது என்று வியப்படைகிறார்கள். ஆனால் இச்சம்பவத்துடன் பின்வரும் குர்ஆன் வசனம் ஒத்துப்போவதை காணலாம்.

“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது.

(அல்குர்ஆன் : 44 : 44.) 

அன்றைக்கு நூஹ் நபியின் கப்பல் தண்ணீரில் மிதந்து மலையின் மேல் சென்று நின்றது. பிறகு தண்ணீர் வடிந்தவுடன் கப்பல் அங்கேயே தங்கியது. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றைக்கு அறிவியல் ரீதியாக உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பேருண்மையை கூறியதன் மூலமும் குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகிறது.