Tamil Bayan Points

34) நபிகளாரின் உறவினர்களை நேசித்தவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 30, 2022 by Trichy Farook

34) நபிகளாரின் உறவினர்களை நேசித்தவர்

ஃபாத்திமா (ரலி) அவர்களின் கோரிக்கையை அபூபக்ர் (ரலி) ஏற்றுக் கொள்ளாததால் நபிகளாரின் குடும்பத்தாருக்கு அபூபக்ர் (ரலி) அநியாயம் செய்து விட்டார் என்றும் பெருமானாரின் உறவினர்களை அபூபக்ர் மதித்து நடக்கவில்லை என்றும் ஷியாக்களில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. ஃபாத்திமா (ரலி) அவர்களின் கோரிக்கை நபிகளாரின் கூற்றுக்கு எதிராக இருந்த ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அபூபக்ர் அதை ஏற்க மறுத்தார்கள். தம் குடும்பத்தார்களை நேசிப்பதை விட நபி (ஸல்) அவர்களின் உறவினர்களைக் கடுமையாக நேசித்து வந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஃபதக்கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் பங்கைத் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார்கள்.

நாங்கள் விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தார்கள் இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தான் உண்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு உவப்பானவர்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி-4036 

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்தைப் பங்கிடத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். ஆனால் நபிகளாரின் குடும்பத்தாருக்குரிய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை தம் மீது சுமத்திக் கொண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டால் தாம் செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நீங்கள் இறந்து விட்டால் உங்களுக்கு யார் வாரிசாகுவார்கள் என்று கேட்க அதற்கு அபூபக்ர் (ரலி) என் குழந்தையும் குடும்பத்தார்களும் ஆவார்கள் என்று கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் நாங்கள் மட்டும் ஏன் நபி (ஸல்) அவர்களுக்கு வாரிசாகக் கூடாது என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) நபிக்கு யாரும் வாரிசாக முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். என்றாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாருடைய தேவைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு நானும் பொறுப்பேற்றுக் கொள்வேன். அவர்கள் யாருக்குச் செலவு செய்து வந்தார்களோ அவர்களுக்கு நானும் செலவு செய்வேன் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத்-60 (57)

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களே கட்டளையிட்டுள்ளார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களின் பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்துள்ளார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 

முஹம்மத் (ஸல்) அவர்கள் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

நூல் : புகாரி-3713 

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்களைத் தம் தோளி ன் மீது ஏற்றிக்கொண்டு என் தந்தை உனக்கு அற்பணமாகட்டும்.

நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கின்றாய். (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்தில்லை என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (இதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

நூல் : புகாரி-3542