Tamil Bayan Points

34) கொலை மற்றும் தாக்குதல்களுக்கான தண்டனைகள்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

கொலை மற்றும் தாக்குதல்களுக்கான தண்டனைகள்

ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றாவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி, பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகள் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரத்தை, பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

2:178 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى  ؕ الْحُرُّ بِالْحُـرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ فَمَنْ عُفِىَ لَهٗ مِنْ اَخِيْهِ شَىْءٌ فَاتِّبَاعٌۢ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَيْهِ بِاِحْسَانٍؕ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ  ؕ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌۚ‏

2:179 وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலைசெய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலைசெய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலைசெய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் (இழப்பீடு) வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

(திருக்குர்ஆன் : 2:178, 179.) 

5:45 وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ‌ؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ‌ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(திருக்குர்ஆன் : 5:45.) 

17:33 وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِ‌ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا‏

அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் (சட்டத்தின் மூலம்) உதவி செய்யப்பட்டவராவார்.

(திருக்குர்ஆன் : 17:33.) 

கொலை செய்தவனுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தால், கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? ‘கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது; தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது’ என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.