Tamil Bayan Points

34) வேண்டாத நிபந்தனைகள்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

வேண்டாத நிபந்தனைகள்

قَالَ: «مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ»

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது. (செல்லாதது,) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத்தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி – 2155

விளக்கம்: இஸ்லாமிய மார்க்கத்தைத் தந்தவன் அல்லாஹ்! அவன் தான் இந்த மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக வணக்க வழிபாட்டு முறைகள், தடை செய்யப்பட்டவை, அனுமதிக்கப்பட்டவை இவற்றை அவனே குறிப்பிட வேண்டும். அல்லாஹ் குறிப்பிடாத விதிகளைப் புதிதாக யாரேனும் உருவாக்கினால் அவை எக்காலத்திலும் சொல்லாது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும். இறைவன் நமக்குத் தந்திருக்கும் திருக்குர்ஆன் வேதத்தில் இல்லாத அல்லது அவனது தூதரான நபி (ஸல்) அவர்கள் கூறாத நிபந்தனைகளை விதிப்பது இஸ்லாமியச் சட்டப்படி குற்றமாகும். உதாரணமாக தொழுகைக்கு வருபவர்கள் எப்படி இருக்க வேண்டுமென சில பள்ளிவாசல்களின் முகப்பில் எழுதப்பட்டிருக்கிறது.

நான்கு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் தலையில் தொப்பி அணிந்து வேண்டும், சப்தமிட்டு ஆமீன் கூறக் கூடாது இரண்டாவது ஜமாஅத் வைக்கக் கூடாது விரலசைத்துத் தொழக் கூடாது’ என்ற நிபந்தனைகள் பள்ளிக்கு வருபவர்களுக்கு விதிக்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளில் எந்த ஒன்றையும் திருக்குர் ஆனோ அதன் விளக்கவுரையாக உள்ள நபிமொழிகளோ கூறவில்லை. இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள் விதிக்காத எந்த நிபந்தனைகளை யார் விதித்தாலும் அது நிராகரிக்கப்படும் நிராகரிக்க வேண்டும்.