Tamil Bayan Points

32) 39வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

39வது வசனம்

39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.

சந்திரனுக்குப் பல நிலைகள் உண்டு

சந்திரனை கண்ணால் பார்க்கும்போது பல நிலைகளில் அது உள்ளது. முதல் நாளில் முதல் பிறை ஒரு நிலையாகவும் இரண்டாம் நாளில் மற்றொரு நிலையாகவும் இது போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையாக உள்ளது. இதைத்தான் பல நிலைகள் என அல்லாஹ் கூறுகிறான்.

இதை மேலும் சில வசனங்களில் விளக்குகிறான்.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்:2 : 189.)

இவ்வசனத்தின் துவக்கத்தில் “பிறை” என்று ஒருமையாக கூறாமல் “பிறைகள்” என்று பன்மையாக கூறுகிறான். பிறைக்கு பல நிலைகள் உள்ளதை உணர்த்தவே அல்லாஹ் இவ்வாறு கூறுவதை அறியலாம்.

மேலும் ஹஜ் மற்றும் மக்களுக்கும் காலம் காட்டியாக இருப்பதாக கூறுகிறான். வருடத்தின் பல காலங்களை சந்திரன் மூலம்தான் அறிகிறோம். உதாரணமாக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை பிறையை அடிப்படையாக வைத்துதான் நோற்கிறோம். இதை மற்றொரு வசனத்திலும் கூறுகிறான்.

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

(அல்குர் ஆன்:10:5.)

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன்:17:12.)

சூரிய, சந்திரனை வைத்து நாம் காலத்தை அறிவதைத்தான் இவ்வசனம் கூறுகிறது.