Tamil Bayan Points

32) சரித்திரத்தின் பெயரால் சதி வலை

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

32) சரித்திரத்தின் பெயரால் சதி வலை

விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கை மறைத்து அவர்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள், வரலாற்றைக் கொஞ்சம் திரித்தும் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு உழைத்த பலநூறு முஸ்லிம்கள் இருக்க சரித்திரத்தின் பெயரால் சதி செய்ய நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில மன்னர்களை மட்டும் கூடுதலாகப் பேசுகிறார்கள். ஏன்?

மன்னர்களின் சரித்திரத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்ற கடமை உணர்ச்சியா?

அப்படியானால் அவர்களின் வரலாற்றை உள்ளபடியே உரைக்க வேண்டும். சரி தவறு இரண்டையும் சமநிலையில் இருந்து எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் பெயர்களையும், சம்பவங்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு இவர்களாகவே எழுதிக் கொண்ட கதைகளையும் கற்பனைகளையும்தான் வரலாறு என்று வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியின் காரண காரியங்களைக் கண்டு கொள்ளாமல் அதற்கான சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளாமல் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களுக்கும் மதச்சாயம் பூசி மதவெறியை ஊட்டியிருக்கிறார்கள்.

ஔரங்கஜேப், கஜினி முஹம்மது,மாலிக்காபூர் என முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவையாகவே இருக்கின்றன. முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களைக்கொன்றார்கள், கோவில்களைஇடித்தார்கள், கொள்ளையடித்தார்கள், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள், வரிக்கு மேல் வரி விதித்து மக்களை வாட்டி வதைத்தார்கள் என்றெல்லாம் எழுதி எழுதி ஏடுகளை நிரப்பி இருக்கிறார்கள்.

இவற்றில் உள்ள உண்மைகளைக் கொஞ்சம் உணர்ந்து கொள்ளத் தான் இந்தப் பகுதி. அதற்கு முன் இன்னொரு உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பிழைகளைச் சரி செய்வதோ முஸ்லிம் மன்னர்களை நல்லவர்களாக்குவதோ நமது நோக்கமில்லை. அதன்பால் எந்தத் தேவையும் எமக்கில்லை. குற்றம் செய்தவர்கள் யாராயினும் அதை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

இஸ்லாத்தின் வழி நடப்பவர்கள் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான காரியத்தை ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். புகுத்தப்பட்ட பொய்களைக் கட்டவிழ்ப்பதும் அதன் மூலம் புகுந்து விட்ட மதவெறியை வெட்டிச் சாய்ப்பதுமே எமது நோக்கம்.

கடந்த கால முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றில் உலகமே வியந்து பார்க்கும் உன்னத காரியங்களைக் கூட இஸ்லாத்தின் பார்வையில் இழிவானது என்று எடுத்துச் சொல்பவர்கள் நாங்கள். மொகலாய மன்னனின் கட்டிடக் கலைக்கு அகிலமே அதிசயிக்கும் தாஜ்மஹால் ஒரு சான்று.

தனது மனைவியின் மண்ணறைக்கு ஷாஜஹான் சூட்டிய பூச்செண்டு, இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியை அள்ளிக் குவிக்கும் அமுத சுரபி. ஆண்டுகள் நானூறைத் தொட்ட பின்னும் அப்படியே நிற்கும் ஆச்சர்யம்

அடக்கஸ்தலத்தில் பூசுவதோ, அதன் மீது கட்டிடங்கள் கட்டுவதோ கூடாது என்பது நபிகளார் காட்டிய நல்வழி. அண்ணலாரின் அமுத மொழியை அப்பட்டமாய் மீறிய ஷாஜஹானின் இந்தச் செயலை ஒரு இஸ்லாமியன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

அதுவும் ஊரார் பணத்தை எடுத்து மனைவிக்கு மாளிகையாம்? மன்னரென்றால் அப்படித் தான் என மக்களெல்லாம் ஏற்றுக் கொண்டாலும் இஸ்லாம் இதை ஏற்காது

போர்கள் என்பது நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி. நாடு பிடிப்பதற்கும் ஆண்டு மகிழ்வதற்கும், அரியணை ஏறி ஆட்சி செய்வதற்கும் ஆயுதம் தூக்குவது கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. இவற்றைக் கடைபிடித்த மொகலாய மன்னர்கள் எத்தனை பேர்?

இதுபோல அனைவரும் ஏற்றுக் கொள்கிற எத்தனையோ விஷயங்களைக்கூட நாங்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம், குறை கூறுகிறோம். பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் முன் வைக்கிறோம்.

ஆகையால் இது முஸ்லிம் மன்னர்களை நியாயவான்களாகச் சித்தரிக்க நடைபெறும் முயற்சி அல்ல. வரலாற்றின் பெயரால் இந்து முஸ்லிமின் இணைப்பை அறுக்க நினைக்கும் அயோக்கியர்களின் ஆபத்தை உணர்த்த எடுக்கும் முயற்சி.