Tamil Bayan Points

31) 38வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

38வது வசனம்

38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

சூரியனின் ஓட்டங்கள்

இவ்வசனத்தில் சூரியனின் ஓட்டத்தை பற்றி அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக முந்தைய கால மக்களிடம் இது பற்றி பல கருத்துக்கள் இருந்துள்ளது.

முதலில் பூமி தட்டை என்றார்கள். பிறகு உருண்டையானது என்றார்கள். எனினும் இன்றைய நவீன ஆராய்ச்சிக்கு பிறகு பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளார்கள். அதில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதாகவும் கூறுகின்றனர். மேலும் பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாளாகும். சூரியனை சுற்றுவதற்கு ஒரு வருடமாகும் என்று கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் பூமியை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் இயங்குவதாக கூறினார்கள். தற்போது சூரியனை மையமாக வைத்துதான் இயங்குகிறது என்று கூறுகிறார்கள். மேலும் சூரியன் தன் குடும்பத்தை சேர்ந்த கோள்களை இழுத்துக்கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ஐம்பது கிலோ மீட்டார் தூரத்தில் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

நாம் சாதாரணமாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பது போல் தோன்றினாலும் சூரியனால் இழுத்து செல்லப்படுகிறோம். இந்த உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே மறைமுகமாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறிவிட்டான். இதை நபி (ஸல்) அவர்களால் கூற இயலாது. ஏனெனில் அறிவியல் சார்ந்த ஞானம் அவர்களுக்கு இல்லை. இறைவனால் மட்டும்தான் இதை கூற முடியும். இதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகிறது.

இந்த வசனத்திற்கு விளக்கமாக புகாரியில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. அது சரியானது தானா? என்பதை அலசுவோம்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், “அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கின்றது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது.

(இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கின்றது. அப்போது அது (வழக்கம் போலக்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப் படாது. மாறாக, “வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள்.

இதைத் தான், “சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ என்னும் (36:38) இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள்.

நூல் புகாரி-3199

இச்செய்தி சற்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகும்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் எந்த குறையும் இல்லாவிட்டாலும் இதன் கருத்து நபி (ஸல்) அவர்களின் கூற்றா?, இறைவனின் அந்தஸ்திற்கு ஏற்றதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

வானம், பூமி, மரம், செடி, கொடி அனைத்தும் அல்லாஹ்விற்கு பணிகின்றன என்பது போல சூரியனும் அல்லாஹ்விற்கு பணிகிறது என்று சொன்னால் அந்த கருத்தை மறுப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனலாம்.

அல்லது இல்முல் கைப் எனும் மறைவான விஷயத்தை பற்றி இச்செய்தி பேசுகிறது என்றால் ஒரு முஸ்லிமிற்கு அதை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்றாகி விடும். அதில் விளக்கமளிக்க ஏதுமிருக்காது.

அல்லது சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று சூரியன் குறித்த மனிதர்களின் சாமானிய பார்வையை அது பிரதிபலிக்கிறது என்றால் அப்போதும் அதை ஏற்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இந்த செய்தி இவற்றை பேசாமல் சூரியனின் சுழற்சியை பற்றி பேசுவதாக அமைந்துள்ளது.

சூரியன் மறையும் போது எங்கே செல்கிறது? யாரிடம் செல்கிறது? என்று சூரியனின் இயக்கத்தை பற்றி கூறுகிறது. இது வஹீயிலிருந்து உள்ளதுதான் என்று நம்பினால் இதன் கருத்தில் எந்த பிழையும் இருக்கக் கூடாது.

ஆனால் இச்செய்தியில் பிழைகள் உண்டு. சூரியனின் உண்மை நிலையை சொல்லும் வகையில் இது இல்லை. சூரியன் மறையும் போது அது அர்ஷுக்கு கீழ் செல்வதாக இச்செய்தி கூறுகிறது. இது சூரிய இயக்கத்திற்கு மாற்றமானதாகும்.

உதாரணமாக நம் நாட்டிற்கு சூரியன் மறையும் போது மற்றொரு நாட்டிற்கு அது உதிக்கிறது. மற்ற நாட்டுக்கு மறையும் போது வேறு நாட்டுக்கு உதிக்கிறது. எனவே சூரியன் தொடர்ந்து சுழற்சியிலேயே உள்ளது. நமக்கு மறையும் சூரியன் இன்னொரு நாட்டிற்கு உதிக்கிறது. இதை அர்ஷுக்கு கீழ் செல்கிறது என்று சொல்வது பொருத்தமற்றதாக உள்ளது.

அண்டவெளியில் பூமி தன்னை தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகிறது.

சூரியனும் சுற்றிக் கொண்டிருக்கிறது

இரண்டும் மிகவேகமாக அண்டவெளியில் சென்றுக் கொண்டும் உள்ளன. பூமி சூரியனை சுற்றி வரும்போது அது பூமிக்கு முகம் காட்டுவதை வைத்து தான் சூரியனின் உ தயமும் மறைவும் ஏற்படுகிறது.

இந்நிலையில் சூரியன் மறைவதை அது அர்ஷுக்கு கீழ் செல்கிறது என்று சொல்வது எப்படி பொருத்தமானதாக இருக்கும்? அது அல்லாஹ்விற்கு கட்டுப்படுகிறது என்பதையே அர்ஷுக்கு கீழ் செல்கிறது என்று சொல்லப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் அதுவும் சரியில்லை.

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும்உள்ளடக்கும்.

(அத்தியாயம்:2 : 255.) 

அர்ஷ் பூமியையும் வானத்தையும் உள்ளடக்குகிறது என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த அடிப்படையில் சூரியனுடைய மொத்த இயக்கமும் அர்ஷுக்கு கீழ்தான் உள்ளது என்றாகிறது. ஆனால் மறையும் போது மட்டும் அர்ஷுக்கு கீழ் செல்கிறது. மற்ற நேரங்களில் அர்ஷுக்கு கீழ் செல்லவில்லை என்று கூறும் போது இவ்வசனத்திற்கு மாற்றமாக அமைகிறது.

இப்படி சூரியனின் உண்மையான இயக்கத்திற்கு மாற்றமான சூரியனை படைத்த இறைவன் கூறியிருக்கமாட்டான். ஏனெனில் அல்லாஹ்வுடைய கூற்று உண்மையாதாகும்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்கமுடியும்?

(அல்குர்ஆன்: 4 : 87.) 

இந்த செய்தியை ஏற்றால் சூரியனின் இயக்கத்தை பற்றி அதை படைத்த அல்லாஹ்விற்கு தெரியவில்லை என்ற ஆபத்தான கருத்து வரும். எனவே மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் உண்மைக்கு மாற்றமானதாகவும் குர்ஆனுடைய வசனத்திற்கு மாற்றமானதாகவும் இருப்பதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே யாசீன் அத்தியாயத்தின் 38 வது வசனத்தின் விளக்கமாக இந்த செய்தியை கருத முடியாது.