Tamil Bayan Points

31) குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்

திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் முத்தலாக் என்ற மூடத்தனத்திற்கு முட்டுக்கொடுத்திருக்க வேண்டியதில்லை.

  • ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது.
  • பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.
  • பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும்.
  • விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.
  • இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.
  • இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.
  • இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவனும் திருத்திக் கொள்வான்.
  • தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.
  • தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் லேசாக அடித்துத் திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.
  • இதன் பின்னரும் இணக்கம் ஏற்படா விட்டால் உடனே தலாக் கூற முடியாது.
  • ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!

وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (லேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன் : 4:34)

4:35 وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:4:35)

நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.