Tamil Bayan Points

31) கலகக்காரர்களை ஒடுக்கியவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on April 6, 2023 by Trichy Farook

31) கலகக்காரர்களை ஒடுக்கியவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கூட்டம் ஜகாத்தைத் தர மாட்டோம் என்று கூறியது. சிலர் மதம் மாறி குழப்பத்தை விளைவித்தார்கள். இவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்கள் போர்தொடுத்து அவர்களை அடக்கினார்கள்.

அன்றைக்கு மாத்திரம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்காமல் ஆட்சியைத் தக்க வைப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பின்னால் இஸ்லாமிய ஆட்சி என்றே ஒன்று அந்நாட்டில் இருந்திருக்காது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்ர் (ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர்தொடுக்க அபூபக்ர் தயாரானார்). லா இலாஹ இல்லல்லாஹ் கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்… தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர…

அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று உமர் (ரலி) கேட்டார். அபூபக்ர் (ரலி) உமரை நோக்கி அல்லாஹ்வின் மீதாணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக இவர்களிடம் நான் போர் செய்வேன் என்றார். இது பற்றி உமர் (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமானத் தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்.

நூல் : புகாரி-1400 

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஸகாத் தொடர்பான வழிமுறைகளை வசூலிப்பவருக்கு எழுதிக் கொடுத்து ஸகாத்தை வசூலிக்கச் சொன்னார்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட போது என்னை பஹ்ரைனுக்கு (ஆளுனராக) அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி அதில் நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தால் முத்திரையிட்டார்கள். அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன.

முஹம்மத் (எனும் சொல்) ஒரு வரியிலும் ரசூலு (தூதர் எனும் சொல்) ஒரு வரியிலும் அல்லாஹ் (அல்லாஹ்வின் எனும் சொல்) ஒரு வரியிலும் (முஹம்மது ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று பொறிக்கப்பட்டிருந்தது.

நூல் : புகாரி-3106 

நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பு உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் இறந்த பிறகு நாட்டில் மேற்குறிப்பிட்ட பெரும் பிரச்சனைகள் எழுந்ததால் அதை சமாளிக்க அப்படையை நிறுத்தி வைக்குமாறு உமர் (ரலி) போன்ற பல நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பறவைகள் என்னை இராய்ந்து சென்றாலும் பராவாயில்லை. நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய படையை திரும்பி வரச் சொல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். உஸாமா (ரலி) அவர்களின் படை வெற்றியுடனும் செல்வத்துடனும் திரும்பி வந்தது.

மக்காவைச் சுற்றிலும் உள்ள கலகக்காரர்களுக்கு இவ்வெற்றி ஒரு அச்சத்தை ஏற்படுத்தி அபூபக்ர் (ரலி) அவர்கள் வலிமையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று உணர்த்தியது.

நூல் : அத்தபகாதுல் குப்ரா பாகம் : 4 பக்கம் : 67