Tamil Bayan Points

30) 37 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

37 வது வசனம்

37. இரவும் அவர்களுக்கு ஓர் சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

நாளின் ஆரம்பம் இரவா? பகலா?

நாளின் ஆரம்பம் இரவுதான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால் பிறையை கண்ணால் பார்க்காமல் வானியல் ரீதியாக கணித்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்கின்ற சிலர் நாளின் ஆரம்பம் பகல் என்று நம்புகின்றனர். இது தவறாகும். நாளின் ஆரம்பம் இரவு என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இதை மறைமுகமாக இவ்வசனம் கூறுகிறது. “அதிலிருந்து (இரவிலிருந்து) பகலை உரித்தெடுக்கிறோம்.” என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் இரவுதான் முதலாவது பகல் அதிலிருந்து பிறப்பதுதான் என்று விளங்குகிறது. உதாரணமாக ஒரு பழத்திற்கு மேல் உள்ள தோலை உறிப்பது போன்று. தோல் என்பது வெளிப்புறத்தில் மூடியிருப்பதுதான். பழம்தான் முதலாவதாகும்.

அதே போன்றுதான் இரவு என்ற முதலாவது பொருளிலிருந்து பகல் உரிக்கப்படுகிறது. இதன் மூலம் இரவுதான் ஆரம்பம் என்பதை விளங்கலாம். இதை மேலும் பல சான்றுகள் வலுப்படுத்துகிறது.

நான் பனூ ஸலாமா (கோத்தரித்தின்) குழுவிலே இருந்தேன். அவர்களில் மிகவும் சிறிய வயதுடையவனாவேன். அப்போது அவர்கள் “லைத்துல் கத்ர் (இரவை) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நமக்காக கேட்பவர் யார்?” என்று கேட்டனர். அது ரமளான் மாதத்தின் இருபத்து ஒன்றாம் நாள் காலையாகும்.

பிறகு (அவர்களுக்காக) நான் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அடுத்தற்கடுத்த) மஃரிப் தொழுகையில் இணைந்தேன். பிறகு அவர்களுடைய வீட்டு வாசலில் நின்றேன். என்னை அவர்கள் கடந்து சென்ற போது “(வீட்டுக்குள்) செல்” என்று கூற, நானும் (அவர்களுடன்) செ

ன்றேன். அப்போது இரவு உணவு கொண்டுவரப்பட்டு, அவர்கள் என்னை பார்த்தார்கள். உணவு குறைவாக இருந்ததால் சாப்பிடாமல் இருந்து கொண்டேன். அவர்கள் சாப்பிட்டு முடித்தபோது “என் காலணியை எடுத்துக் கொடு” என்று கூறிவிட்டு எழுந்தார்கள். நானும் அவர்களுடன் எழுந்தேன்.

அப்போது அவர்கள் “உமக்கு ஏதோ தேவை இருப்பது போன்று உள்ளதே?” என்று கேட்க, நான் “ஆம், லைலத்துல் கத்ர் (இரவு) பற்றி கேட்பதற்காக பனூ ஸலமாவை சேர்ந்த வாகன கூட்டத்தினர் என்னை உங்களிடம் அனுப்பினார்கள்” என்றேன். அதற்கவர்கள் “இது எத்தனையாவது இரவு” என்று கேட்க, நான் “இருபத்து இரண்டாவது இரவு” என்றேன். அவர்கள் “இதுதான் அந்த இரவு” என்று கூறிவிட்டு திரும்பி சென்று “(இது) அல்லது நாளைய (இருபத்தி மூன்றாம்) இரவு” என்று கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் அபூதாவூத்-1171

இச்செய்தியை நன்றாக கவனிக்க வேண்டும். அப்துல்லாஹ் பின் உனைஸ் என்ற நபித்தோழர் இருபத்து ஒன்றாம் காலையில் பனூ ஸலமா கூட்டத்தினரிடம் பேசுகிறார். பிறகு நபி (ஸல்) அவர்களுடன் அதைத் தொடர்ந்து வரும் மஃரிப் தொழுகை முடித்து உரையாடும் போது இது இருபத்து ஒன்றாம் இரவு” என்று கூறாமல் இருபத்து இரண்டாம் இரவு” என்று கூறுகிறார்.

நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் இருபத்து ஒன்றாம் நாள் பகலை தொடர்ந்து வருகின்ற இரவை இருபத்து ஒன்றாம் நாள் இரவு என்றே கூறியிருப்பார். ஆனால் அவ்வாறு கூறாமல் இருபத்து இரண்டாம் நாள் இரவு என்று குறிப்பிட்டு, மஃரிபிலிருந்து மறுநாளாகிய இருபத்து இரண்டாம் நாள் துவங்கி விட்டது என்பதை உறுதிபடுத்துகிறார். இதன் மூலம் இரவிலிருந்துதான் நாள் ஆரம்பமாகிறது என்பதை அறியலாம். இது நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் நடந்ததால் அவர்களுடைய அங்கீகாரத்தை பெறுகின்றது.

மற்றொரு செய்தியில் நபி (ஸல்) அவர்களே இதை தெளிவாக கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதமுடைய மக்களின் (மனிதர்களின்) செயல்கள் ஒவ்வொரு வியாழன் வெள்ளி இரவில் எடுத்துக் காட்டப்படும். அப்போது உறவை முறித்து வாழ்பவனின் செயல் ஏற்கப்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் அஹ்மத்-9883

இச்செய்தியில் வியாழக்கிழமை பகலை தொடர்ந்து வருகின்ற இரவை வியாழன் இரவு என்று நபியவர்கள் கூறாமல் வெள்ளிக்கிழமை இரவிலான வியாழன் என்று கூறுகிறார்கள். நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் வியாழன் பகலை தொடர்ந்து வருகின்ற இரவை வியாழன் இரவு என்றுதான் கூறி யிருப்பார்கள். ஆனால் அவ்வாறு கூறாமல் வெள்ளிக்கிழமை இரவு என்று கூறுகிறார்கள். வியாழக்கிழமை மக்ரிபிற்கு பிறகான இரவை வெள்ளிக்கிழமை இரவு என்று குறிப்பிடும் வழக்கம் முஸ்லிம்களிடையேயும் இருப்பதை பார்க்கலாம்.

இதன் மூலம் இரவிலிருந்துதான் மறுநாள் துவங்குகிறது என்பதை அறியலாம்.