Tamil Bayan Points

30) மங்கையர் நலன் நாடும் மாமறை

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

மங்கையர் நலன் நாடும் மாமறை

சமூகம் எனும் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் அடித்தளமாகத் திகழும் ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தோடு வாழ்வது அவசியம். ஆகவேதான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், ஒழுக்கமே உண்மையான சொத்து போன்ற சொற்கள் சமூக வழக்கில் உள்ளன.

இந்த வகையில், பொதுநலன் பேணும் இஸ்லாமிய மார்க்கம் ஆண்களும் பெண்களும் சுய ஒழுக்கத்தோடு வாழுமாறு அதிகம் போதிக்கிறது. அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி இருப்பது போன்று, சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அவற்றில் ஆரம்பகட்ட அறிவுரையாக, பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு போதிக்கிறது.

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன்:24:30)

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:24:31)

மனிதன் ஒன்றை விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் பார்வையே முக்கிய காரணியாக உள்ளது. ஒழுக்க நெறிகளின் பட்டியலில் முதல் இடம் வகிப்பது, பார்வைக் கட்டுப்பாடு தான். இதைக் கடைப்பிடிப்பதில் ஆண்களுக்குக் கூடுதல் அறிவுரையை இஸ்லாம் வழங்குகிறது. அதற்குத் தகுந்த காரணம் உள்ளது.

மனித சமுதாயம் தழைத்தோங்க சில தனித்துவமான வேறுபாடுகளை, ஏற்பாடுகளை இறைவன் செய்திருக்கிறான். அதன்படி, ஆண்களை ஈர்க்கும் அம்சங்கள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதைப் பெரும் ஆராய்ச்சி இல்லாமல் இயல்பாகவே புரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆண் மிகவும் குறைந்த ஆடையுடன் இருந்தாலும் கூட அவனைப் பார்க்க பெண்கள் பெரிதும் ஆசைப்படுவதில்லை; ஆர்வம் காட்டுவதில்லை. அதேசமயம், ஒரு பெண் குறைந்த அளவு உடல் எடுப்பைக் காட்டினாலும் சுற்றியிருக்கும் ஆண்களின் பார்வையில் மாற்றம் ஏற்படுகிறது; மனம் தடுமாற்றம் அடைகிறது.

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ

பெண்கள், ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக ஆக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

(திருக்குர்ஆன்:3:14)

பெண்கள் அலங்காரத்தை வெளிக்காட்டும் போது ஆண்களிடம் சஞ்சலத்தைத் தூண்டுகிறது. இந்த உண்மையை உள்ளூர் முதல் உலக அளவில் நடந்த பாலியல் தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆய்வுகளும் ஒப்புக் கொள்கின்றன. ஆதலால், இஸ்லாத்தில் ஆண்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறப்படுகிறது.

حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، كِلَاهُمَا عَنْ يُونُسَ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يُونُسُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ
«سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي»

எதேச்சையாக (அந்நியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம்-4363

حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ «مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»

‘உங்களில், திருமணத்திற்கான செலவுகளுக்குச் சக்தி பெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (1905)

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ لَمْ أَرَ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ، ح حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ»

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல! கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது, இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6243)

ஆண்களின் சலனத்தை, சபலத்தைத் தூண்டும் வகையில், பெண்கள் ஆடை அணிவது சமூகச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்று சமூக அக்கறை கொண்டவர்கள் சரியாகப் புரிந்திருக்கிறார்கள். அவர்கள் பெண்களுக்குச் சொல்லும் ஆடைக் கட்டுப்பாட்டை மனதார வரவேற்கிறார்கள். எனவே தான் நமது நாட்டிலும் கூட ஆடை ரீதியாகப் பல சட்டங்கள் போடப்பட்டன.

கோயில்களுக்கு வரும் மக்களுக்கு இந்து அறநிலையத் துறை ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. பள்ளி மற்றும் கல்லூரியில் பெண்கள் முழுமையான ஆடையை அணியுமாறு விதி வகுக்கப்பட்டது. வருவாய் துறையில் இருப்போர் ஆடை விஷயத்தில் கட்டுக்கோப்புடன் இருக்குமாறு அத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்று பல சட்டங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல இடங்களில் அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்று தான். ஆண்களின் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்களின் ஆடை இருந்து விடக் கூடாது.

ஆனால், பெண்களிடமுள்ள ஈர்ப்பைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ஆட்களோ விளம்பரங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் பெண்களைக் காட்சிப் பொருளாக நிறுத்த முனைகிறார்கள். சுயநலத்துக்காக சமூகத்தை நாசப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

முழுமையாக உடை அணிவதுதான் கண்ணியமென ஒப்புக் கொள்ளும் இவர்கள், பெண்கள் விஷயத்தில் மாறுபட்டு நிற்கிறார்கள். அங்க அவயங்களை வெளிக்காட்டும் ஆடைகளை மகளிர் அணியும்போது ஆதரிக்கிறார்கள்.

அதேசமயம், இத்தகைய கயவர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் அப்படி வெளியே சென்று வருவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் மூலம் இவர்களின் வக்கிர நோக்கம் பளிச்செனப் புரிகிறது. இந்த நபர்கள் தங்களது கீழ்த்தரமான எண்ணங்களை மறைப்பதற்குப் பெண் உரிமை எனும் முழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது; அவள் சமூகத்தைப் பற்றிக் கண்டு கொள்ள வேண்டியதில்லை என்று வறட்டுத்தனமாக வாதிடுகிறார்கள்.

அதன் பின்னணியில் ஒளிந்துள்ள பாதகங்களைப் புரியாமல் நவீனகாலப் பெண்களும் அதில் மயங்கி விடுகிறார்கள். எவ்வித உறுத்தலும் இல்லாமல் ஆபாசமான நடைபோடத் துவங்கிவிடுகிறார்கள். தங்களை முற்போக்குவாதிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆசாமிகள் இதற்கு வக்காலத்து வாங்குவது தான் வேதனை.

இவ்வாறு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படுவதையும், வலம் வருவதையும் இஸ்லாம் அறவே வெறுக்கிறது. அவர்களை சமூகத்தில் கண்ணியமாக வாழச் செய்வதற்காக வழிகளை வகுத்துள்ளது.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள்,  பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(திருக்குர்ஆன்:24:31)

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:33:59)

சமூகத்தில் எழும் சிக்கல்களுக்கு இஸ்லாம் பல கோணங்களில் தீர்வைச் சமர்ப்பிக்கும். இன்னும் சொல்வதாயின் அந்தப் பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து களையெடுக்கும். அந்த ரீதியில் பெண்கள் விஷயத்தில் எல்லை தாண்டிவிடக் கூடாதென ஆண்களைப் பலமாக எச்சரித்துள்ளது. அதுபோன்று பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

உடலை முழுமையாக மறைத்துக் கொள்வது நபிகளாரின் மனைவியருக்கு மட்டும் உரிய தனிச்சட்டம். மற்ற முஃமினான பெண்கள், அந்நிய ஆண்களுக்கு முன்பு தங்களது முகம், முன்கைகள், பாதங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும். இதனை மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

இக்கட்டளையைப் பெண்கள் முறையாக பின்பற்றும் போது அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். அவர்களிடம் ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் தன்மை வெளிப்படாது. இதனால், தேவையற்ற தொல்லைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

இதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளை முஃமினான பெண்கள் உணர்ந்து செய்லபட வேண்டும். அவர்களுக்குப் பின்வரும் செய்திகளில் தகுந்த பாடமும் வழிகாட்டுதலும் இருக்கிறது.

وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ: حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ: عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
يَرْحَمُ اللَّهُ نِسَاءَ المُهَاجِرَاتِ الأُوَلَ، لَمَّا أَنْزَلَ اللَّهُ: {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} [النور: 31] شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِهَا

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! “(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!’’ எனும் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டாவாக ஆக்கிக்கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (4758)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، قَالَتْ
«كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

நூல்: புகாரி-578

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வாழ்ந்த நபித்தோழிகள் மார்க்கம் கூறும் வகையில் தங்களை மாற்றிக் கொண்டார்கள். ஹிஜாப் அணிவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த விஷயத்தில் இன்றைய காலப் பெண்களோ அதிக அலட்சியத்தோடு இருக்கிறார்கள்.

ஒரு கைக்குட்டை அளவு துணியை தலையில் கட்டிக் கொண்டு ஹிஜாப் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். முஸ்லிம் அல்லாத அந்நிய ஆண்களிடம் ஹிஜாபைப் பேண வேண்டியதில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆலிம்கள் முன்னிலையில் வரும்போது மட்டும் முக்காடு போட்டுக் கொள்வோரும் உள்ளனர்.

சிலரோ உடலோடு ஒட்டிப் பிடிக்கும் வண்ணம் இறுக்கமாக ஆடை அணிந்து செல்கிறார்கள். பார்வை ஊடுருவும் வகையில் மெல்லிய துணியில் ஹிஜாபை அணிகிறார்கள். இப்படியெல்லாம் கவனக்குறைவாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் மறுமையை அஞ்சி, தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர்.

அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-4316

ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம் பெண்களிடம் அலட்சியப் போக்கு நுழைய மற்றொரு காரணமும் உள்ளது. பெண்களின் ஆடைக்குரிய அளவுகோலைச் சரியாக அறியாமலும், பேணுதல் என்ற பெயரிலும் வரம்புமீறி சில முஸ்லிம்கள் பெண்களுக்குக் கூடுதல் கட்டுப்பாட்டைத் திணிக்கிறார்கள்.

மார்க்க சட்டத்திற்கு மாற்றமாக, முகத்தையும் முன்கையையும் பாதங்களையும் கட்டாயம் மறைக்க வேண்டுமென ஹிஜாப் சட்டத்தில் கடுமை காட்டுகிறார்கள். இது சிலருக்கு ஹிஜாப் சட்டத்தின் மீது தவறான புரிதலும் வெறுப்பும் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُوسَى بْنُ حِزَامٍ، قَالاَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اسْتَوْصُوا بِالنِّسَاءِ، فَإِنَّ المَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ»

பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புகாரி-3331

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனது கிருபையால் பெரும் மாற்றம் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டது. மார்க்கத்தில் உள்ளவாறு ஹிஜாபைப் பேணும் பெண்கள் அதிகரித்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹிஜாப் என்பது பெண்ணை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று நெடுங்காலமாகக் கூறப்பட்ட தவறான கருத்து பெருமளவு களையப்பட்டது.

இத்தோடு நாம் ஓய்ந்து விடக் கூடாது. இன்னும் ஹிஜாப் பற்றிய போதுமான புரிதல் இல்லாத மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பும் நமக்கு உள்ளது. 

மாமறையும் அதன் விளக்கமான நபிமொழிகளும் பெண்களுக்குப் போதிக்கின்ற நெறிமுறைகளே அவர்களின் வாழ்வுக்கு உகந்தவை. அதற்கேற்ப வாழும்போது அவர்கள் அனைத்த உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். சமூகத்தில் உரிய பாதுகாப்பும் முன்னேற்றமும் கிடைக்கும்.