Tamil Bayan Points

30) பெற்றோரை சபிக்காதீர்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

பெற்றோரை சபிக்காதீர்

பெற்றோரை பெரிதும் மதிக்கின்ற மார்க்கம் இஸ்லாம். அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். உண்ண உணவு உடுத்த உடை இதையும் தாண்டி அன்பான பராமரிப்பு என அனைத்தையும் பெற்றோர்களுக்காக ஒவ்வொரு பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இப்படிப்பட்ட மார்க்கத்தில் உள்ளவர்கள் பெற்றோர்களை திட்டுகின்றார்கள் என்று சொன்னால் இந்த சமுதாயம் ஒழுக்கமற்று போய் விட்டது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணத்தை காட்ட முடியாது ஸஹாபாக்கள் தங்கள் பெற்றோர்களை இஸ்லாம் கூறியபடி கண்ணியப்படுத்தி வந்ததாலே அவர்களை திட்டுவதென்பது அவர்களுக்கு வினோதமாகவே தெரிந்தது. 

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார் என்று கேட்கப்பட்டது நபி (ஸல்) அவர்கள் ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும். ஏசுவார் (ஆக தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள்

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி-5973

பிறரின் பெற்றோர்களை திட்டினால் அதுவே நமது பெற்றோரை திட்டுவது போலாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அதை கூட ஒரு முஸ்லிம் செய்து விடக்கூடாது பிறர் நம் பெற்றோரை திட்டுவதற்கு எந்த வகையிலும் நாம் ஒரு காரணியாக இருந்து விடக்கூடாது என்பதை இந்த செய்தியில் நபிகளார் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் இன்றைய நடைமுயைில் இதையெல்லாம் தாண்டி நேரிடையாகவே தமது பெற்றோரை திட்டும் அவல நிலையை நமது இஸ்லாமிய சமூகத்தினரிடம் காணலாம். பெற்றோரை திட்டுவது இஸ்லாமியர்களின் கலாச்சாரமல்ல. முஸ்லிம்களின் பண்பாடல்ல பெற்றோரை திட்டுவதை சாதாரண ஒன்றாக நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். இதை இறைவன் எவ்வாறு பார்க்கின்றான் என்பதை பின்வரும் செய்தியில் கவனியுங்கள். 

அலி ரலி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள்அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்

அறிவிப்பவர் அபுத்துஃடல் (ரலி)

நூல் : முஸ்லிம்-4003

பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் தந்தையரை யாரும் திட்டமாட்டார்கள். ஆனால் அதற்கும் சேர்த்தாற் போல தாயை திட்டித்தீர்க்கின்றனர். பிள்ளைகளை பொறுத்த வரை தாய் தான் இளக்காரமாளவள். ஆம். யார் தாராளமாக பாசத்தை கொட்டுகின்றார்களோ அவர்கள்இளக்காரமாகத்தான் தெரியும்.

சிலர் தமது மனைவியின் பேச்சை கேட்டு குறிப்பிட்ட பிரச்சனையில் முழுவதுமாக மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் செயல்பட்டு தாயை திட்டுவதை காண்கின்றோம். இது முற்றிலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய காரியம். இது போன்ற காரியத்தை ஒரு முஸ்லிம் இனியும் செய்யலாகாது. ஏனெனில் மற்றோரை சபிப்பதும் பெற்றோரை சபிப்பதும் இறைவனின் பார்வையில் ஒன்றல்ல. அது இறைவனின் சாபத்தை பெற்றுத்தருகின்ற நாச காரியம் என்பதை இஸ்லாமியர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.