Tamil Bayan Points

03) ஹதீஸ் கலை விதி பற்றிய ஓர் பார்வை

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on June 16, 2022 by

3) ஹதீஸ் கலை விதி பற்றிய ஓர் பார்வை

ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறை

திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுவது நமது மனோ இச்சையின் அடிப்படையில் அல்ல. மாறாக திருக்குர்ஆனிலிருந்தும் நம்பகமான ஹதீஸ்கள் என்று உறுதி செய்யப்பட்ட ஹதீஸ்களில் இருந்தும் இந்த விதியை நாம் அறிந்து கொள்ளலாம். நபித்தோழர்களும் தமது வாழ்வில் இந்த விதியைக் கடைப்பிடித்துள்ளார்கள்.

ஹதீஸ் கலை அறிஞர்களும் இந்த விதியை வகுத்துள்ளனர். நல்லறிஞர்களும் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர். முஸ்லிம்களாகிய நாம் திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்புகிறோம். மார்க்கம் தொடர்பான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவற்றையும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நாம் நம்புகிறோம். இவ்வாறு நாம் நம்பினால் தான் இஸ்லாம் என்ற வட்டத்துக்குள் இருக்க முடியும்.

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளுக்கும் மனிதர்களிடமிருந்து வரும் செய்திகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. மனிதர்களின் செய்திகளில் முரண்பாடுகள் இல்லாமல் இருக்காது. ஆனால் அல்லாஹ்வின் செய்தியில் முரண்பாடு அறவே இருக்காது என்பது அவற்றுள் முக்கியமான வேறுபாடாகும்.

4:82 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(திருக்குர்ஆன்:4:82.)

41:42 لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

(திருக்குர்ஆன்:41:42.)

மனிதர்களிடம் ஏன் முரண்பாடுகள் ஏற்படுகின்றன? அல்லாஹ்வின் வார்த்தையில் ஏன் முரண்பாடு ஏற்படுவதில்லை? முன்னர் பேசியதை மறந்து விடுதல்! முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்! போதுமான கவனமின்றிப் பேசுதல்! யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!

வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்! விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்! மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேச முடியாது. இது போன்ற பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதால் அவனுடைய செய்திகளில் முரண்பாடு இருக்காது.

வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்! விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்! மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேச முடியாது. இது போன்ற பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதால் அவனுடைய செய்திகளில் முரண்பாடு இருக்காது.

இறைவனின் வார்த்தைகளில் எவ்வாறு முரண்பாடு வராதோ அது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளிலும் முரண்பாடு வரக் கூடாது. மேலும் திருக்குர்ஆனுக்கு முரணாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில் நபிகள் நாயகம் அவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் பேசிய அனைத்தும் அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. மாறாக அவை அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையாகும்.

53:3 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ

53:4 اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰ

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

(திருக்குர்ஆன்: 53:3, 4.)

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் இறைவன் புறத்தில் இருந்து வந்ததால் இரண்டு செய்திகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்திச் செல்லுமே தவிர முரண்பட்டு விலகிச் செல்லாது.

நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஒரு செய்தி கிடைக்கிறது. அந்தச் செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக நமக்குத் தோன்றுகிறது. முரண்பாடு இல்லாத வகையில் இரண்டுக்கும் இணக்கமான விளக்கம் கொடுக்க எவ்வளவு முயன்றாலும் இயலவில்லை என்றால் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

முரண்பாடான இரண்டு விஷயங்களில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். முரண்பட்ட இரண்டு விஷயங்களும் ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.

• குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும்.

• குர்ஆனை ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட அந்த ஹதீஸை மறுக்கும்
நிலை ஏற்படும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை விட்டு விட்டு குர்ஆனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு நாம் முடிவு செய்வதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகப் பேசி விட்டார்கள் என்பது பொருளல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்கள்: சொல்லவில்லை என்பதே இதன் பொருள். அப்படியானால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகிவிடுமே
என்ற சந்தேகம் எழலாம்.

ஹதீஸ்களும் நிச்சயம் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த மனிதரின் போதனைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை அளவுக்குப் பாதுகாக்கப்படவில்லை. அந்த ஒரு மனிதரின் போதனைகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பாதுகாப்பு ஏற்பட்டை திருக்குர்ஆனின் பாதுகாப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

1- திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித் தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் எழுதப்படவில்லை.

2- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள். பல நபித்தோழர்களூம் மனப்பாடம் செய்திருந்தனர். இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.

3- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரி பார்ப்பார்கள். இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.

4- நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ இரண்டு மூன்று நபித் தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு – அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் – சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

5- எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.

6- குர்ஆனை அல்லாஹ்வே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை அறிஞர்கள் தான் இதற்கான விதிகளைக் கண்டறிந்து ஹதீஸ்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டனர். திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதால் மனிதர்கள் வகுத்த பாதுகாப்பு வளையத்தை மீறி தவறான ஹதீஸ்கள் சரியான ஹதீஸ்கள் என்ற பெயரில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது.

அதையும் களை எடுப்பதற்குத் தான் பலவித நிபந்தனைகளை அறிஞர்கள் வகுத்தனர். அவற்றில் ஒன்று தான் குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை. இதை நாம் புதிதாகக் கண்டு பிடித்துக் கூறுவது போல் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காலம் காலமாக இது ஹதீஸ் கலையில் விதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மையாகும்.