Tamil Bayan Points

03) விரிந்து செல்லும் பேரண்டம்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

அத்தியாயம் 2

நிறமாலை நோக்கி

சூரியனின் சாதாரண வெண்ணிற ஒளி வெவ்வேறு அதிர்வெண்களையும் வெவ்வேறு நிறங்களையும் கொண்ட வெவ்வேறு ஒளிகளின் கலவை என நியூட்டன் சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் (Prism) செலுத்தி ஒளிப் பிரிகை செய்து வெவ்வேறு நிறங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார்.

அதன் பிறகு அந்த வெவ்வேறு வர்ணங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் (Prism) அதன் துணைக் கருவிகளும் (accessaries) இணைந்த தொகுதியே நிறமாலை நோக்கி (Spectrascope) ஆகும்.

நிற மாலை நோக்கியின் காட்சிப் பதிவுடன் டாப்ளர் தத்துவத்தை இணைக்கும் போது விஞ்ஞானிகளால் நமது பேரண்டத்திலுள்ள காலக்சிகள் ஒன்றை ஒன்று நெருங்கி வருகிறதா? அல்லது ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கிறதா? என்பதைக் கண்டு பிடிக்க முடியும் எனக் கூறினோம். எனவே டாப்ளர் தத்துவம் என்பது என்ன என்று பார்ப்போம். முதலாவதாக இது ஒளியுடன் சம்மந்தப்பட்டதாகும்.

இரயில் எஞ்சினின் விசில் சப்தம் நம் அனைவருக்கும் அறிமுகமானதேயாகும். வழியோரம் நின்றிருக்கும் ஒருவரை நோக்கி இரயில் வண்டி வரும் போது அதன் விசில் சப்தம் சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமாகக் கூடுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும். இதைப் போன்று அந்த இரயில் வண்டி அவரைத் தாண்டி செல்லும் போது விசில் சப்தம் படிபடியாகக் குறையாமல் திடீர் எனக் குறைந்து விடுவதையும் சிலராவது கவனித்து இருக்க முடியும்.

செந்நிறப் பெயர்ச்சி

ஒலி அலைகளுக்குரிய இந்த இயற்பியல் பண்பு `ஒளி அலைகளுக்கும் பொருந்தும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நிறமாலை நோக்கியில் தென்படும் காட்சிகளுக்கு டாப்ளர் விளைவைப் பொருத்திப் பார்த்தார்கள். பொதுவாக நிறமாலை நோக்கியில் விழும் சூரிய ஒளி நிறப்பிரிகை அடைந்து அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் அளவு கோலில் (scale) ஒவ்வொரு நிறத்திற்கும் உரிய இடத்தில் அமையும் எனக் கண்டோம். இதைப் போன்று அண்ட வெளியிலுள்ள வெவ்வேறு காலக்சிகளின் ஒளிக் கற்றை களை நிறமாலை நோக்கியால் ஆய்வு செய்த போது அவற்றின் ஒளிக் கற்றைகள் சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்வதைக் கண்டு அறிவியலாளர்கள் மிகப் பெரிய வியப்பிற்கு ஆளானார்கள்.

அண்ட வெளியிலுள்ள காலக்சிகளின் ஒளிக் கற்றைகள் நிறமாலை நோக்கியின் அளவுகோலில் இடப் பெயர்ச்சி அடைவதற்குக் காரணம் அந்தக் காலக்சிகள் கூட அதனதன் இடத்தில் நிலைத்திருக்காமல் இடம் பெயர்ந்து கொண்டி ருக்கிறது என்பதாகும். இப்போது அந்த காலக்சிகள் சிவப்பு நிறத்தின் இடத்திற்கு மட்டும் இடப் பெயர்ச்சி செய்கிறது என்பதை டாப்ளர் தத்துவம் விளக்குகிறது.

நிறமாலை நோக்கியின் இரண்டு முனைகளில் ஒன்று குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்திற்கும் மற்றொன்று நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்திற்கும் உரிய இடங்களாகும். அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நோக்கி வருவதாக இருந்தால் பூமிக்கும் காலக்சிக்கும் இடையிலுள்ள தூரம் குறுகிக் கொண்டே வருவதால் அதன் ஒளிக் கற்றைகளின் அலை நீளமும் குறுகிக் கொண்டே வரும்.

எனவே அந்தக் காலக்சியிலிருந்து வரும் ஒளிக் கற்றைகள் நிறமாலை நோக்கியில் குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்தின் இருப்பிடத்தை நோக்கி இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும். ஆனால் நடப்பதோ நேர் மாற்றமான காட்சியாகும். ஏன்? ஏனென்றால் அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. அதற்கு மாறாக பூமியை விட்டு விலகிச் செல்கிறது என்பதே அதன் காரணமாகும்.

காலக்சிகள் பூமியை விட்டு விலகிச் செல்வதால் பூமிக்கும் அந்தக் காலக்சிகளுக்கும் இடையிலுள்ள தூரம் விரிவடைந்து செல்வதால் அதன் ஒளிக் கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. அறிவியலாளர்கள் ஒளிக் கற்றைகளின் இந்த இயற்பியல் பண்பை `செந்நிறப் பெயர்ச்சி (red shift) எனக் கூறுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் திறமை மிக்க அறிவியல் நிபுணராம் `எட்வின் ஹிப்பிள் அவர்களின் இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் அறிவியல் புரட்சியைத் தோற்றுவித்த கண்டுபிடிப்பாகும். ஐன்டீன் அவர்களின் சார்பியல் தத்துவங்களின் தோற்றம் சென்ற நூற்றாண்டில் நிகழாமல் இருந்தால் ஹப்பிள் அவர்களின் கண்டுபிடிப்பு சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்பு எனப் போற்றப்பட்டிருக்கும். ஹப்பிள் அவர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி இன்றைய உலகின் தலை சிறந்த விஞ்ஞானி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :

“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the twentieth century”  உநவேரசல (பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும். பக்கம் : 42)

பேரண்டத்தின் விரிவாக்கம் திருமறையில்

இருபதாம் நூற்றாண்டில் கூட உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளால் இவ்வளவு தூரம் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பை பாரறிய பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் வார்த்தைகள் இதோ :

“வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயமாக நாம் (அதை) விரிவாக்கம் செய்பவராவோம்.

(அல்குர்ஆன்:51:47.)

பேரண்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றிய இரகசியம், இருபதாம் நூற்றாண்டு வரை இருட்டில் புதைந்து கிடந்ததாகக் கூறப்படும் அந்த மர்மம் திருக் குர்ஆனில் இதோ ஏழாம் நூற்றாண்டிலேயே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! ஆனால் யாருக்கும் எந்த அக்கறையும் அதன் பால் இல்லை. எந்த அறிவியலாளர்களின் நிறமாலை நோக்கிகளோ ஏனைய ஆய்வுக் கருவிகளோ இதன் பால் (விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர) திரும்புவதில்லை. என்னதாம் நிகழ்ந்து விட்டது இம்மானிடர் தமக்கு?

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் உலகில் தோன்றிய அறிவியலாளர்களில் ஒருவர் கூட; ஆம்! உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளாம் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்டீன் போன்றவர்களும் கூட இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டு வருகிறது என்பதைக் கனவில் கூட கண்டதில்லை. அப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பையே திருக்குர்ஆனின் அறிவியல் ஏழாம் நூற்றாண்டில் கூறிக் கொண்டிருக்கிறது! திருக்குர்ஆன் ஒருகாலும் மனித அறிவிலிருந்து தோன்றியிருக்க முடியாது என்பதற்கு இதை விடச் சிறந்த அறிவியல் ஆதாரம் வேறு என்ன வேண்டும்? ஹாக்கிங் கூறுகிறார் :

“இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை என எண்ணிப் பார்ப்பது பொதுவான சிந்தனையின் சூழலில் கவனத்தை ஈர்ப்பதாகும். பேரண்டம் மாற்றமே இன்றி எக்காலமும் இருந்திருக்கிறது என்றோ அல்லது இன்று நாம் காண்பது போன்றே ஏறத்தாழ அதே நிலையில் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் படைக்கப்பட்டிருந்தது என்றோ பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இது அழிவற்ற உண்மைகளில் நம்புவதற்குரிய மக்களின் மனோ நிலைக்கு ஓரளவு காரணமாக இருந்தது………..

(பார்க்க : பக்கம்-6)

அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் கூற்றிலிருந்து எவ்வளவு விலை மதிப்பற்ற அரிய அறிவியல் பேருண்மை கள் திருக்குர்ஆனில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். திருமறையின் அறிவியல் ஞானத்தின் ஆழத்தை மேலும் புரிந்து கொள்வதற்காக நாம் இப்போது ஒரு வினாவை எழுப்புவோம்.

விழுந்து விடப் போகும் வானம்

பேரண்டத்தின் விரிவாற்றல் என்பது பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலாகும். ஆனால் பேரண்டத்திற்கு இப்படி ஒரு ஆற்றல் உண்டு என அறியப் படாதிருந்த காலங்களில் அதன் ஈர்ப்பாற்றலால் எழும் பிரச்சனைகள் தோன்றாமல் கட்டுப்பட்டிருந்ததற்கு என்ன விளக்கத்தை அறிவியலாளர்கள் கூறி வந்தார்கள் என்பதே நமது வினாவாகும்.

மொத்தப் பேரண்டமும் ஈர்ப்பு விசையால் ஆளப்படு கிறது என்பதும் இதன் காரணமாக பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பேரண்டத்தில் உள்ள ஏனைய பொருட்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் பூமி உட்பட விண்ணகப் பொருட்கள் அனைத்தும் பேரண்டத்தின் ஈர்ப்பு மையம் செயல்படும் இடத்தில் வீழ்ந்து விட வேண்டும். அவ்வாறு விழும் போது பூமியிலுள்ளவர்களுக்கு பூமியின் மீது வானம் வீழ்வது போன்ற உணர்வே ஏற்படும்.

ஏனெனில் நாம் இரயில் வண்டியில் செல்லும் போது ஜன்னல் வழியாகப் பார்த்தால் நாம் நகராமல் இருப்பது போன்றும் பாதை ஓரத்தில் உள்ள மரங்கள் ஓடுவது போன்றும் தோன்றுவதைப் போல, பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தாலும் பூமி அசையாமல் இருப்பது போன்றும், ஆனால் சூரியன் பூமியைச் சுற்றுவதைப் போன்றும் தோன்றுவதைப் போன்று பூமி பேரண்டத்தின் ஈர்ப்பு மையத்தில் வீழ்வதாக இருந்தாலும் வானம் பூமியின் மீது வீழ்வது போன்ற நிலையே பூமியிலுள்ள வர்களுக்கு ஏற்படும். ஆயினும் இப்படிப்பட்ட பேராபத்து இன்னும் நடைபெறவில்லை என்பது நமக்குத் தெரியும்.

இந்த இடத்தில் “ஏன் இன்னும் நடைபொறவில்லை? என மற்றொரு வினாவை எழுப்பினால் இக்கேள்விக்கும் கூட நம்ப முடியாதபடி திருக்குர்ஆன் பதிலளித்துக் கொண்டி ருக்கும் அற்புதத்தை நம்மால் காண முடியும். திருமறை கூறுகிறது:

(முஹம்மதே!) பூமியில் உள்ளதையும் அவனது கட்டளைப் படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா?அவன் கட்டளை யிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத் துள்ளான். அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்:22:65.)

அற்புதத் திருமறையின் இந்த அறிவியல் வசனத்தில் வானம் பூமியின் மீது வீழ்ந்து விடாதவாறு தடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதும், எனவே அதைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ் இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து வானங்களின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளான் என்ற செய்தியைக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மேலும் அவன் மற்றொரு கட்டளை பிறப்பித்து விட்டால் வானம் இடிந்து பூமியின் மீது விழத்தான் செய்யும் என்பதும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி இன்றைய உலகின் அதிநவீன அறிவியல் உண்மைகளைப் பற்றிய அறிவிலிருந்து நாம் எழுப்பிய வினாவுக்குக் கூட மிகப் பொருத்தமான பதிலை இம்மாமறை தந்து கொண்டிருப்பது இம்மாமறையின் அறிவியல் ஞானத்தை நமக்கு அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறதன்றோ!

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (ரஎநசளயட பசயஎவையவடி) பற்றியோ அல்லது அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடு பற்றியோ அல்லது அதன் விசையைக் கட்டுப்படுத்தா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தோ திருக்குர்ஆனுக்கு எதுவும் தெரியவில்லையென்றால் ஆகாயம் வீழ்ந்து விடாதவாறு தடுக்க வேண்டிய தேவை உண்டு; அதனால் அது தடுக்கப்பட்டு வருகிறது என திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடியும்? 

எனவே குறைந்த பட்சம் பேரண்டத்திற்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதும் மேலும் அதை சமன் செய்யும் மற்றொரு ஆற்றல் இப்பேரண்டத்தில் வெயல்பட்டு வருகிறது எனும் கருத்தும் இந்த வசனத்தில் (22:65) இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அந்த ஆற்றல் எது என்பதையே முன்னர் கண்ட வசனத்தில் (51:47) கூறப்பட்டிருக்கும் பேரண்டத்தின் விரிவாக்க ஆற்றலாகும். திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தில் இன்னும் ஐயுறத் தேவையுண்டா?

ஐன்டீனுக்கும் அடி சருக்கும்

திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தில் இதற்கு மேலும் ஐயம் கொள்பவர்கள் திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தி இருக்கும் பேரண்டத்தின் விரிவாற்றல் குறித்தும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் கூட அதைக் கண்டு பிடிக்க முடியாமல் வழி தவறிப் போனது குறித்தும் ஹாக்கிங் அவர்களே தமது நூலில் கூறி இருப்பதைப் பார்த்து விட்டு முடிவெடுக்கட்டும். ஹாக்கிங் கூறுகிறார் :

“பேரண்டம் விரிந்து செல்கிறது எனும் கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சியாகும். நியூட்டனுக்கும் மற்றவர்களுக்கும் முன்னர் ஏன் இதைப் பற்றி யாருமே சிந்திக்கவில்லையென்றால் ஒரு மாறாநிலைப் (static universe) பேரண்டம் விரைவிலேயே சுருங்கி விடும் என்று புரிந்து கொண்டிருப்பார்கள் என எளிதாக நம் அகக்கண் வியப்பெய்தலாம். ஆனால் பேரண்டம் விரிந்து செல்கிறது என்றே வைத்துக் கொள்வோம். பேரண்டம் நன்கு மெதுவாக விரிவடைந்து கொண்டிருக்குமேயானால் ஈர்ப்பாற்றல் படிப்படியாக அதன் விரிவாக்கத்தை நிறுத்தியிருக்கும். பிறகு சுருங்கத் தொடங்கியிருக்கும்.

இருந்த போதிலும் விரிவாக்கம் ஒரு தீர்மான விகிதத்திற்கு (critical rate) மேல் இருந்தால் ஈர்ப்பாற்றல் அதை நிறுத்துவதற்கு ஒருபோதும் ஆற்றல் பெறாது. எனவே பேரண்டம் தொடர்ந்து எக்காலமும் விரிந்து கொண்டிருக்கும். இது ஒருவர் பூமியின் மேலிருந்து ராக்கெட்டை ஏவும் போது நிகழ்வதற்கு ஓரளவு ஒப்பான தாகும். அது மிகக் குறைவான வேகத்தைப் பெற்றிருந்தால் ஈர்ப்பாற்றல் படிப்படியாக ராக்கெட்டை நிறுத்துவதுடன் அது தரையில் விழத் தொடங்கும்.

அதற்கு மாறாக அந்த ராக்கெட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தீர்மான வேகத்திற்கு மேல் இருந்தால் (வினாடிக்கு ஏழு மைல்) ஈர்ப்பாற்றல் அதைக் கீழ்நோக்கி இழுக்கும் சக்தியைப் பெறாது. எனவே அது பூமியை விட்டு காலமெல்லாம் போய்க் கொண்டே இருக்கும். பேரண்டத்தின் இந்தப் பண்பு நியூட்டனின் ஈர்ப்பாற்றல் தத்துவத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் அல்லது 18-ம் நூற்றண்டில் அல்லது 17-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத் தில் கூட எந்த நேரத்திலும் அனுமானித்திருக்கலாம். ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் வரை பிடிவாதமாக இருந்த ஒரு மாறாநிலைப் பேரண்டத்தில் (ய ளவயவஉ ரஎநசளந) நம்பிக்கை அவ்வளவு பலமாக இருந்தது.

1915-ல் ஐன்டீன் பொது சார்பியல் தத்துவத்தை உருவாக்கும் போது கூட பேரண்டம் மாறாநிலையானது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்ததால் அதன் சாத்தியத்தை உருவாக்குவதற்காக தன்னுடைய சமன்பாடு களில் (equations) இது வரை “பேரண்ட மாறா குணாங்கம் (cosmological constant) என அழைக்கப்பட்டு வந்த குணாங்கத்தைப் பயன்படுத்தினார். ஐன்டீன் அறிமுகம் செய்த `எதிர் ஈர்ப்பு (antigravity) என்பது மற்ற விசைகளைப் போலன்றி எந்த ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்தும் (source) வராமல் மிகச் சரியாக கால-இடத்தின் கட்டுமானத்திற்குள் கட்டப்படுவதாகும். கால இடத்திற்கு விரிவடையும் உள்ளார்ந்த தன்மை (tendency) உண்டு என்றும் இதுவே பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஈர்ப்பாற்றலையும் துல்லியமாக சமன் செய்கிறது என்றும் எனவே மாறாநிலைப் பேரண்டம் உருவாகிறது என்றும் ஐன்டீன் வாதிட்டார்.

(பார்க்க:பக்கம் 42:43)

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டி லிருந்து இரண்டு முக்கியமான விபரங்களை அறிகிறோம். முதலாவதாக திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பறை சாற்றிக் கொண்டிருக்கும் `பேரண்டத்தின் விரிவாக்கம் எனும் இயற்பாடு (யீலளஉயட உயசநஉவநசளைவஉ) 17-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத்திலேயே கண்டுபிடிக்கும் ஆற்றலை அறிவியல் உலகம் பெற்று விட்டது என்பதாகும். (இதிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அறிவியல் உலகத்திற்கு அறவே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க!) ஆயினும் எந்த ஒரு அறிவியல் மேதையாலும் இருபதாம் நூற்றாண்டு வரை அதை அனுமானிக்க இயலவில்லை.

இரண்டாவதாக இந்நாள் வரை அறிவியல் உலகில் தன்னிகரற்ற அறிவியல் மேதையாகத் திகழ்ந்து கொண்டி ருக்கும் ஐன்டீனின் தன்னிகரற்ற அறிவியல் கண்டு பிடிப்பாம் பொது சார்பியல் தத்துவம் பேரண்டம் மாறாநிலை பண்புடையதில்லை என்றும் அதற்கு மாறாக பேரண்டம் எப்போதும் விரிந்து கொண்டிருக்கும் பண்புடையது என்பதை யும் உட்பொருளாகக் கொண்டிருந்தது என்றும் அவரே உருவாக்கிய கணித சமன்பாடுகளிலிருந்து அவருக்கு தெரிய வந்தது. எனினும் பேரண்டம் மாறாநிலை (static) பண்புடையது என்பதில் அவருக்கு இருந்த பிடிவாதமான நம்பிக்கையின் காரணமாக அவர் உருவாக்கிய கணித சமன்பாடுகளை அவருடைய நம்பிக்கைக்கேற்ப அவரே மாற்றி அமைத்தார் என்றும் இதற்காக `எதிர் ஈர்ப்பு எனும் தவறான ஒரு கருதுகோளை உருவாக்கி மேலும் அதற்காக `பேரண்டத்தின் மாறா குணாங்கம் எனும் ஒன்றை தமது கணித சமன்பாடுகளில் தவறாக அறிமுகப்படுத்தினார் என்பதுமாகும்.

அறிவியல் உலகின் முடிசூடா மன்னர்கள் கூட வழி தவறிய போதும் திருக்குர்ஆனுக்கு மட்டும் வழி தவறுவதே இல்லை! ஏன்? திருக்குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை என்றும் அது இறைவனிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடே என்பதையும் இது நமக்கு அறிவுறுத்தவில்லையா?

இயற்கைக்கு அப்பால்

இப்பேரண்டத்தின் படைப்பு ஒரு படைப்பாளன் இல்லாமல் தான்தோன்றியாக (spontaneous) நடைபெற்ற நிகழ்ச்சி இல்லையென்றும் எல்லையற்ற ஆற்றலும் விரிவாக்க இயலாத நுண்ணறிவும் பெற்றவனே – இறைவனே – அதனை வடிவமைத்தான் என்பதை வன்மையாக நிருபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு உண்மையும் பேரண்டத்தின் விரிவாற்றல் எனும் அதன் இயற்பாடு தன்னகத்தே கொண்டுள்ளது. அதைக் குறித்த விபரங்களைப் பார்ப்போம்.

அறிவியல் மேதை ஹாக்கிங் கூறிய ராக்கெட் உதாரணத்தை மீண்டும் கவனத்தில் கொள்க. அந்த உதாரணத்தில் ராக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்க வேண்டிய வேகம் எக்காரணத்தைக் கொண்டும் வினாடிக்கு ஏழு மைல் என்பதில் சற்றே குறைந்தாலும் கூட ராக்கெட் புவிஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்பட்டு அது மீண்டும் பூமியில் வீழ்ந்து விடும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இப்படி ஒரு திட்டமிட்ட வேகம் ராக்கெட் பெற வேண்டுமானால் எந்த ராக்கெட்டும் தான்தோன்றித்தனமாக அதைப் பெற்று விடுவதில்லை. பல்லாயிரம் வருடங்களில் நாம் பெற்ற படிப்படியான அறிவியல் அறிவே புவிஈர்ப்பு விசையையும் கண்டுபிடித்து அதைத் தாண்டிச் செல்வதற்குரிய வேகத்தையும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்ததோடன்றி அந்த வேகத்தை அடைவதற்குரிய ஆற்றலையும் கண்டுபிடித்து அந்த ராக்கெட்டை வடிவமைப்பு செய்தது என்பதை நாம் அறிவோம். பேரண்டத்தோடு ஒப்பிடும் போது கடுகினும் சிற்றளவுள்ள இந்த பூமியின் ஈர்ப்பு விசையை மீறுவதற்கே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தால் பேரண்டம் படைக்கப்படும் முன்னரே அதன் ஈர்ப்பு விசையை முன்கூட்டிக் கணித்து அதற்கேற்ற ஆற்றலுடன் பெருவெடிப்பை நிகழ்த்தியது யார்? இயற்கையா?

இந்த இடத்தில் `இயற்கை என்ற வாதம் பலனளிக்காது. ஏனென்றால் மற்ற இடங்களில் இந்த வாதத்திலுள்ள பேதமை இலைமறைவாக இருப்பதைப் போல் இந்த இடத்தில் மறைந்திருப்பதில்லை. இங்கு வெளிப்படையாகவே தென்பட்டு விடும்.

இயற்கையும் சோதிடமும்

இராக்கெட் உதாரணத்தில் இராக்கெட்டின் தொடக்க வேகம் வினாடிக்கு ஏழு மைலுக்கு மேல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டதையும் அதை விடக் குறைவாக தொடக்க வேகம் அமைந்து விட்டால் இராக்கெட் திரும்பவும் பூமியில் விழுந்து விடும் எனக் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இதைப் போன்று பெருவெடிப்பின் ஆற்றலும் இவ்வளவு காலமாக வீழ்ந்து விடாமல் இப்போதும் விரிவாகிக் கொண்டிருக்க வேண்டுமானால் பெருவெடிப்பின் தொடக்க வேகமும் பெருவெடிப்புக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பெரு வெடிப்பே படைப்பின் தொடக்கம் என்பதும் அதற்கு முன் எதுவுமே இல்லை என்பதுமே பெரு வெடிப்புக் கோட்பாடாக இருக்கும் போது பெருவெடிப்பு தொடங்குவதற்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டிய அதனுடைய தொடக்க வேகத்தை நிர்ணயித்தது யார்?

இயற்கையா?

பெருவெடிப்புக்கு முன்னர் ஏது இயற்கை?

இயற்கை என்றால் என்ன என்பதை இந்த நூலின் மற்றொரு தலைப்பில் ஆய்வு செய்துள்ளோம். ஆனால் இயற்கை என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே பொருள் இல்லையேல் இயற்கையும் இல்லை. பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை யென்பதால் அந்த நேரத்தில் இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? இயற்கையின் இடத்தில் இறைவனையே அன்றி வேறொன்றையும் வேறொருவரையும் காணமுடியாது என்பதையே இது காட்டுகிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பெருவெடிப்புக்கு முன்பே இயற்கை இருந்தது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அந்த இயற்கையால் பேரண்டத்தின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்திருக்க இயலாது. ஏனெனில் இயற்கைக்கு சோதிடம் கிடையாது. புலனறிவுக்கு உட்பட்டதை வைத்தே இயற்கை தீர்மானங்களை எடுக்க முடியும். பூமியின் ஈர்ப்பு விசையை அதன் இயற்கை என்று கூறினால் பூமி இருப்பதால் தாம் அதில் அதன் இயற்கையாம் ஈர்ப்பு விசை தோன்றியது. இல்லாத பூமியில் இயற்கை தோன்றாது. இயற்கையின் இயற்கையே இப்படியென்றால் பெருவெடிப்பிற்கு முன் இல்லாத பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலை இயற்கையால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?பெருவெடிப்பிலிருந்து தோன்றப் போகும் இம்மாபெரும் பேரண்டத்தின் பொருண்மையைக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டுமானால் பேரண்டம் தோன்றிய பிறகே அதைச் செய்ய முடியும்.

பேரண்டம் தோன்ற வேண்டுமானால் பெருவெடிப்பு நிகழ வேண்டும். பெருவெடிப்பு நிகழ வேண்டுமானால் அதனுடைய விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருவெடிப்பின் விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட வேண்டுமானால் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றப் போகும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் என்ன என்பது மிகத் துல்லியமாக பெரு வெடிப்புக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும். இயற்கையால் அது சாத்தியமா?

எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒன்றை அதற்கான அறி குறிகள் எதுவுமில்லாமல் அறிதல் என்பது காலவேற்றுமை களால் பாதிக்கப்படாத; முக்காலமும் உணர்ந்த; மேலும் சரியாகக் கூறினால் ஒரே நேரத்தில் முக்காலங்களிலும் நிலை கொள்கின்ற சிறப்பியல்பை தனக்குள் பெற்றுக் கொண்ட ஒருவனாலன்றி வேறொருவராலும் இயலாத காரியமாகும். எனவே அப்படிப்பட்ட இயல்பைக் கொண்டவன் யாரோ அவனையே நாம் இறைவன் என்று அழைக்கிறோம்.

ஒருகால் கடவுளை மறுப்பதற்காக இயற்கையாலும் இப்படியெல்லாம் முடியும் என்று வாதிடும் அளவிற்கு இந்த விஷயத்தில் யாரேனும் பேதமை காட்ட முயன்றால் கடவுளைப் பெயர் மாற்றம் செய்து இயற்கை எனக் கூறுவதற்கு ஒப்பானதாகி விடுமே அன்றி படைப்பாளனின் இடத்திலிருந்து அவனை ஒரு போதும் அகற்றிப் பார்க்க முடியாது.

பெருவெடிப்பு ஒரு இயற்கை நிகழ்ச்சி எனக் கூறுவது கடுகளவும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத வாதமாகும். ஏனெனில் நிகழ்ச்சிகள் என்பது பொருட்களின் செயல் களாகும். எனவே பொருட்கள் இல்லையேல் செயல்களும் இருக்க முடியாது என்பது மிக மிக எளிய செய்தியாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு மிகச் சாதாரண அறிவே போதுமானதாகும்.

இருப்பினும் நாம் இயற்கை வாதிகளுக்கு சாதகமாக பெருவெடிப்பு இயற்கையாகவே தோன்றியது என்பதையும் அதிலிருந்து தப்பித்தவறி ஒரு பேரண்டம் தோன்றி விட்டதாகவும் கற்பனை செய்வோம். இவ்வாறு ஒரு பேரண்டம் தோன்றினால் கூட அந்த வேகத்திலேயே அப்பேரண்டம் தோன்றிய புள்ளியிலேயே வீழ்ந்து விடும்படி அப்பேரண்டத்தின் சொந்த ஈர்ப்பாற்றலே அதை நிர்பந்தம் செய்யும். அதற்கு மாறாக நாம் வாழ்வதைப் போன்ற சீரானதும் (uniform) இவ்வளவு வழவழப்பானதுமான (smooth) பேரண்டம் ஒரு போதும் உருவாக முடியாது.

அப்படிப்பட்ட ஒரு பேரண்டம் உருவாகுவதற்கு நிகழ் தகவு (probability) கூட இல்லை என்கிறார் இன்றைய உலகிள் தலைசிறந்த விஞ்ஞானியான ஹாக்கிங் அவர்கள். எனவே நாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற பேரண்டம் உருவாக வேண்டு மென்றால் பெருவெடிப்பின் ஆரம்ப வேகம் மிக மிகத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

பேரண்டத்தின் விரிவாக்கத்தைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட செய்திகள் யாவும் அதை இறை மறுப்புக் கோட் பாட்டின் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலாகவே காட்சியளிக்கச் செய்கிறது. பேரண்டத்தின் படைப்பிற்கு கடவுளின் தேவையை வலியுறுத்திக் காட்டுவதற்காக பேரண்ட விரிவாக்கத்தின் தொடக்க வேகத்திற்கு நாம் அளவு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சில வாசகர்களாவது எண்ணிவிடக் கூடும். எனவே அதைக் குறித்த அறிவியலாளர் களின் கண்டுபிடிப்புகள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

திடுக்குறச் செய்யும் புள்ளி விபரங்கள்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில பாராக்களைப் படிக்கும் போது பேரண்டப்படைப்புக்கு மிக மிக இன்றியமை யாததாய் விளங்கும் அதன் இயற்பாடாம் விரிவாற்றலின் தீர்மானமான விகிதத்தின் (critical rate of the expansion) தேர்வை நாம் மிகைப்படுத்திக் காட்டி கடவுளின் தேவையை வலியுறுத்துவதாக சிலர் எண்ணக் கூடும். ஆனால் அந்த எண்ணம் தவறானது என்பதை ஹாக்கிங் அவர்களின் கீழ்க்காணும் கூற்று அவர்களைத் தெளிவாக்கும். அவர் கூறுகிறார்: “பெருவெடிப்பு நிகழ்ந்து ஒரு வினாடிக்குப் பிறகு விரிவாற்றல் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் பாகங்களில் ஒருபாகம் அளவு சிறியதாக இருந்திருந்தால் கூட பேரண்டம் இன்றைய நிலையை அடையாமல் குலைந்து போயிருக்கும்!

(பக்கம்:128)

பேரண்டத்தின் விரிவாற்றலின் விகிதம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விதம் நுண்மையிலும் நுண்மை என எவ்வளவு நுண்மைகளைக் கூறினாலும் தகும் என்பதையே ஹாக்கிங் அவர்களின் கூற்று புலப்படுத்துகிறது. (நூறாயிரம் மில்லியன் மில்லியன் என்பது ஒன்றுக்குப் பின் பதினேழு சைபர்கள் கொண்ட எண் ஆகும்!) இந்த அதி அற்புதமான தேர்வு பேரண்டம் இன்றுள்ள நிலையை அடையச் செய்ய ஆரம்ப கட்டத்தில் அதன் பணியை எவ்வளவு தூரம் துரிதப்படுத்தியது என்பதை மசாசூசெத் தொழிற்கலை விஞ்ஞான கழகத்தின் (massachusetts institute of technology ) விஞ்ஞானி `அலன் குத் (Alan Guth) அவர்களை மேற்கோள் காட்டி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :

“ஒரு வினாடியின் மிகச் சொற்பமான நேரத்திலேயே (tiny fraction of a second) பேரண்டத்தின் ஆரம் (radius) ஒரு மில்லியன், மில்லியன், மில்லியன், மில்லியன்,மில்லியன், (ஒன்றுக்கு பின்னால் முப்பது சைபர்கள் கொண்ட எண்) மடங்கு பெரிதாகி விட்டது!!

(பக்கம் : 134)

ஒரே ஒரு வினாடியின் சொற்பமான நேரத்திற்குள் இவ்வளவு பிரமாண்டமான விரிவாக்கமா? நமது அன்றாட வாழ்வியல் அறிவுக்கு முற்றிலுமாக முரண்பட்டு அணு அளவு கூட நம்ப முடியாததாய் காட்சியளிக்கும் மேற்கண்ட உண்மையான புள்ளி விபரங்களையெல்லாம் நம்ப வேண்டுமாயின் அந்த நபர் எல்லையற்ற ஆற்றலைப் பெற்ற ஒரு கடவுளின் உள்ளமையில் (existance) நம்பிக்கை கொண்டிருந்தாலே அன்றி அந்த நபரின் நம்பிக்கை அறிவார்ந்த நம்பிக்கையாக இருக்க இயலாது.

ஒரு வினாடியின் சொற்பமான நேரத்திற்குள் ஒன்றுக்குப் பின்னால் முப்பது சைபர்களைக் கொண்ட எண்ணின் மதிப்புக்கு நிகராக அப்போதிருந்த பேரண்டம் விரிவுபடுத்தப் (பேரண்டம் அப்போது ஒரு மைக்ரோன் – ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு – மட்டுமே இருந்திருந்தால் கூட அந்த சொற்ப நேரத்திலேயே 1,000,000,000,000,000,000,000 கிலோ மீட்டர் துரத்திற்கு அதன் ஆரம் விரிவடைந்திருக்கும்! இவ்வளவும் பெருவெடிப்பு நிகழ்ந்த வினாடியின் சொற்ப நேரத்திற்குள்)பட்டது எனில் ஹாக்கிங் கூற்றுக்கு இணங்க இப்பேரண்டம் உருவாகத் தொடங்கி இரண்டாயிரம் கோடி வருடங்கள் ஆகி இருப்பின் அது இப்போது எவ்வளவு கோடானு கோடி கோடி கோடி………. கிலோ மீட்டர் அளவுக்கு விரிவடைந்திருக்கும்? இப்புள்ளி விபரங்களைப் பார்க்கை யில் ஒருவருக்கு நூறு தலைகள் இருப்பின் அந்த நூறு தலைகளும் சுற்றும்! இறையாற்றலின் மாட்சிமையை என்னென்றுரைப்பது!

அந்த சொற்ப நேரத்திலேயே இம்மாபெரும் விரி வாற்றலை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இப்போதும் இப்பேரண்டம் சீர்குலையாமல் நிலைபெற்றுள்ளது. இதை இறைவனே செய்தான் எனில் எந்த நோக்கத்திற்காக இவ்வளவு அரும் பணியை அவன் செய்தான்? அவனுடைய எந்தத் தேவையை பேரண்டம் நிறைவு செய்கிறது? இப்படிப்பட்ட கேள்விகளை பல தரப்பட்டவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இக்கேள்விகளை இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் நாம் பரிசீலனை செய்கிறோம். ஆயினும் மிக முக்கியமான ஒரு காரணத்தை இங்கு குறிப்பிடுவது சிறப்பாகும்.

இறைவனுடைய எந்தத் தேவைக்காகவும் இப்பேரண்டம் படைக்கப்படவில்லை. இறைவனுடைய படைப்பினங்களில் அவன் தேவைற்றவன் என்பதைத் திரும்பத் திரும்ப திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. (பார்க்க : 22:64, 3:97 etc) இருப்பினும் இப்பேரண்டம் இவ்வளவு காலம் நிலை நிற்கும் விதத்தில் படைக்கப்படவில்லையாயின் மானிட இனம் இங்கு தோன்றி இருக்க இயலாது என்பதையே அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. பகுத்தறிவுள்ள உயிரினம் பேரண்டத்தில் எங்கேனும் தோன்றுவதற்குரிய காலகட்டம் இதற்கு முன் இப்பேரண்டத்தில் இருந்ததில்லை என்பதை யும் ஹாக்கிங் அவர்களின் நூல் குறிப்பிடுகிறது.

(பார்க்க : பக்கம் 130-133)

நவீன அறிவியலில் இறைவனின் தேவை

முன் பத்திகளில் மிக முக்கியமான மூன்று அறிவியல் உண்மைகளை நாம் கண்டோம். முதலாவதாக பேரண்டம் தோற்றம் எடுத்த ஆரம்ப கட்டத்தில் வழங்கப்பட்ட மிகக் கணிசமான, நுண்மையான மிகக் கவனமாகத் தீர்மானிக்கப் பட்ட துல்லியமான விரிவாக்க வேகமே இப்பேரண்டத்தை இப்போதும் நிலை நிறுத்தியுள்ளது என்பதாகும். இரண்டாவ தாக இப்படிப்பட்ட விதத்தில் இப்பேரண்டம் உருவாகி இருக்க வேண்டுமாயின் அதை வடிவமைத்து இயக்கும் அபாரமான ஆற்றல்களைப் பெற்ற இறைவன் இல்லாமல் நடைபெற்றிருக்க முடியாது என்பதாகும்.

மூன்றாவதாக இப்பேரண்டம் இந்த விதத்தில் தோன்றியதன் காரணமாகவே மானிடர்களாகிய நம்மால் இதில் தோன்ற முடிந்தது என்பது மாகும். இப்போது நாம் வந்தடைந்த இந்த முடிவுகளைக் குறித்து ஹாக்கிங் அவர்களின் கருத்து என்னவென்று பார்ப்போம். அவர் கூறுகிறார்:

“It would be very difficult to explain why the universe universe should have begun in just this way, except as the act of a God who intented to create beings like us”  (Page 134)

(நம்மைப் போன்ற உயிரினங்களைப் படைக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள ஒரு கடவுளின் செயலைத் தவிர பேரண்டம் ஏன் இந்த விதத்தில் துவங்க வேண்டும் என விளக்குவது மிகக் கடினமாகும்)

நமது ஆய்வில் கண்ட உண்மைகளை எவ்வளவு பட்ட வர்த்தனமாக வெளியிடுகிறார் அறிவியல் மேதை ஹாக்கிங்! தங்களை அறிவியல் பற்றுள்ளவர்களாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்களில் சிலர் தோற்றமும் மறைவும் இயற்கையே அன்றி கடவுள் இல்லை என கூறிக் கொண்டிருக்கும் போது அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட வார்த்தை கள் எவ்வளவு அற்புதமாக இறைவனின் உள்ளமை ஓர் அறிவியல் தேவை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது!

நியூட்டன் மற்றும் ஐன்டீன் உள்ளிட்ட அறிவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே ஹாக்கிங் அவர்களுக்கும் கடவுள் விஷயத்தில் சற்று நம்பிக்கை இருந்து விட்டால் அதில் வியப்பதற்கெதுவும் இல்லை எனக் கூறி ஹாக்கிங் அவர்களின் கூற்றை அறிவியல் அன்பர்களால் ஒருகாலும் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் முன்னர் கூறப்பட்ட அறிவியலாளர் களில் யாரும் தங்களின் அறிவியல் ஆய்வுகள் கடவுளின் தேவையை வலியுறுத்துவதாகக் கூறியதில்லை.

ஆனால் இதற்கு மாறாக ஹாக்கிங் அவர்களின் கூற்று கடவுளின் தேவை அவருடைய வெறும் நம்பிக்கையைச் சார்ந்ததன்று. அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததில்லை என்பது உலகறிந்த விஷயமாகும். ஆனால் பேரண்டத்தின் அறிவியல் ஆய்வுகளில் அவர் கண்ட அறிவியல் உண்மைகளே ஒரு கடவுளின் பணி அதில் அவசியம் என்பதை வலியுறுத்துவ தாக அவர் கூறுகிறார். எனவே இந்த நவீன அறிவியல் யுகத்தில் கடவுளை ஏற்றல் என்பதும், கடவுளின் தேவையும் ஓர் அறிவியல் உண்மையாகும்.

ஹாக்கிங் முழுமையாக இறைவனை ஏற்றுக் கொண்டதாக அவரது நூலிலிருந்து விளங்க இயலாது. அதற்குச் சில கேள்விகள் அவருக்குத் தடையாக இருப்பதாகத் தோன்றுகிறது. அக்கேள்விகளை நாம் இந்நூலின் இறுதியில் பரிசீலனை செய்துள்ளோம்.

இதுவரை நாம் இவ்விரு அத்தியாயங்களில் விவாதித்த விபரங்களை ஆய்வுக் கண்ணோடு பார்வையிடும் ஒருவருக்கு அவர் இதற்கு முன் திருக்குர்ஆனை வெறும் மேலோட்டமாகப் பார்த்தவராக இருந்திருந்தாலும் கூட இப்போது திருக்குர்ஆனின் ஆழிய அறிவியல் ஞானத்தின் தோற்றுவாய் இறைவனே அன்றி வேறில்லை என ஐயமறக் கண்டுணரலாம் என்பது திண்ணம்.