Tamil Bayan Points

3) பல வகைச் சொற்கள்

நூல்கள்: சந்திக்கும் வேளையில்

Last Updated on January 2, 2020 by

பல வகைச் சொற்கள்

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸலாமுன் அலை(க்)கும்

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதற்கு பதிலாக ஸலாமுன் அலை(க்)கும் என்றும் முகமன் கூறலாம்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:6:54)

அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவர் மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ்2வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே (இது வரை) நுழையாமல் உள்ளனர்.

(திருக்குர்ஆன்:7:46)

நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).

(திருக்குர்ஆன்:13:24)

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:16:32)

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம் எனவும் கூறுகின்றனர்.

(திருக்குர்ஆன்:28:55)

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்! என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:39:73)

ஸலாம்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் என்று மட்டும் கூறினால் அதுவும் அங்கீகரிக்கப்பட்டது தான்.

அல்லாஹ்வே! நீ தூயவன் என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.

(திருக்குர்ஆன்:10:10)

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.

(திருக்குர்ஆன்:11:69)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாக இருப்பார்கள். ஸலாம் என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.

(திருக்குர்ஆன்:14:23)

அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம் என்றார்.

(திருக்குர்ஆன்:15:52)

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

(திருக்குர்ஆன்:33:44)

அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

(திருக்குர்ஆன்:43:89)

அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்!

(திருக்குர்ஆன்:51:25)

ஸலாமுன் அலை(க்)க

ஆணுக்கு முகமன் கூறுவதாக இருந்தால் ஸலாமுன் அலை(க்)க என்றும் பெண்ணுக்கு முகமன் கூறுவதாக இருந்தால் ஸலாமுன் அலை(க்)கி என்றும் கூறலாம்.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான் என்று (இப்றாஹீம்) கூறினார்.

(திருக்குர்ஆன்:19:47)

இப்றாஹீம் நபியவர்கள் தமது தந்தைக்கு ஸலாம் கூறிய போது ஸலாமுன் அலைக்க எனக் கூறியதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.

அஸ்ஸலாமு அலை(க்)க

அஸ்ஸலாமு அலைக்க என்றும் சலாம் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த தஷஹ்ஹுத் என்ற அத்தஹிய்யாதில் அஸ்ஸலாமு அலைக்க என்று கூறுமாறு கற்றுத் தந்துள்ளார்கள்.

பார்க்க புகாரி 831, 835, 1202, 6230, 6265, 7381,

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து வானவர்களுக்கு ஸலாம் கூறச் சொன்னான். அப்போது ஆதம் (அலை) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று வானவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு வானவர்கள் பதில் சொன்ன போது அஸ்ஸலாமு அலைக்க என்று கூறினார்கள் என்ற செய்தி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பார்க்க : புகாரி 3326, 6227

அலை(க்)க என்பது ஆண் பால் சொல்லாகும். பெண்ணுக்கு ஸலாம் கூறும் போது அலை(க்)கி என்று கூறிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் (ரலி) ஆகியோர் ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு அலை(க்)கி என்று இதனடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

பார்க்க : புகாரி 6075

ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை

அலை(க்)கும் (உங்கள் மீது) என்பது பன்மையாக இருந்தாலும் ஒருவருக்கு ஸலாம் கூறும் போது நாம் இதைப் பயன்படுத்தி வருகிறோம். இப்படிப் பயன்படுத்தாமல் ஒருமை, இருமை (அரபியில் இருமை என்று ஒரு வகை உண்டு) பன்மைக்கேற்றவாறு சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்த போது நீ சென்று அங்கே அமர்ந்துள்ள வானவர்களுக்கு ஸலாம் கூறு! அவர்கள் என்ன மறுமொழி கூறுகிறார்கள் என்பதைச் செவிமடு. ஏனெனில் அது உமக்கும் உமது வழித் தோன்றலுக்கும் உரிய முகமன் ஆகும் என்று அல்லாஹ் கூறினான். ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களுக்கு) அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று (பன்மையாக) கூறினார். வானவர்கள் பதிலளிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி என்று கூறினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6227, 3326

ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

ஒருவர் ஸலாம் கூறினால் அதற்கு மற்றவர் மறுமொழி கூறுவது கட்டாயக் கடமையாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து

1) ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

2) நோயாளியை நலம் விசாரித்தல்

3) ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) பின் தொடர்ந்து செல்லுதல்

4) விருந்தை ஏற்றுக் கொள்ளுதல்

5) தும்மல் போட்டவருக்காகப் பிரார்த்தனை செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1240

சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்

முகமன் கூறுபவர் பயன்படுத்தும் சொற்களை விடச் சிறந்த முறையில் அல்லது அதற்குச் சமமான முறையில் மறுமொழி கூற வேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:4:86)

ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுக்கு ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று மட்டும் கூறினார்கள். வானவர்கள் மறுமொழி கூறிய போது வரஹ்மதுல்லாஹி என்று மேலதிகமாகக் கூறினார்கள் என்று முன்னரே நாம் குறிப்பிட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.

இப்றாஹீம் நபியவர்களுக்கு வானவர்கள் ஸலாம் கூறிய போது இப்றாஹீம் நபியும் ஸலாம் என்று மறுமொழி கூறியதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் இதற்கான ஆழ்ரமாகும்.

ஸலாம் சொல்லி அனுப்புதல்

ஒருவரை நேரடியாக நாம் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது போல் நம் முன்னே இல்லாதவருக்காக இன்னொருவரிடம் ஸலாம் கூறி அனுப்பலாம். யாரிடம் ஸலாம் சொல்லி அனுப்பப்படுகிறதோ அவர் சம்பந்தப்பட்டவருக்கு இதைத் தெரிவிக்க வேண்டும். யாருக்கு ஸலாம் கூறி அனுப்பபட்டதோ அவரும் மறுமொழி கூற வேண்டும். அதற்காக ஆதாரங்கள் வருமாறு.

என் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் உடனே வரவும் என்ற செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார். மேலும் ஸலாமும் சொல்லி அனுப்பினார்.

நூல் : புகாரி 1284, 5655, 6655

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களின் குடும்பத்தினர் அஞ்சிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிழலில் பகல் தூக்கம் தூங்கியதைக் கண்ட அபூகதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஸலாமையும் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் (அருளையும்) சொல்லி அனுப்பியுள்ளனர் எனக் கூறினார் (ஹதீஸ் சுருக்கம்)

நூல் : புகாரி 1821, 1822

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனைவியை மணமுடித்து வீட்டுக்குள் சென்றனர். எனது தயார் உம்மு சுலைம் இனிப்பான உணவைத் தயார் செய்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். என் தாயார் உங்களுக்கு ஸலாம் கூறினார் என்று தெரிவித்தேன்………. என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

நூல் : நஸயீ 2572

ஆயிஷாவே இதோ ஜிப்ரீல் உனக்கு ஸலாம் கூறுகிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹ என்று மறுமொழி கூறினார்கள். (வஅலைஹி என்றால் அவர் மீது என்று பொருள்)

நூல் : புகாரி 3217, 3768, 6201, 6249, 6253

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.

இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

(திருக்குர்ஆன்:60:4)

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான் என்று (இப்ராஹீம்) கூறினார்.

(திருக்குர்ஆன்:19:47)

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் . இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.

ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.

மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ஸலாம் எனக் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:25:63)

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம் எனவும் கூறுகின்றனர்.

(திருக்குர்ஆன்:28:55)

என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர் என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்

(திருக்குர்ஆன்:43:88,89.)

மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6258

வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927

யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.