Tamil Bayan Points

3) கிறித்தவக் கொள்கையை உருவாக்கியவர் யார்?

நூல்கள்: இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

Last Updated on October 30, 2022 by

3) கிறித்தவக் கொள்கையை உருவாக்கியவர் யார்?

கிறித்தவ மதத்தின் இந்தக் கோட்பாடு இயேசுவால் உருவாக்கப்பட்டதா?

பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு மாற்கு, லூக்கா யோவான் ஆகிய நான்கு சுவிஷேசங்களும், பவுல் என்பவர் பலருக்கு எழுதிய கடிதங்களும் இடம் பெற்றுள்ளன.

இயேசுவின் சீடர்கள் தாம் கண்ணாரக் கண்டதைத் தான் சுவிஷேசங்களாக எழுதினார்கள் என்று அப்பாவி கிறித்தவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். பைபிளில் உள்ள நான்கு சுவிஷேசங்களும் 23 நிருபங்களும் இயேசுவின் சீடர்கள் எழுதியவை அல்ல என்பதை முதலில் கிறித்தவ அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சுவிசேஷம் எழுதிய நால்வர் யார்? பவுல் என்பவர் யார் என்பதை முதலில் கிறித்தவ நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு சீடர்கள்

இயேசுவுக்குப் பன்னிரண்டு சீடர்கள் இருந்தனர். அவர்களின் பெயர்களைப் பைபிள் பின்வருமாறு பட்டியல் இடுகிறது.

அப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும் சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் 1பேதுரு என்னப்பட்ட சீமோன், 2அவன் சகோதரன் அந்திரேயா, 3செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, 4அவன் சகோதரன் யோவான், 5பிலிப்பு, 6பற்தொலொமேயு, 7தோமா 8ஆயக்காரனாகிய மத்தேயு, 9அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, 10ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 11கானானியனாகிய சீமோன், 12அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.

மத்தேயு 10:1-4

அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும் வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களா யிருக்கவும் அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில் சீமோன் இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.

செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான் இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அரத்தங்கொள்ளும் பொவனெரகேஸ் என்கிற பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்போயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

மாற்கு 3:14-19

மேற்கண்ட பன்னிரண்டு பேர் தான் இயேசுவின் சீடர்கள் என்று மத்தேயுவும் மாற்குவும் கூறுகின்றனர்.

மாற்கு சுவிஷேம்

பைபிள் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களில் மத்தேயு சுவிஷேசம் முதலாவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் எழுதப்பட்ட வரிசைப்படி பார்த்தால் மாற்கு தான் முதலில் எழுதப்பட்டதாகும். இது குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

மாற்கு நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இயேசுவின் திருமுழுக்கிலிருந்து (ஞானஸ்நானம்) நூல் ஆரம்பிக்கிறது. இயேசுவின் வாழ்வின் கடைசி வாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.

கி.பி.60-80 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. நான்கு நற்செய்தி நூல்களில் முதலவதாக எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. மொத்தம் 16 அதிகாரங்களில் 678 வசனங்களைக் கொண்டுள்ளது.

மாற்கு புனித இராயப்பரின் (பேதுரு எனும் பீட்டரின்) சீடராவார். இராயப்பர் இயேசு பற்றிக் கூறியவற்றையும் வேறு மூலங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களையும் தொகுத்து, மாற்கு நற்செய்தி எழுதினாரென்று கருதப்படுகிறது. மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

மாற்கு இந்நூலை எழுதும் போது உரோமயில் இருந்ததாக முன்னர் கருதப்பட்டாலும் அவர் சிரியாவில் இருந்தே இந்நூலை எழுதினார் என்ற கருத்து இப்போது மேலோங்கியுள்ளது.

முதன் முதலில் சுவிஷேசம் எழுதிய மாற்கு மேற்கண்ட பன்னிரண்டு சீடர்களில் இடம் பெறவில்லை. மாறாக இயேசுவின் சீடராகிய பேதுரு எனும் பீட்டருக்கு இவர் சீடராக இருந்தார். இவர் எழுதிய அனைத்தும் இவர் கண்ணால் பார்த்து எழுதியதல்ல.

பீட்டரிடம் கேட்டவைகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிடவில்லை. இயேசுவைப் பார்த்திராத இவர், செவி வழியாகப் பேசிக் கொள்ளப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே தனது சுவிஷேசத்தை எழுதியுள்ளார் என்பது உறுதியாகிறது.

மத்தேயு சுவிஷேம்

மத்தேயு என்ற பெயர் சீடர்களின் பட்டியலில் இருந்தாலும் சுவிசேஷம் எழுதியது அந்த மத்தேயு அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் சீடராகிய மத்தேயுவாக இருந்தால் மாற்குவை முந்திக் கொண்டு இவர் சுவிசேஷம் எழுதி இருப்பார்.

இயேசுவின் சீடருக்குச் சீடரான மாற்குவிற்குப் பிறகு தான் மத்தேயு எழுதப்பட்டது என்பதால் இது இயேசுவின் சீடராகிய மத்தேயு எழுதியது அல்ல. இவர் வேறொரு மத்தேயுவாக இருக்கலாம்; அல்லது வேறு யாரோ எழுதி மத்தேயு பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது தான் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இது குறித்து விக்கி பீடியா இவ்வாறு கூறுகிறது.

மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது.

இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும்.

மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

லூக்கா சுவிசேஷம்

மூன்றாவது சுவிஷேசக்காரராகிய லூக்கா என்பவரும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அல்ல. மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதியதாக இவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால் ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

லூக்கா 1:1-4

மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதுவதாக எடுத்த எடுப்பிலேயே லூக்கா ஒப்புக் கொள்கிறார்.

இவர் மிகவும் பிந்தியவராவார். கிறித்தவத்தின் சிலுவைக் கோட்பாட்டை உருவாக்கிய பவுலின் சீடர்களில் லூக்காவும் ஒருவர்.

யோவான் சுவிஷேம்

இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இயெசுவின் நேரடிச் சீடரான யோவான் இதை எழுதி இருந்தால் இது தான் முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது எழுதப்பட்ட காலம் கிபி 90 முதல் 120 க்குள் இருக்க வேண்டும் என்பது முன்னோடி ஆய்வாளரின் கருத்தாகும்.

இயேசுவின் சீடராக இருந்த யோவானுக்கு இயேசு சிலுவையில் அறையப்படும் போது சுமார் 25 வயது என்று வைத்துக் கொண்டால் கூட கிபி 90ல் 115 வயது ஆகி இருக்கும். 115 வயது வரை மனிதனின் சராசரி வயது இல்லை. வேறு சிலர் கூறுவது போல் கிபி 65 முதல் 85 க்குள் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் அப்போதும் யோவான் தொண்ணூறு வயது முதல் 119 வயதில் இதை எழுதியதாக ஆகும்.

இதுவும் மனிதர்களின் சராசரி வயதுக்கு அதிகமாகும். எனவே இதை யோவான் என்ற சீடர் எழுதி இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இதை யோவான் என்ற பெயர் கொண்ட வேரொருவர் தான் எழுதி இருக்கிறார்.

விக்கி பீடியா இது பற்றி பின்வருமாறு கூறுகிறது.

இந்நற்செய்தியில் இயேசுவின் பிரியமான சீடரால் எழுதப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் பிரியமான சீடர் என அழைக்கப்பட்டவர் அப்போஸ்தலரான யோவான் என்பது சம்பிரதாயமான வழக்கமாகும். யோவான் நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்திலுள்ள நான்கு நற்செய்திகளில் கடைசியாக எழுதப்பட்டதாகும்.

யோவான் நற்செய்தியானது வேறு நபர்களால் எழுதப்பட்டதென பல ஆய்வாளர் கூறியிருக்கின்றனர். எனினும் றேமன் கே. ஜுசினோ (தஹம்ர்ய் ஃ. ஓன்ள்ண்ய்ர்) என்பவரால் 1998 இல் மொழியப்பட்ட தத்துவம் மிகவும் மிகப் பிரசித்தமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். இவர் யோவான் நற்செய்தி மர்தலேன் மரியாளால் எழுதப்பட்டது என்ற வாதத்தை முன் வைத்தார்.

இயேசுவால் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரஸ் இந்நூலை எழுதினார் என்பதுவும் இன்னுமொரு வாதமாகும்.

இது கி.பி. 65-85 இடையான காலப் பகுதியில் எழுதப்பட்டதாக மிதவாத ஆய்வாளரின் கருத்தாகும். எனினும் இது கி.பி. 90-120 இடயிலேயே எழுதப்பட்டது என்பதே முன்னோடி ஆய்வளரின் கருத்தாகும்.

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவுடன் இருந்தவர்கள் அல்லர். தாம் நேரடியாகக் கண்டதன் அடிப்படையில் சுவிஷேசங்களை எழுதியவர்களும் அல்லர். மாறாக மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதியவர்கள் தான் என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். கேள்விப்பட்டு எழுதியவைகளில் சரியான தகவல்களுடன் தவறான தகவல்களும் கலந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

இதனால் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவது பற்றி நால்வரும் பல விஷயங்களில் முரண்பட்டு அறிவிக்கின்றனர். இது பின்னர் விரிவாக விளக்கப்படும்.

ஆனால் இவர்கள் எழுதிய சுவிஷேசங்களில் கூட கிறித்தவர்களின் இன்றைய கொள்கை காணப்படவில்லை.

ஆதாம் பாவம் செய்ததால் மனிதர்கள் அனைவரும் பாவிகளாகப் பிறக்கிறார்கள் என்றோ, அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக இயேசு தன்னுயிரைப் பலி கொடுத்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார்கள் என்றோ இயேசு கூறியதாக இந்த நான்கு சுவிஷேசங்களில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை.